பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
‘ஹலால்’ என்ற இஸ்லாமிய மதம் தொடர்பான வார்த்தை பெரும்பாலும் உணவுகள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது.
ஹலால், ஹராம் என்றால் என்ன? இஸ்லாமியர்களுக்கு அது எந்தெந்த விஷயங்களில் பொருந்தும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஹலால் என்றால் என்ன?
ஹலால் என்பது ‘சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும் (حلال – Halal). ‘ஹராம்’ என்ற அரபு மொழிச் சொல்லுக்கு சட்டவிரோதமானது அல்லது தடை செய்யப்பட்டது என்று பொருள்.
ஹலால், ஹராம் என்பது இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் எந்தெந்த நடைமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன அல்லது தடை செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றன.
“இஸ்லாத்தில் ஹலால்/ ஹராம் என்பது உணவில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என பலரும் கருதுகிறார்கள். உண்மை என்னவென்றால், வாழ்க்கை முறையாகவே இது கடைபிடிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு உண்மை பேசுவது ஹலால், பொய் சொல்வது ஹராம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மௌலானா சம்சுதீன் காசிம்.
ஹலால்/ஹராம் உணவுகள் எவை?
பட மூலாதாரம், Getty Images
“ஹலால் உணவுகள் என்றால், இஸ்லாமியர்களுக்கு உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை குறிக்கிறது. அதுவே இறைச்சி என்றால், ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தின்படி வெட்டப்பட்ட விலங்கின் இறைச்சி” என ‘அமெரிக்க ஹலால் அறக்கட்டளை‘ எனும் அமைப்பின் இணையதளம் கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த அமைப்பு, 1986 முதல் உணவு, பானங்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுக்கான ‘ஹலால் சான்றிதழை’ வழங்கி வருகிறது.
எளிதாகச் சொல்வதென்றால், இஸ்லாத்தில் ‘ஹராம்’ என வகைப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர, மற்ற அனைத்துமே இஸ்லாமியர்களுக்கு ஹலால் உணவுகள் தான்.
அமெரிக்க ஹலால் அறக்கட்டளை, பின்வரும் உணவுப் பொருட்களை ‘ஹராம்’ எனப் பட்டியலிடுகிறது.
- பன்றி இறைச்சி மற்றும் அதன் அனைத்துவிதமான துணைப் பொருட்கள், ஜெலட்டின் உட்பட
- இஸ்லாமிய வழிகாட்டுதல்களின்படி வெட்டப்படாத விலங்கின் இறைச்சி
- ரத்தம் (உறைந்த அல்லது வழியக்கூடிய) மற்றும் அதன் துணைப் பொருட்கள்
- மாமிச உண்ணி விலங்குகள் (Carnivorous animals)
- மதுபானங்கள் மற்றும் வேறு ஏதேனும் போதைப் பொருட்கள்
- மேலே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் உள்ளடக்கிய உணவுகள்
எந்தெந்த விலங்குகளின் இறைச்சிகளை, இஸ்லாம் ‘ஹராம்’ என குறிப்பிடுகிறது என்பதை பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
“தாமாக இறந்தது, ரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது.” என குர்ஆன் கூறுகிறது (Al-Baqarah : 173).
ஹலால் இறைச்சி என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
பசு, காளை, ஆடு, ஆட்டுக்குட்டி, செம்மறி ஆடு, மான், கோழி, வான்கோழி, காடை, வாத்து போன்ற விலங்குகள் இஸ்லாத்தின் ‘ஹலால்’ என்ற பிரிவில் வரும். ஆனால், அந்த விலங்கை கொல்வதற்கு/வெட்டுவதற்கு என சில விதிமுறைகள் உள்ளன.
1) கொல்லப்படும் விலங்கு/பறவை ஹலால் (சட்டப்பூர்வமான) இனத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
2) கொல்லப்படும் விலங்கு/பறவை கருணையுடன் கையாளப்பட வேண்டும்.
3) அந்த விலங்கு/பறவை அறுக்கப்படும்போது உயிருடன் இருக்க வேண்டும்.
4) கொல்லப்படும் முன் விலங்கு/பறவையின் உடலின் எந்தப் பகுதியையும் வெட்டக்கூடாது.
5) இதில் ஈடுபடும் நபர் மனரீதியாக நல்ல நிலையில் இருக்க வேண்டும், ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் மற்றும் இஸ்லாமிய நடைமுறைகளை அறிந்தவராக இருக்க வேண்டும்.
6) தஸ்மியா, பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்), மற்றும் தக்பீர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகியவை ஒவ்வொரு விலங்கு/பறவையையும் கொல்வதற்கு முன் மற்றும் கொல்லப்படும்போது, அந்த நபரால் கூறப்பட வேண்டும்.
7) விலங்கின் முதுகுத் தண்டு துண்டிக்கப்படாமல், கழுத்துப் பகுதியில் உள்ள மூச்சுக்குழாய், உணவுக்குழாய் மற்றும் பிரதான கரோடிட் தமனிகள் மற்றும் கழுத்து நரம்புகளைத் துண்டிக்க வேண்டும்.
8) ரத்தம் முழுமையாக வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும். ரத்தப்போக்கின் விளைவாக விலங்கின் மரணம் நிகழ வேண்டும்.
9) கொல்லப்பட்ட பிறகு, விலங்கு/பறவையை தன்மையாகக் கையாள வேண்டும். கொல்லப்பட்ட விலங்கு/பறவையின் தலை, தோல் மற்றும் பிற பாகங்கள் அவை இறந்த பின்னரே அகற்றப்பட வேண்டும்.
இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதற்கு முன் அவற்றை மயக்கமடையச் செய்து கொல்வது (Stunning– ஸ்டன்னிங்) உலகின் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. அதாவது, கொல்லப்படும்போது அந்த விலங்குக்கு எந்த வலியும் பயமும் இருக்கக்கூடாது என்பதற்காக அதை மயக்கமடையச் செய்வது.
அமெரிக்க ஹலால் அறக்கட்டளையின் படி, மயக்கமடையச் செய்வதால் அந்த விலங்குக்கு காயம் ஏதும் ஏற்படக்கூடாது மற்றும் உயிர் பிரியாமல் இருக்க வேண்டும். அதாவது, இஸ்லாமிய முறைப்படி மட்டுமே அந்த விலங்கின் உயிர் பிரிய வேண்டும். ஸ்டன்னிங் காரணமாக அந்த விலங்கு இறந்துவிட்டால், அது நிச்சயம் ‘ஹராம்’ இறைச்சி தான்.
எந்தெந்த விலங்குகள்/பறவைகளின் இறைச்சி ஹராம்?
பட மூலாதாரம், Getty Images
1) பன்றிகள் மற்றும் காட்டுப் பன்றிகள்
2) நாய்கள், பாம்புகள் மற்றும் குரங்குகள்
3) நகங்கள் மற்றும் கோரைப் பற்களைக் கொண்ட மாமிச உண்ணி விலங்குகள் (சிங்கங்கள், புலிகள், கரடிகள் மற்றும் அவற்றை ஒத்த பிற விலங்குகள்)
4) நகங்களைக் கொண்டு இரையைப் பிடிக்கும் பறவைகள் (கழுகுகள் மற்றும் அவற்றை ஒத்த பிற பறவைகள்)
5) எலிகள், பூரான்கள், தேள்கள் மற்றும் அவற்றை ஒத்த பிற விலங்குகள், பூச்சிகள்.
6) இஸ்லாத்தில் கொல்வதற்கு தடை செய்யப்பட்ட விலங்குகள், அதாவது எறும்புகள், தேனீக்கள் மற்றும் மரங்கொத்தி பறவைகள்.
7) பேன், ஈக்கள், லார்வாக்கள் போன்றவை.
8) தவளைகள், முதலைகள் போன்ற நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள்.
9) கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள்.
10) அனைத்து விதமான, நஞ்சுடைய மற்றும் ஆபத்தான நீர்வாழ் விலங்குகள்.
11) இஸ்லாமிய சட்டத்தின்படி கொல்லப்படாத பிற விலங்குகள்.
பிற மதங்களிலும் இதேபோன்ற நடைமுறை உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
இஸ்லாத்தைப் போலவே, யூத மதத்திலும் உணவு தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளன. உண்ண அனுமதிக்கப்பட்ட உணவு, கோஷர் (Kosher) உணவு என அழைக்கப்படுகிறது.
உணவு தொடர்பான யூத மதத்தின் விதிகள், கஷ்ருத் (kashruth- כַּשְׁרוּת) என விவரிக்கப்படுகிறது. இங்கும் உண்ண தடை செய்யப்பட்ட உணவுகள் உள்ளன, அவை ட்ரீஃப் (Treyf) என அழைக்கப்படுகிறது.
யூத மதத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் (உண்பதற்கு), பாரம்பரிய யூத சட்டத்தின்படி கொல்லப்பட்டு, அவற்றின் இறைச்சி வெட்டப்படுகிறது. இதுவே கோஷர் இறைச்சி என அழைக்கப்படுகிறது.
இரண்டு மதங்களிலும், விலங்கு கொல்லப்படும் முறையில் சில ஒற்றுமைகள் உள்ளன.
கூர்மையான கத்தி பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற, அந்தந்த மதங்களைப் பின்பற்றும் ஒருவர் தான் விலங்கை கொல்ல வேண்டும்.
யூத சட்டம் ஸ்டன்னிங் முறையை பயன்படுத்துவதை உறுதியாக தடை செய்கிறது. ஹலாலைப் போலல்லாமல், கஷ்ருத் விதிகளின்படி தொடக்கத்தில் மட்டும் கடவுளின் பெயரைச் சொல்லி ஆசீர்வதித்தால் போதும். ஒவ்வொரு விலங்கை கொல்லும்போதும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
கஷ்ருத் விதிகளின்படி, ரத்தம், சையாட்டிக் நரம்பு மற்றும் குறிப்பிட்ட கொழுப்புகள் உட்பட கொல்லப்பட்ட விலங்கின் சில பகுதிகளை உண்பது யூதர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஹலால் விதிகளின் படி, இனப்பெருக்க உறுப்புகள், வேகஸ் நரம்புகள் மற்றும் ரத்தம் போன்ற சிலவற்றை உண்பது இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா?
பட மூலாதாரம், Getty Images
பிற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் ஹலால் முறையில் வெட்டப்பட்ட இறைச்சி ஆரோக்கியமானது என சில ஆய்வுகள் குறிப்பிட்டாலும், அதுகுறித்த விரிவான ஆய்வுகளோ தகவல்களோ இல்லை.
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஹலால் மற்றும் ஹலால் அல்லாத முறையில் வெட்டப்பட்ட கோழி இறைச்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், ஹலால் முறையில் கொல்லப்பட்ட கோழிகளின் உடலில் இருந்து ரத்தம் விரைவாக மற்றும் அதிக அளவில் வெளியேறியது என்றும், அதுவே ஹலால் அல்லாத முறையில் வெட்டப்பட்ட கோழிகளில் ரத்தம் வெளியேற கூடுதல் நேரம் தேவைப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது.
ஹலால் அல்லாத முறையில் வெட்டப்படும் இறைச்சியில் ரத்தம் கூடுதலாக எஞ்சியிருக்கும் என்றும், இது பாக்டீரியா எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், சீக்கிரமே இறைச்சி கெட்டுபோவதற்கும் வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறியது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இதுவரை ஹலால் இறைச்சியின் ஆரோக்கியத்தன்மை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்க பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி, “ஹலால் இறைச்சியா அல்லது சாதாரண இறைச்சியா என்பதை விட, வெட்டப்பட்ட இறைச்சி ரத்தம் இல்லாதவாறு நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதைத் தான் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பார்ப்பார்கள். எனவே சுத்தமான, கெட்டுப்போகாத இறைச்சி உடலுக்கு நல்லது. அவ்வளவு தான்” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு