பட மூலாதாரம், Getty Images
ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வதன் நோக்கமே, அந்த இடத்தை நன்றாக சுற்றிப் பார்க்க வேண்டும், புகைப்படங்கள் எடுக்க வேண்டும், அந்த இடத்தின் சுவையான, பிரபலமான உணவுகளை உண்ண வேண்டும், நல்ல ஞாபகங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே.
ஆனால், நன்றாக தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?
எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று, முதல் நாள் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை என சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, அன்று இரவு ஒரு விடுதியில் அறையெடுத்து தங்கினோம்.
அடுத்தநாள் அதிகாலை, உலகை மறந்து தூங்கிக்கொண்டிருந்த எனது முதுகில் பலமாக ஒரு அடி விழுந்தது.
“சுற்றிப்பார்க்க வந்துவிட்டு என்ன தூக்கம்? தூங்கவா கன்னியாகுமரி வரை வந்தோம். எழுந்திரு, சூரிய உதயம் பார்க்க வேண்டும்” என்று அப்பா கத்திக்கொண்டிருந்தார்.
அவசரமாக எழுந்து, கிளம்பிச் சென்றபோதும் சூரிய உதயத்தைக் காண முடியவில்லை. அன்று முழுவதும் அப்பா மீண்டும் மீண்டும் சொல்லியது ஒரே வரியைத் தான், “தூங்கவா நாம் சுற்றுலா வந்தோம்?”.
இப்போது அவரிடம், நன்றாக தூங்குவதற்காகவே ஒரு இடத்திற்கு பயணிக்கப் போகிறேன் என்று நான் கூறினால், மீண்டும் ஒருமுறை முதுகில் அடி விழ வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஸ்லீப் டூரிஸம் என்றால் என்ன?
வித்தியாசமான இடங்களைப் பார்க்க வேண்டும், சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக அல்லாமல், நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக செல்லும் சுற்றுலா அல்லது பயணமே ஸ்லீப் டூரிஸம் என விவரிக்கப்படுகிறது.
“எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், ஒரு நல்ல தூக்கத்திற்காக ஏங்கியிருக்கிறேன். பள்ளி காலம், கல்லூரி நாட்கள், அதன் பிறகு வேலை என வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, மெய் மறந்து தூங்கிய நாட்கள் குறைவுதான்.” என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த ஹரி.
பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர், தூங்குவதற்கென்றே சில மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா செல்பவர்.
“அப்படிச் செல்லும்போது, நான் புதிய இடங்களுக்கு செல்வதில்லை. தூங்குவதற்கு தானே செல்கிறேன், எனவே பழக்கப்பட்ட இடங்களுக்கே செல்வேன். பெரும்பாலும் மலை அல்லது கடல் சார்ந்த பகுதிகள். அங்கு செல்லும்போது, எனது வேலைகளை ஒதுக்கி வைத்துவிடுவேன். 2 அல்லது 3 நாட்களுக்கு செல்வேன்” என்கிறார் ஹரி.
இந்த 2 அல்லது 3 நாட்களில், வெறுமனே தூங்குவது மட்டுமல்லாமல், யோகா, நீச்சல் போன்றவற்றிலும் கவனம் செலுத்துவதாகவும், முடிந்தளவு ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை தவிர்த்துவிடுவதாகவும் அவர் கூறுகிறார்.
ஹரி பேசுவதைக் கேட்கும்போது, இது உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கான அல்லது இளம் தலைமுறையினருக்கான ஒரு ‘சுற்றுலா டிரெண்ட்’ போல தோன்றலாம்.
ஆனால், தூங்குவதற்காக மட்டுமே சுற்றுலா செல்வது எனும் பழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என்றும், தலைமுறை வேறுபாடுகளைக் கடந்து, 2024இல் பலரும் இதையே விரும்பினார்கள் என்றும் ‘ஹில்டன்’ நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹில்டன்’ நிறுவனம், 105 ஆண்டுகளாக விருந்தோம்பல் துறையில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
‘இளமையாக இருக்கும்போதே முடிந்தளவு உலகை சுற்றிபார்த்துவிடுங்கள், வயதான பிறகு சுற்றுலா சென்றால் அங்கு சென்று தூங்க மட்டுமே முடியும்’ என கிண்டலாக சிலர் சொல்வதுண்டு. ஆனால் இப்போது இளம் தலைமுறையினர் கூட தூங்குவதற்காகவே சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள் என ஹில்டன் ஆய்வு கூறுகிறது.
“விடுமுறையைக் கழிக்க அல்லது வேலையிலிருந்து ஒரு ‘பிரேக்’ (Break) எடுத்துக்கொள்ள என சொன்னாலும், இங்கு தூக்கமே பிரதானமாக இருக்கிறது. எந்த இடத்திற்கு போகவேண்டும் என்பதில், அங்கு அமைதியாக தூங்க வசதி உள்ளதா என்ற அம்சமே முக்கிய பங்கு வகிக்கிறது.” என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஜென் ஸி (Gen Z, 1997–2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்தவர்களில், 55 சதவீதம் பேர் தூங்குவதற்காக சுற்றுலா செல்வதை விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல, மில்லனியல் (Millenial, 1981–1996 காலகட்டத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையின் 60 சதவீதம் பேரும், ஜென் எக்ஸ் (Gen X, 1965–1980இல் பிறந்தவர்கள்) தலைமுறையின் 68 சதவீதம் பேரும், பேபி பூமர்ஸ் (Baby boomers, 1946–1964இல் பிறந்தவர்கள்) தலைமுறையின் 67 சதவீதம் பேரும் தூங்குவது மற்றும் ஓய்வெடுப்பதற்காக மட்டுமே சுற்றுலா செல்வதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சுற்றுலாவுக்கான சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கிரெடென்ஸ் ரிசர்ச் என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
யோகா, நீச்சல் பயிற்சி, ஸ்பா, ஆரோக்கியமான உணவுகள், போன்ற வசதிகளுடன், நகரங்களை விட்டு சற்றுத் தொலைவில், இயற்கைச் சூழலில், தூங்குவதற்காக சுற்றுலா செல்பவர்களை மனதில் கொண்டு, சுற்றுலாத் துறையில் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன அல்லது மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
கிரெடென்ஸ் ரிசர்ச் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் ஸ்லீப் டூரிஸம் சந்தை தோராயமாக 70.14 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் 6.13 லட்சம் கோடிகள்) மதிப்பிடப்பட்டது. 2032ஆம் ஆண்டில் இது 127.91 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 11.18 லட்சம் கோடிகள்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கைஸ்கேனர் என்ற பயண வலைதளத்தின் தகவலின்படி, பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் தங்கள் விடுமுறையைத் திட்டமிடும்போது தூக்கத்திற்கு முன்னுரிமை அளித்தே சுற்றுலா தலங்களை முடிவு செய்கிறார்கள்.
‘நகர வாழ்க்கையில் இருந்து ஒரு பிரேக்’
பட மூலாதாரம், Jyothi
“இவ்வாறு தூங்குவதற்காக அல்லது ஓய்வெடுப்பதற்காக சுற்றுலா வருபவர்கள், விடுதி அல்லது ரிஸார்ட் நடத்துபவர்களுக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை. எனவே சுற்றுலா துறையின் தொழில்முனைவோர் பலர் இதை ஊக்குவிக்கிறார்கள்” என்கிறார் ஜோதி ஷிங்கே.
மும்பையைச் சேர்ந்த ஜோதி, தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்திலிருந்து 2,118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சக்ரதா எனும் மலை கிராமத்தில், சொந்தமாக ஒரு தங்கும் விடுதி மற்றும் கஃபே நடத்தி வருகிறார்.
தன்னுடைய விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் இயற்கைச் சூழலில் நிம்மதியாக ஓய்வெடுக்கவே வருவதாகக் கூறும் ஜோதி, “தூங்கவே வருகிறார்கள் எனும்போது அவர்கள் மதுவையும் விரும்புவதில்லை. மது இல்லை எனும்போதே அங்கு பாதி பிரச்னைகள் குறைந்துவிடும்” என்கிறார்.
மருத்துவர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் என பலரும் குடும்பத்துடன், நண்பர்களுடன், நகர வாழ்க்கையில் இருந்து ஒரு ‘பிரேக்’ எடுத்துக்கொள்ள வருவதாகக் கூறும் அவர்,”சுற்றுலா தொடர்பான மக்களின் ரசனை மாறிவருகிறது. குறைவான மனிதர்கள் இருக்கும் இடத்தையே பலரும் விரும்புகிறார்கள். அத்தகைய வாடிக்கையாளர்களை மனதில் வைத்துதான், மணாலி, ஷிம்லா, போன்ற பிரபல சுற்றுலா தலங்களில் விடுதி தொடங்காமல், இந்த சிறிய மலை கிராமத்தில் தொடங்கினேன்” என்கிறார்.
ஜோதியின் விடுதியில் ‘வை-ஃபை’ இணைய வசதி கிடையாது. இதைக் குறிப்பிட்டுப் பேசும் அவர், “இங்கு வருபவர்கள், இணைய உலகில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற மனநிலையோடு வருகிறார்கள் அல்லது வை-ஃபை இல்லாத காரணத்தால், ஸ்மார்ட்போன் பார்ப்பது குறைந்துவிடுகிறது. எல்லாம் சேர்ந்து அவர்களால் இங்கு நிம்மதியாக, ஒன்றும் செய்யாமல், ஓய்வு எடுக்க மட்டும் முடிகிறது.
அருகில் இருக்கும் காடுகள், நீர்வீழ்ச்சிகள் என எல்லாம் சேர்ந்து ஒருவித புத்துணர்ச்சியை அவர்களுக்கு அளிக்கிறது. இதனால் பலரும் மீண்டும் மீண்டும் வருகிறார்கள்” என்கிறார்.
ஸ்லீப் டூரிஸம் ஆரோக்கியமானதா?
பட மூலாதாரம், Getty Images
“நகரங்களில் இருக்கும் இரைச்சல், அன்றாட பரபரப்பிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இதை பலர் விரும்பலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது நிச்சயமாக நல்லதல்ல” என்கிறார் மனநல மருத்துவரும், சென்னை கீழ்பாக்கம் மனநல மையத்தின் முன்னாள் இயக்குநருமான பூர்ண சந்திரிகா.
இதற்கு காரணம், 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது ஒரு தினசரி வழக்கமாகவே இருக்க வேண்டுமே தவிர, அதற்காக சேர்த்து வைத்து வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில் அல்லது அதற்காகவே சுற்றுலா சென்று தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
போதுமான நேரம் தூங்காமல் இருப்பது ஒரு பழக்கமாக மாறும்போது, அது உடலில் பல தீவிரமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
2019இல், ‘இந்தியன் ஜர்னல் ஆப் ஸ்லீப் மெடிசினில்’ வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், “நவீன சமூகத்தில் நாள்பட்ட தூக்கமின்மை என்பது பொதுவானதாக மாறிவிட்டது. மக்கள் எப்போதையும் விட அதிக நேரம் வேலை செய்கிறார்கள், ஆனால் குறைவாக தூங்குகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் 64% பேர் காலை 7 மணிக்கு முன்பே எழுந்திருக்கிறார்கள், பிற உலக நாடுகளின் மக்களுடன் ஒப்பிடுகையில், இந்தியர்கள் மிகவும் சீக்கிரமாக எழுவதை இது காட்டுகிறது.
மேலும், 61% இந்தியர்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்று அந்த ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல, 31–50 வயதுக்குட்பட்டவர்களில் தூக்கமின்மை அதிகமாக (47.91%) உள்ளது என்றும், 16–30 வயதுக்குட்பட்டவர்களில் இந்த விகிதம் 31.66% என்ற அளவில் உள்ளது என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய இளைஞர்களிடையே அதிகரித்துவரும் நாள்பட்ட தூக்கமின்மைக்கு, நவீன வாழ்க்கை முறை, முறையற்ற தூக்க சுழற்சி, நோய்கள், வேலை (ஷிஃப்ட் முறையிலான வேலை மற்றும் அடிக்கடி பயணம் செய்தல்), பிற தூக்கக் கோளாறுகள் (குறட்டை), மருந்துகள், குழந்தை வளர்ப்பு போன்றவற்றை அந்த ஆய்வு காரணிகளாக காட்டுகிறது.
“பலரும் நினைப்பது நேற்று 3 மணிநேரம் தூங்கிவிட்டு, இன்று 10 மணிநேரம் தூங்கினால் சரியாகிவிடும் என்று. ஆனால் மனித உடல் அப்படி இயங்குவதில்லை. தினசரி முறையாக தூங்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும். முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்.”
“அதைவிடுத்து தூங்குவதற்காக சுற்றுலா என்பது ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும்.” என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு