• Sat. Mar 14th, 2026

24×7 Live News

Apdin News

ஹார்மூஸ் நீரிணை குறித்து கடும் எச்சரிக்கை

Byadmin

Mar 14, 2026


ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் வெளியிட்ட எச்சரிக்கை அந்த நாட்டில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் ஈரான் தனது இராணுவ நடவடிக்கைகளை நேற்று முதல் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஈரானின் மிக முக்கியமான தீவு நகரமாக கருதப்படும் கார்க் தீவில் அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீவில் அமைந்திருந்த சில முக்கிய இராணுவ இலக்குகள் தாக்குதலில் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டபோது, ஈரானின் முக்கிய இடமாக கருதப்படும் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை தற்போது அழிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஹார்மூஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்லும் நிலைக்கு யாராவது இடையூறு ஏற்படுத்தினால், எண்ணெய் உள்கட்டமைப்புகள் குறித்து எடுத்துள்ள முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு சக்திவாய்ந்த மற்றும் நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும், தாம் குறிவைக்கும் இலக்குகளை பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழிப்போம் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களின் ரத்தத்தின் ஒவ்வொரு துளிக்கும் பழி தீர்க்கப்படும் எனவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. ஈரானின் எண்ணெய் உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் கார்க் தீவிலிருந்தே நடைபெறுவதால், அந்த இடத்தில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post ஹார்மூஸ் நீரிணை குறித்து கடும் எச்சரிக்கை appeared first on Vanakkam London.

By admin