9
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததை தொடர்ந்து, அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் இந்த ஜலசந்தியில் ஏற்பட்ட அச்சுறுத்தலால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி உடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி வழங்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு அனுப்பலாம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு எரிபொருள் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 45 சதவீதம் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் இந்த கடல் பாதையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.