பட மூலாதாரம், NCERT
குப்த பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சிறிய, சிறிய ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்த வட இந்தியாவை ஒருங்கிணைக்கும் முக்கியமான பணியை ஹர்ஷவர்த்தனா செய்தார் என்று கூறப்படுகிறது.
அரசர்கள் பெரும் வெற்றியாளராக மட்டுமல்லாமல் வெற்றிகரமான நிர்வாகி, இலக்கியவாதி போன்ற குணங்களுடன் இருப்பது அரிதாகவே காணப்படுகின்றன.
கி.பி. 590 இல் பிறந்த ஹர்ஷவர்த்தனாவின் வாழ்க்கை வரலாறான ‘ஹர்ஷசரிதத்தில்’ பானபட்டா பின்வருமாறு எழுதுகிறார்: “தொடர்ந்து ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் அவரது கைகள் கருமையடைந்து விட்டன; அது, அனைத்து அரசர்களின் மகிமை என்ற நெருப்பைத் தணிப்பதில் அழுக்கடைந்ததைப் போல இருந்தது.”
16 வயதில் தானேஸ்வர் அரியணையில் அமர்ந்தபோது, ஹர்ஷர் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டார், ஆனால் அவர் இந்தக் கஷ்டங்களைக் கண்டு அஞ்சாமல் தனது பாதையை அமைத்துக் கொண்டார்.
விஜய் நஹர் தனது ‘ஷீலாதித்ய பேரரசர் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது யுகம்’ என்கிற புத்தகத்தில், “தனது தந்தை பிரபாகரவர்த்தனின் மரணம், தாய் உடன்கட்டை ஏறியது, மூத்த சகோதரர் ராஜ்யவர்த்தன் சதியால் மரணம், மைத்துனர் மௌகரி மன்னன் கிரகவர்மாவின் கொலை, மற்றும் சகோதரி ராஜ்யஸ்ரீ ராஜ்ஜியத்தை விட்டு விந்திய மலையின் காடுகளுக்குப் பயணம் போனது போன்ற பல பயங்கரமான மற்றும் கடுமையான நிகழ்வுகள் ஹர்ஷரின் வாழ்க்கையில் நடந்தன. ஆனால் இளம் வயது மற்றும் அனுபவமின்மையைக் கடந்தும் அவர் இவற்றைத் தைரியமாக எதிர்கொண்டார்.” என எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Aavishkar Publishers
ஹர்ஷர் மன்னரானார்
பிரபாகரவர்த்தன் இறந்தபோது ஹர்ஷவர்த்தனா அங்கு இருந்தார், ஆனால் அவரது மூத்த மகன் ராஜ்யவர்த்தனர் ஹூணர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்தார்.
ராஜ்யவர்த்தனர் ஹூணர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுத் திரும்பியபோது, தனது தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டார். அதைக் கேட்டு அவர் மிகவும் வேதனைப்பட்டார், சந்நியாசம் செல்ல விரும்பினார். ஆனால் ஹர்ஷர் தனது அண்ணனை வற்புறுத்தி அரியணையில் அமரச் செய்தார்.
இதற்கிடையில், ராஜ்யவர்த்தனர் தனது மைத்துனர் மௌகரி கிரகவர்மாவின் கொலைச் செய்தியைக் கேட்டார். அவர் தனது மைத்துனரின் கொலைக்குப் பழிவாங்க தனது ராணுவத்துடன் கிளம்பினார். அவர் மால்வா நாட்டின் மன்னரின் படைகளைத் தோற்கடித்து கண்ணோஜைக் கைப்பற்றினார். அதன் பிறகு, அவர் கௌட நாட்டின் மன்னன் சசாங்கின் முகாமை முற்றுகையிட்டார், ஆனால் சசாங்க் சூழ்ச்சி செய்து ராஜ்யவர்த்தனரைக் கொன்றார்.
“சசாங்க், ராஜ்யவர்த்தனரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, தன் மகளை அவருக்குத் திருமணம் செய்து கொடுக்க முன்வந்தார். ராஜ்யவர்த்தனர் தனியாக அவரது முகாமுக்குச் சென்றபோது, சசாங்க் அவரைக் கொன்றார்.” எனக் குறிப்பிடுகிறார் பானபட்டா.
சீனப் பயணி யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்தபோது ஹர்ஷவர்த்தனாவின் காலம் தொடங்கவிருந்தது.
“ராஜ்யவர்த்தனரின் மரணத்திற்குப் பிறகு கண்ணோஜ் அரியணை காலியாக இருந்தபோது, கண்ணோஜின் அவை அதிகாரிகள் ராஜ்யவர்த்தனரின் தம்பியான ஹர்ஷவர்த்தனாவை ஆட்சியை ஏற்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆரம்பத்தில் ஹர்ஷர் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார், ஆனால் அரியணையில் அமராமல் ராஜாவாக இருக்கவும், ‘மகாராஜா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மதத் தலைவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். இவ்வாறு ஹர்ஷர் கண்ணோஜின் மன்னரானார். அவர் தனக்கு ‘இளவரசர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.” என்றும் பானபட்டா குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், bloomsbury publishing
‘மகா வீரன்’
ஹர்ஷரின் முறையான முடிசூட்டு விழா கி.பி. 612 இல் நடந்தது.
16 வயதில், ஹர்ஷர் தனது சகோதரர் மற்றும் மைத்துனரின் கொலைகளுக்கு பழிவாங்க ஐந்தாயிரம் யானைகள், இருபதாயிரம் குதிரைகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான காலாட்படைகள் கொண்ட ராணுவத்துடன் புறப்பட்டார்.
“குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தரைப் போலவே, ஹர்ஷரும் ஒரு பெரிய போர்வீரர். ஆறு ஆண்டுகளில், அவர் தனது சகோதரியை கண்டுபிடித்தார். கண்ணோஜ் உட்பட பஞ்சபாரதம் அதாவது சாரஸ்வத், கன்யாகுப்ஜா, கௌடா, மிதிலா மற்றும் உத்கல் (ஒடிசா) ஆகியவற்றை ஆக்கிரமித்தார். இந்த நேரத்தில் ஹர்ஷரின் ராணுவம் மிகப்பெரிய வடிவத்தை எடுத்தது. அவரது ராணுவத்தில் அறுபதாயிரம் யானைகள், ஒரு லட்சம் குதிரைகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் இருந்தனர். இவ்வளவு பெரிய ராணுவத்துடன், அவர் விரைவில் வல்லபி, பரோச் மற்றும் சிந்து ஆகியவற்றை வென்று தனது ராஜ்ஜியத்தின் எல்லையை மேற்கு கடல் வரை நீட்டித்தார்.” என்று குறிப்பிடுகிறார் யுவான் சுவாங்.
பானபட்டரின் கூற்றுப்படி, ஹர்ஷரின் ராணுவம் தினமும் கிட்டத்தட்ட 16 மைல் தூரம் பயணித்தது. ஹர்ஷரின் ஆட்சியின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அவர் தோற்கடிக்கப்பட்ட மன்னர்களுக்கு அவர்களது ராஜ்ஜியங்களைத் திருப்பிக் கொடுத்தார். மேலும் அவர்களிடம் இருந்து வரி வசூலித்து வந்தார்.
இது ஹர்ஷரின் கூட்டாட்சி அணுகுமுறையாக இருந்தது. குப்த ஆட்சியாளர்களும் இதே கொள்கையைப் பின்பற்றினர். கி.பி. 634 இல், ஹர்ஷர் தெற்கின் சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் புலிகேசியுடன் போரிட்டார். அதில் ஹர்ஷர் தோற்கடிக்கப்பட்டார். மேலும் அவர் தனது சாம்ராஜ்ஜியத்தைத் தெற்கே விரிவுபடுத்த முடியவில்லை.
“இந்த தோல்விக்குப் பிறகும், ஹர்ஷரின் ‘மகா வீரன்’ என்ற சிறப்புப் பெயர் தவறாகிவிடவில்லை. உலகின் வரலாற்றில், நெப்போலியன் போன்ற பெரிய வீரர்களும் போரில் தோற்கடிக்கப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் உள்ளன,” என விஜய் நஹர் எழுதுகிறார்.
பட மூலாதாரம், NCERT
கடின உழைப்பாளி, திறமையான நிர்வாகி
அசோகரைப் போலவே, ஹர்ஷருக்கும் தனது ராஜ்யத்தில் பயணம் செய்யும் பழக்கம் இருந்தது, இதனால் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹர்ஷர் எப்போதும் தனது மக்களின் துயரங்களைப் பற்றி விழிப்புடன் இருந்தார்.
“ஹர்ஷர் தனது குடிமக்களின் புகார்களை அவையில் கேட்காமல், தெருவில் அவர்களிடையே சென்று கேட்டார். அவர் தனது நண்பர்களிடம் மிகுந்த விசுவாசத்துடன் இருந்தார். வெகு தொலைவில் உள்ள அசாமின் மன்னர் பாஸ்கரவர்மன் அவரது அவைக்கு வருவார். அவர் சசாங்கிற்கு எதிரான போரில் ஹர்ஷருக்கு ஆதரவளித்தார்,” என்று ஏ.எல்.பாஷம் தனது ‘தி வொண்டர் தட் வாஸ் இந்தியா’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“ஹர்ஷர் மிகவும் கடினமாக உழைத்த ஒரு அரசர். அவரது நாள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் பகுதியில், அவர் முழு நேரத்தையும் ஆட்சியாளரின் வேலைகளில் செலவிட்டார். மற்ற இரண்டு பகுதிகளில், அவர் மதப் பணிகளைச் செய்தார். அவர் ஒருபோதும் சோர்வடையவில்லை, மேலும் தனது மக்களுக்காக வேலை செய்யும்போது சில சமயங்களில் தூக்கம் மற்றும் உணவைக் கூட மறந்துவிடுவார்.”
“அவர் காலத்தில் வரிகளின் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. ஹர்ஷரின் காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதியம் பணமாகக் கொடுக்கப்படாமல் நிலமாகக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த நிலத்தைப் பராமரிக்க வேண்டியிருந்தது, அதிலிருந்து வரும் வருமானம் அவர்களக்கு சொந்தமானது. ஹர்ஷர் ராஜ்ஜியத்தின் மொத்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை தனது அதிகாரிகளுக்கு வழங்க முடிவு செய்தார். ஒரு பகுதி ராஜ்யத்தின் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. கோதுமை மற்றும் அரிசி மக்களின் உணவாக இருந்தது.” என்று யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், NCERT
மரண தண்டனைக்கு எதிரானவர்
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஹர்ஷரின் காலத்தில் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. மக்களிடையே நல்லிணக்கம் அதிகம் இருந்ததால் குற்றங்கள் குறைவாகவே இருந்தன.
“தேசத்துரோகத்திற்கு மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஒழுக்கத்திற்கு எதிரான குற்றங்களுக்கு, குற்றவாளியின் உறுப்புகள் வெட்டப்பட்டன அல்லது அவர் நாடு கடத்தப்பட்டார் அல்லது காடுகளுக்கு அனுப்பப்பட்டார். சில சமயங்களில் அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். மக்கள் தீமைகளிலிருந்து விலகி இருந்தனர் மற்றும் பாவம் செய்ய அஞ்சினர்,” என பிரபல வரலாற்றாசிரியர் ராதா குமுத் முகர்ஜி தனது ‘ஹர்ஷா’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பேரரசர் ஹர்ஷவர்த்தனாவுடைய ராஜ்ஜியத்தின் தலைநகராக மாறிய பிறகு கண்ணோஜின் பெருமை இரு மடங்கானது. “கண்ணோஜில் எல்லா இடங்களிலும் பொருளாதார வளம் இருந்தது. மக்கள் நாகரிகமாக இருந்தனர். வீடுகள் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தன. அவற்றின் சுவர்கள் உயரமாகவும் தடிமனாகவும் இருந்தன.”
“அங்கு பல அழகான தோட்டங்கள், சுத்தமான நீர் குளங்கள் மற்றும் ஒரு அருங்காட்சியகம் இருந்தது. அங்கிருந்த மக்கள் பளபளப்பான மற்றும் பட்டு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் மொழி இனிமையாக இருந்தது. கசாப்புக் கடைக்காரர்கள், மீனவர்கள், நடனமாடுபவர்கள் நகருக்கு வெளியே வாழ்ந்தனர். ராணுவம் இரவில் அரண்மனையைச் சுற்றி ரோந்து சென்றது,” என யுவான் சுவாங் எழுதினார்.
பட மூலாதாரம், Motilal Banarasidass Publishers
நாளந்தா பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்
பேரரசர் ஹர்ஷர் ஒரு வீரர் மட்டுமல்ல, அவரே ஒரு அறிஞர் மற்றும் அறிஞர்களின் ஆதரவாளராகவும் இருந்தார். அவர் மகா கவிஞரான பானபட்டரை அரசவைப் பண்டிதராக ஆக்கினார். ஹர்ஷர் தானே சமஸ்கிருத மொழியில் நல்ல அறிவு படைத்திருந்தார். அவர் ‘ரத்னவள்ளி’, ‘பிரியதர்சிகா’ மற்றும் ‘நாகானந்தா’ ஆகிய மூன்று சமஸ்கிருத நாடகங்களை எழுதினார்.
பிரபல வரலாற்றாசிரியர் ஈ.பி. ஹேவல் தனது ‘தி ஹிஸ்டரி ஆஃப் ஆரியன் ரூல் இன் இந்தியா ஃப்ரம் தி எர்லியஸ்ட் டைம்ஸ் டு தி டெத் ஆஃப் அக்பர்’ என்ற புத்தகத்தில், “பேரரசர் ஹர்ஷர் வாளைப் பயன்படுத்துவதில் எவ்வளவு திறமையானவராக இருந்தாரோ, அதே அளவு பேனாவைப் பயன்படுத்துவதிலும் வல்லவராக இருந்தார்,” என எழுதியுள்ளார்.
ஆர்.சி. மஜும்தார் தனது ‘தி கிளாசிக்கல் ஏஜ்’ (The Classical Age) என்ற புத்தகத்தில், “ஹர்ஷர் ஒரு சிறந்த இலக்கியவாதி மற்றும் கல்வியை நேசிப்பவர். அவரது ‘நாகானந்தா’ படைப்பில், காதல், மனிதநேயம், சகோதரத்துவம், இரக்கம் மற்றும் அன்பின் செய்தியை அளித்துள்ளார், இது ஹர்ஷரை ஒரு இலக்கியவாதியாக சாகாவரம் அடையச் செய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷரின் காலத்தில், நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. ஹர்ஷர் அதன் பாதுகாவலராக இருந்தார். அதன் பராமரிப்புக்காக அவர் 100 கிராமங்களைத் தானமாக வழங்கினார். அறிஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆதரவாளராக இருந்ததால், இலக்கியத் துறையில் ஹர்ஷர் அசோகரை விடவும் மேலானவராக இருந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
பௌத்த மதத்தைத் தழுவிய ஹர்ஷர்
பேரரசர் ஹர்ஷர் எந்த மதத்தைப் பின்பற்றினார் என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கு வெவ்வேறு கருத்துகள் உள்ளன. பானபட்டரின் கூற்றுப்படி, ஹர்ஷரின் முன்னோர்களின் மதம் சைவ மதம் ஆகும்.
மேலும், ஹர்ஷரின் நாணயங்களில் சிவன் மற்றும் நந்தியின் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அவர் சைவராக இருந்ததைக் குறிக்கிறது.
பன்ஸ்கேடா மற்றும் மதுபன் கல்வெட்டுகளில் அவரது பெயருடன் ‘பரம பரமேஸ்வர்’ என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அந்தக் காலத்தில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பானபட்டர் மற்றும் யுவான் சுவாங் இருவரும், தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஹர்ஷர் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவராக மாறினார் மற்றும் புத்தர் மீது மிகுந்த பக்தியுடன் இருந்தார் என்று எழுதுகின்றனர்.
ஹர்ஷரின் இரண்டு நாடகங்களான ‘ரத்னவள்ளி’ மற்றும் ‘பிரியதர்சிகா’ ஆகியவற்றில் புகழப்படும் தெய்வங்கள் அனைத்தும் வேத மதத்தைச் சேர்ந்தவை, ஆனால் ஹர்ஷரின் மூன்றாவது நாடகமான ‘நாகானந்தா’-வில் அவர் புத்தரை தெய்வமாகக் கருதிப் போற்றினார்.
“பேரரசர் ஹர்ஷர் ஆரம்பத்தில் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவராக இல்லை, ஆனால் பின்னர் பௌத்த மதத்தைத் தழுவிய பிறகும் அவர் மற்ற மதங்களைப் புறக்கணிக்கவில்லை. அசோகர் மற்றும் கனிஷ்கரைப் போல ஹர்ஷர் பௌத்த மதத்தைப் பரப்பவில்லை. ஆனால் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பௌத்த மதத்தைக் காத்த பெருமை ஹர்ஷரையே சேரும். அவர் கண்ணோஜின் மதச் சபை மற்றும் பிரயாகின் மகா மோக்ஷபரிஷத்தில் புத்தரை முதன்முதலில் வணங்கி, பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை உயர்த்தினார்,” என ராதா குமுத் முகர்ஜி எழுதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஹர்ஷரின் அவையில் யுவான் சுவாங்
சீனாவுக்குத் திரும்புவதற்கு முன், பேரரசர் ஹர்ஷர் யுவான் சுவாங்கை தனது அவையில் விவாதம் செய்வதற்காக அழைத்தார். அப்போது ஹர்ஷரின் ஆட்சி அதன் உச்சத்தில் இருந்தது. இதற்கு முன் இருவரும் சந்தித்திருந்தனர் மற்றும் இருவரும் நண்பர்களாக மாறியிருந்தனர்.
யுவான் சுவாங் கி.பி. 643 இல் ஹர்ஷவர்த்தனரின் அவைக்கு வந்தார். இந்தச் சந்திப்பில் ஹர்ஷர் யுவான் சுவாங்கிடம் சீனா மற்றும் அதன் ஆட்சியாளரைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டார், மேலும் சீனாவைப் பற்றிய தனது அறிவைக் காட்டி யுவான் சுவாங்கை ஆச்சரியப்படுத்தினார்.
இதற்கிடையில், ஹர்ஷர் தனது தூதுவர்கள் மூலம் போதி கயாவின் போதி மரத்தின் ஒரு கன்றையும் பௌத்த மருத்துவம் மற்றும் வானியல் குறித்த கையெழுத்துப் பிரதிகளையும் சீன மன்னர் தைசோங்கிற்குப் பரிசாக அனுப்பினார். ஹர்ஷரின் அவையில் யுவான் சுவாங் பல அறிஞர்களுடன் விவாதம் செய்தார்.
“ஹர்ஷர் கொடுத்த யானையின் மீது அமர்ந்து யுவான் சுவாங் சீனாவுக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கினார். ஹர்ஷர் அவருடன் தனது நான்கு அதிகாரிகளையும் சீனாவுக்கு அனுப்பினார். அவர்களிடம் ஹர்ஷர் எழுதிய கடிதங்கள் இருந்தன, அதில் வழியில் இருந்த நாடுகளின் மன்னர்கள் யுவான் சுவாங்கின் குழுவிற்கு அனைத்து வகையான உதவிகளையும் குதிரைகளையும் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது,” என வில்லியம் டால்ரிம்பில் தனது ‘தி கோல்டன் ரோட்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், bloomsbury publishing
மரணத்திற்குப் பிறகு சிதைந்த சாம்ராஜ்ஜியம்
பண்டைய இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த பேரரசர்களில் ஒருவராக ஹர்ஷர் கருதப்படுகிறார்.
கே.எம்.பணிக்கர் தனது ‘ஸ்ரீ ஹர்ஷா ஆஃப் கண்ணோஜ்’ என்ற புத்தகத்தில் “சந்திரகுப்த மௌரியருடன் தொடங்கும் ஆட்சியாளர்களின் நீண்ட வரிசையில் ஹர்ஷர் கடைசி ஆட்சியாளர் என்கிறார். அவரது காலத்தில், உலகம் இந்தியாவை ஒரு பழங்கால மற்றும் சிறந்த நாகரிகமாக மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஒரு முறையான மற்றும் சக்திவாய்ந்த அரசாகவும் பார்த்தது. ஒரு ஆட்சியாளராகவும், கலையின் ஆதரவாளராகவும், இலக்கியவாதியாகவும் ஹர்ஷர் இந்திய வரலாற்றில் ஒரு உயர்ந்த இடத்தைப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.” என எழுதுகிறார்.
கி.பி. 655-இல் அவர் தனது கடைசி மூச்சை நிறுத்தினார், ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் சந்திரகுப்த மௌரியர் மற்றும் சமுத்திரகுப்தரைப் போல அவருக்குப் பிறகும் பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஒரு பேரரசை ஹர்ஷரால் நிறுவ முடியவில்லை என்று நம்புகிறார்கள்.
அவர் இறந்த உடனேயே அவரது பேரரசு சிதைந்தது. ஹர்ஷருக்கு வாரிசு இல்லை, மேலும் அவர் ஒரு தகுதியான வாரிசையும் நியமிக்கவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு