பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
-
“நான் விரைவாக மீதமிருக்கும் ரூ.15 லட்சம் வீட்டுக் கடனை அடைத்துவிட்டு, கார் வாங்குவதை தள்ளி வைக்க வேண்டிய சூழலில் உள்ளேன்,” என்கிறார் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மென் பொறியாளரான கோகுல் நாத்.
அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை ஐடி துறையும் எதிர்கொண்டு வருகிது.
சமீபத்தில் ஹெச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகளால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இந்திய ஐடி துறை, அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள ‘ஹயர்’ மசோதாவின் வடிவில் புதிய அச்சுறுத்தல்களைச் சந்திக்க உள்ளது. அமெரிக்க செனட்டில் ஹால்டிங் இண்டர்நேஷனல் ரிலொகேஷன் ஆஃப் எம்ப்ளாய்மெண்ட் (ஹயர் – HIRE) மசோதா கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மசோதா என்ன சொல்கிறது?
அமெரிக்காவுக்கு வெளியே வேலைவாய்ப்புகளை அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விலக்கு பெறுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது.
அமெரிக்க சந்தையில் நிலவும் நிலையற்றத்தன்மையால் இந்திய ஐடி துறை புதிய சவால்களைச் சந்திக்கிறது.
பட மூலாதாரம், Azhagunambi
இந்த மசோதா இந்திய ஐடி துறையை ஒரு கடினமான கட்டத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொறியாளர்கள் கவனத்துடனும் கவலையுடனும் சமீபத்திய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
“மாற்று வருமானத்துக்கான வழிகளைத் தேடி வருகிறோம்”
இந்த நிலையற்ற சூழலைக் கடந்து செல்ல ஐடி ஊழியர்கள் தங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 18 வருடங்களாக ஐடி துறையில் வேலை செய்யும் நித்யா தற்போது ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
பிபிசியிடம் பேசிய அவர், “இந்தத் துறையில் வேலை செய்யும் பல மூத்த பொறியாளர்களும் தற்போது வேலை இழக்கும் சூழலில் உள்ளனர். ஐடி துறை பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. நான் உட்பட என்னுடன் வேலை செய்யும் பலரும் மாற்று வருமானத்திற்கான வழிகளையும் தேடி வருகிறோம்.” என்று தெரிவித்தார்.
“புதிய நடுத்தர வர்க்கம்”
பட மூலாதாரம், Thyagu Valliappa
இந்த மசோதாவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது தாமதமாவதாகக் கூறுகிறார் பெங்களூருவைச் சேர்ந்த சோனா வள்ளியப்பா குழுமத்தின் துணைத் தலைவரான தியாகு வள்ளியப்பா.
இந்தியாவில் ஐடி துறையின் வளர்ச்சியும் பொருளாதார தாராளமயமாக்கலும் (1991) ஒருசேர நடந்தது. பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே போன்ற நகரங்களில் ஐடி துறையில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கிறது.
“இந்தியாவில் ஐடி துறையின் வளர்ச்சிக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 90களில் பரவலான ஆங்கிலம் பேசும் தொழில்நுட்ப பட்டதாரிகள், திறன்வாய்ந்த மற்றும் நம்பத்தகுந்த பணியாளர்கள், தொலைத்தொடர்பு மற்றும் இணைய உள்கட்டமைப்புகளில் ஏற்பட்ட மேம்பாடுகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் இருந்த நெருக்கமான தொடர்பு ஆகியவை இந்த வளர்ச்சியை வேகப்படுத்தின.” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான பூபதி ராஜேந்திரன்.
அதிக வருமானம் தந்த ஐடி துறை ஒரு ‘புதிய நடுத்தர வர்த்தகத்தை’ உருவாக்கியது என்கிறார் தியாகு வள்ளியப்பா. அதனுடன் சேர்ந்து ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ந்ததாகக் கூறும் அவர், “ஐடி துறைக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மற்ற துறைகளிலும் அதன் பாதிப்பு உணரப்படும்.” என்றார்.
ஐடி அமைப்பான நாஸ்காம் தரவுகளின்படி, இந்திய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபியில்) ஐடி துறையின் பங்கு 7.3% ஆக உள்ளது.
“26 லட்சம் கோடி சந்தை மதிப்பு”
லட்சக்கணக்கான இந்திய குடும்பங்கள் ஐடி வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதார நிலையில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறின.
“அதிக சம்பளம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகியவை இந்திய பட்டதாரிகள் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்யத் தூண்டியது. இதனால் ஐடி திறமைசாலிகளின் புகலிடமாக இந்தியா மாறியது,” என்கிறார் ஐடி ஊழியர்கள் சங்கமான யுனைட் அமைப்பின் பொதுச் செயலாளரும் மென் பொறியாளரான அழகுநம்பி வெல்கின்.
2020-இல் 191 பில்லியன் டாலராக இந்திய ஐடி துறையின் வருவாய் 2025-இல் 282 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஐந்து ஆண்டுகளில் 50% வளர்ச்சி கண்டுள்ளது. 2026 நிதியாண்டில் இது 300 பில்லியன் டாலர் (தோராயமாக 26 லட்சம் கோடி) என்கிற மைல்கல்லை எட்டும் என நாஸ்காம் (Nasscom) கணித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் (2024-2025) ஐடி துறையில் 58 லட்சம் பேர் வேலை பார்ப்பதாக நாஸ்காம் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐடி வளர்ச்சியின் தூணாக உள்ள தென்னிந்திய மாநிலங்கள்
ஐடி துறை வளர்ச்சியின் பலன்களை அறுவடை செய்ததில் தென்னிந்திய மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடு முழுவதும் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவி வருகிறது. அதன் தரவுகளின்படி கர்நாடகா (4.56 லட்சம் கோடி), தெலங்கானா (2.08 லட்சம் கோடி) மற்றும் தமிழ்நாடு (86,000 கோடி) உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரா (1.38 லட்சம் கோடி) நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன.
அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் இந்திய ஐடி துறை
இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க சந்தையை சார்ந்தே இருக்கின்றன. அமெரிக்காவுக்கான மென்பொருள் ஏற்றுமதி 2024-ஆம் ஆண்டு 7.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் மென்பொருள் ஏற்றுமதியில் 55 சதவிகிதத்துக்கும் அதிகமாக அமெரிக்காவிற்கு தான் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த இடத்தில் பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து உள்ளன.
அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும் அதிக சேவை கட்டணம் தான் இதற்கு காரணம் எனக் கூறும் வெல்கின், “வேறு எந்த நாட்டிலும் நமக்கு இந்த அளவிற்கு வருமானமும் லாபமும் கிடைக்காது.” என்றார்.
இந்தியா – அமெரிக்காவின் ஐடி உறவு பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடியது என்று குறிப்பிடுகிறார் பூபதி ராஜேந்திரன்.
அதனை விவரித்துப் பேசிய அவர், “மற்ற நாடுகளை விடவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை வழங்குவதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன. மறுபுறம் அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு பணியாளர்களுக்கு வழங்குவதை விட அவுட்சோர்ஸிங் மூலம் குறைவான கட்டணத்தையே இந்திய நிறுவனங்களுக்கு கொடுக்கின்றன.” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Boopathy Rajendran
இந்திய நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் அமெரிக்காவின் முக்கிய துறைகள்
ஐடி பெருநிறுவனங்களின் வருமானத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து தான் வருகின்றன. விப்ரோ நிறுவனத்தின் 58% வருமானம் அமெரிக்காவிலிருந்தும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் 48% வருமானமும் வட அமெரிக்க பிராந்தியத்திலிருந்தும் (பெரும்பாலும் அமெரிக்காவைத் தான் குறிக்கிறது) கிடைப்பதாக அந்த நிறுவனங்களின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் அமெரிக்க வருவாயில் 48.4% அதன் முக்கியமான துறைகளாக கருதப்படும் வங்கி, நிதி சேவைகள், காப்பீடு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளிலிருந்து தான் கிடைக்கின்றன. இதன் பொருள் இந்தத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் அதன் சேவைகளுக்கு இந்தியாவைச் சார்ந்திருக்கிறது என்பதே.
இந்திய நிறுவனங்கள் பிற நாடுகள் மற்றும் உள்நாட்டு சந்தை மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளதாக துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 நிதியாண்டில் இந்தியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் முறையே 15% மற்றும் 29.2% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே நேரம் வட அமெரிக்க பிராந்தியத்தில் 2.1% வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
“அமெரிக்காவின் முக்கியமான துறைகளில் பெரும்பாலானவை இந்திய நிறுவனங்களைச் சார்ந்திருப்பதால், இந்த மசோதாவால் அவர்களுக்கும் பாதிப்பு இருக்கவே செய்யும்,” என்கிறார் தியாகு வள்ளியப்பா.
ஐடி துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு வழி என்ன?
இந்திய ஐடி வருவாயில் பெரும்பான்மை ஏற்றுமதியைச் சார்ந்தே இருக்கின்றன. 2025 நிதியாண்டுக்கான தரவுகளை எடுத்துக் கொண்டால் 282.6 பில்லியன் டாலரில் 224.4 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 80%) மென்பொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே கிட்டத்தட்ட இதே நிலை தான் தொடர்கிறது.
இந்திய நிறுவனங்கள் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு நீண்ட கால நோக்கில் தங்களின் சந்தையைப் பரவலாக்க வேண்டும் எனக் கூறுகிறார் தியாகு வள்ளியப்பா.
“பல வருடங்களாக உள்ளுர் சந்தை 20 – 25% என்கிற அளவிலே இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர துறைகளில் (எம்எஸ்எம்இ) வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஐரோப்பாவிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் நமது ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன.” என்றார்.
உள்ளூர் சந்தையை மேம்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் வல்லுநர்கள் அதில் உள்ள சவால்களையும் பதிவு செய்கின்றனர்.
பட மூலாதாரம், Rajaram Venkatraman
எம்எஸ்எம்இ நிறுவனங்களில் 10% மட்டுமே தொழில்நுட்பமயமாக்கி இருப்பதாக கூறுகிறார் ஃபிக்கி (FICCI) அமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் தலைவரான ராஜாராம் வெங்கட்ராமன். பிபிசியிடம் பேசிய அவர், “உள்ளுர் சந்தை மிகவும் சவாலானது. விலை நிர்ணயம் செய்வதில் இழுபறி இருக்கும், கட்டணம் செலுத்தும் கால இடைவெளியும் நீண்டதாக இருக்கும், ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் போன்ற லாபம் உள்ளூர் சந்தையில் கிடைக்காது.” என்றார்.
அத்தகைய சூழலில் வருவாய் குறையாமல் தக்கவைக்க வேண்டுமென்றால் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் ராஜாராம்.
“அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளை நோக்கிச் செல்வதன் விளைவு ‘குறைவான ஆபத்து மற்றும் குறைவான லாபம்’ என்பதைப் போன்றது. ஆனால் நீண்ட கால நோக்கில் நம்முன் உள்ள ஒரே சாத்தியமான வாய்ப்பும் அது தான்.” என்று கூறுகிறார் வெல்கின்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு