• Fri. Nov 28th, 2025

24×7 Live News

Apdin News

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75ஆக அதிகரிப்பு!

Byadmin

Nov 28, 2025


ஹாங்காங் – தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (27) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கிலில் திடீரென தீப்பிடித்து, அத்தீ கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி, 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

ஆனால், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 36 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 300 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதேவேளை, கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்புஅடுக்குமாடி குடியிருப்பு

By admin