பட மூலாதாரம், Rob Satloff
-
- எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
- பதவி, பிபிசி வேர்ல்ட் சர்வீஸ்
-
ஹோலோகாஸ்ட் (யூத இனப் படுகொலை) காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது. ஆனால், நாஜிக்கள் ஆக்கிரமித்த வட ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட போதிலும், ஓர் அரபு நாட்டில் யூதரைக் காப்பாற்றியதற்காக ஒரு அராபியர் கூட இதுவரை “நீதிமான்” என்று அங்கீகரிக்கப்படவில்லை.
“துனீசியாவில், ஒரு அரபு ரொட்டி விற்பனையாளர், ரேஷன் கார்டுகள் இல்லாத யூதர்களுக்காகத் தனது கடையில் ஒவ்வொரு நாளும் கூடுதல் உணவை விட்டுச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.”
“உணவோ பாலோ இல்லாத நிலையில், அரபுப் பெண்கள் யூதக் குழந்தைகளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலூட்டும் தாய்மார்களாக மாறினர்.”
“அல்ஜியர்ஸ் நகரில், பறிமுதல் செய்யப்பட்ட யூதச் சொத்துக்களின் மேற்பார்வையாளர்களாக உள்ளூர் முஸ்லிம்கள் பணியாற்றக் கூடாது என்று இஸ்லாமிய மதகுருமார்களால் ஒரு ஃபத்வா (மத உத்தரவு) பிறப்பிக்கப்பட்டது – அந்த உத்தரவுக்குப் பிறகு அதை மீறிய ஒரு அராபியரைக்கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.”
இவை அனைத்தும் அமெரிக்காவின் வாஷிங்டன் இன்ஸ்டிடியூட் செயல் இயக்குநர் ராப் சாட்லோஃப், இரண்டாம் உலகப் போரின்போது வட ஆப்பிரிக்கர்கள் யூதர்களுக்கு உதவியது குறித்துச் சேகரித்த கதைகளில் சிலவாகும்.
நாஜிக்கள் ஐரோப்பாவில் 60 லட்சத்துக்கும் அதிகமான யூதர்களைக் கொன்றனர், ஆனால் பிரெஞ்சு விச்சி (Vichy) ஆட்சியின் ஆதரவுடன் வட ஆப்பிரிக்காவிலும் யூத சமூகங்களைத் துன்புறுத்தினர். இது ஐரோப்பாவை விடச் சிறிய அளவில் இருந்தாலும், மரணம், இடப்பெயர்வு மற்றும் சொத்து இழப்புகளுக்கு வழிவகுத்தது.
“முற்றிலுமாக அழித்தொழிப்பதைத் தவிர, ஐரோப்பாவில் யூதர்களுக்கு நடந்த அனைத்தும் அரபு நாடுகளிலும் நடந்தன,” என்று சாட்லோஃப் பிபிசி உலக சேவையில் கூறுகிறார். அமெரிக்க ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தின்படி, மொராக்கோ, அல்ஜீரியா, துனீசியா மற்றும் லிபியாவில் சுமார் 5 லட்சம் யூதர்கள் வாழ்ந்தனர். யூதர்களின் இறப்பு எண்ணிக்கை 4,000 முதல் 5,000 வரை இருக்கலாம் என்று சாட்லோஃப் மதிப்பிடுகிறார்.
எல்லாவற்றையும் பணயம் வைத்தனர்
பட மூலாதாரம், Family handout
குறிப்பாக மூன்று அராபியர்கள் இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையமான யாட் வஷெம்மால் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள் என்று அவர் கூறுகிறார்.
நவம்பர் 1942 முதல் மே 1943 வரை நாஜிக்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரே வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் யூதர்கள் மஞ்சள் நட்சத்திர குறிகளை அணிய நிர்ப்பந்திக்கப்பட்டனர். நாஜிக்கள் அனைத்து யூத ஆண்களையும் கட்டாய உழைப்புக்கு அழைத்தபோது, ஜோசப் நாக்காஷ் என்பவர் தப்பியோடினார். ஒரு அரபு மனிதர் தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் தனக்கு அடைக்கலம் கொடுத்ததை பல தசாப்தங்களுக்குப் பிறகு சாட்லோஃபிடம் அவர் தெரிவித்தார்.
“1942 டிசம்பரில், நாஜிக்களின் எஸ்.எஸ் படைப்பிரிவு இளம் யூத ஆண்களைக் கூண்டோடு பிடிப்பதற்கான ஒரு தேடுதல் வேட்டையை ஒருங்கிணைத்தது. எஸ்.எஸ் படையினரின் பட்டியலில் இருந்த ஒருவரை நீங்கள் மறைத்து வைத்து பிடிபட்டால், அது ஒரு பயங்கரமான குற்றமாகக் கருதப்பட்டது,” என்று சாட்லோஃப் கூறுகிறார்.
“[நாக்காஷ்] பிடிபடுவதிலிருந்து தப்பிப்பதற்காக அந்தத் தேடுதல் வேட்டையிலிருந்து ஓடினார், ஜெர்மானியர்களிடம் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க விரும்பிய அவர், இறுதியாகத் தனது பகுதியில் இருந்த ஒரு ஹம்மாமிற்கு (Hammam – பொதுக் குளியல் இடம்) வந்து சேர்ந்தார்.”
அதன் உரிமையாளர் ஹம்ஸா அப்துல் ஜலீல், நாக்காஷைப் பாதுகாப்பதாகவும், தனது பாதாள அறையில் அவரை மறைத்து வைப்பதாகவும் கூறினார்.
“காப்பாற்றப்பட்ட அந்த மனிதரை நான் சந்தித்தது மட்டுமல்லாமல், மீண்டும் துனிஸிற்குச் சென்று அந்த ஹம்மாமையும் கண்டுபிடித்தேன்; அவரைக் காப்பாற்றிய மனிதரின் மகனையும் சந்தித்தேன்,” என்று சாட்லோஃப் பிபிசி உலக சேவையிடம் கூறுகிறார். “அவருக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருந்தது. இது ஒரு அற்புதமான கதை, இதை இரு தரப்பிலிருந்தும் (காப்பாற்றியவர் மற்றும் காப்பாற்றப்பட்டவர்) நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.”
துனிஸின் முன்னாள் மேயரான சி அலி சக்கத் என்பவரும், தலைநகருக்கு வெளியே சுமார் 55 கி.மீ தொலைவில் உள்ள ஜக்வான் பள்ளத்தாக்கில் இருக்கும் தனது பண்ணை வீட்டில், யூத கட்டாய உழைப்பு முகாமிலிருந்து தப்பி வந்த ஒரு குழுவினருக்கு உணவும் இருப்பிடமும் அளிப்பதற்காகத் தனது எல்லாவற்றையும் பணயம் வைத்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘தீமையை எதிர்த்தவர்’
ஆனால் சாட்லோஃபிடம் உள்ள கதைகளில் அவருக்கு மிகவும் பிடித்தமானது கலீத் அப்துல்-வஹாப்பின் கதை. ஒரு நாஜி அதிகாரி, அந்தத் துனீசியர் (அப்துல்-வஹாப்) அறிந்த ஒரு யூதப் பெண்ணின் மீது தான் கண் வைத்திருப்பதாகக் கூறியதை அப்துல்-வஹாப் ஒட்டுக் கேட்டார்.
நள்ளிரவில், அப்துல்-வஹாப் மறைவிடத்தில் இருந்த அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தையும் மீட்டு, துனிஸிற்கு வெளியே 30 கி.மீ தொலைவில் உள்ள தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று, அவர்களைத் தனது கொட்டகைகளிலும் தொழுவங்களிலும் மறைத்து வைத்தார். ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே – நாஜி ஆக்கிரமிப்பு முடிவதற்குள், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கட்டாய உழைப்புக்கு அனுப்பப்பட்ட பிறகு, அவர் 20 பெண்களையும் குழந்தைகளையும் மறைத்து வைத்திருந்தார்.
அவர்களில் மூன்று பேர் பின்னர் அப்துல்-வஹாப்பை அங்கீகரிக்குமாறு யாட் வஷெம் மையத்திடம் கோரினர் – ஆனால் அந்த கோரிக்கை இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது.
அவர் ஒரு “மேன்மையான மனிதர்” என்று அந்த மையம் கூறியது. சாட்சியங்கள் அவரது கருணையை விவரித்தன. ஆனால் யூதர்களுக்கு இடமளிப்பது சட்டப்பூர்வமாகவே இருந்தது என்றும், அவர்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுக்கு தெரிந்தே அப்துல்-வஹாப்பின் பண்ணையில் தங்கியிருந்தனர் என்றும் அந்த மையம் கூறியது. இதனால், ஹோலோகாஸ்ட் காலத்தில் நாஜிக்களின் அழித்தொழிப்பிலிருந்து யூதர்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரைத் தியாக உணர்வுடன் பணயம் வைத்த யூதரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் ‘தேசங்களுக்கு மத்தியிலான நீதிமான்கள்’ என்ற பட்டத்திற்கு அவர் தகுதியற்றவரானார்.
“துனீசியாவில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்ததால், ‘இறுதித் தீர்வு’ [நாஜிக்களின் அழித்தொழிப்பு கொள்கை] அங்கு செயல்படுத்துவதற்கான திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறவில்லை,” என்று யாட் வஷெம் குறிப்பிட்டது.
டிசம்பர் 2011-ல், தனது 13 வயதில் அப்துல்-வஹாப்பால் மறைத்து வைக்கப்பட்ட ஈவா வைசல், இந்த முடிவு குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார்.
“அப்துல்-வஹாப் தீமையை எதிர்த்து என்னைக் காப்பாற்றியதாலும், என் குடும்பத்தின் மற்ற அதிர்ஷ்டசாலி உறுப்பினர்களைக் காப்பாற்றியதாலும்தான் என்னால் நீண்ட, முழுமையான வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார். “அவரது கதையைச் சொல்ல யாரும் எஞ்சியிருக்காத நிலை ஏற்படுவதற்கு முன்பு, யாட் வஷெம் அவரது விஷயத்தை மறுபரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன்.”
பட மூலாதாரம், Getty Images
‘சௌகரியமான அரசியல் போக்கு’
ஏற்கனவே ‘ தேசங்களுக்கு மத்தியிலான நீதிமான் ‘ பட்டம் வழங்கப்பட்ட 28,000-க்கும் மேற்பட்டவர்களில், சுமார் 70 பேர் முஸ்லிம்கள், ஆனால் ஒருவர் மட்டுமே அராபியர். அவர்தான் எகிப்திய மருத்துவர் முகமது ஹெல்மி. இவர் பெர்லினில் ஒரு இளம் யூதப் பெண்ணை மறைத்து வைத்ததோடு அவரது குடும்பத்திற்கும் உதவினார்.
சாட்லோஃபின் கதைகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாலும், அவை ஒரு சௌகரியமான அரசியல் போக்குக்கு எதிராகச் செல்கின்றன என்று அமெரிக்காவின் மன்ஹாட்டன் பல்கலைக்கழக ஹோலோகாஸ்ட், இனப்படுகொலை மற்றும் மதங்களுக்கு இடையிலான கல்வி மையத்தின் இயக்குநர் மெஹ்னாஸ் அப்ரிடி கூறுகிறார்.
“இஸ்ரேலில் உள்ள சிலருக்கு, அரபு மீட்பாளர்களை அங்கீகரிப்பது சமகால அரசியலில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அரபு மண்ணில் நாஜிக்களிடமிருந்து யூதர்களுக்கு மீட்பு தேவைப்பட்டது என்பதை ஒப்புக்கொள்வது, அரபு உலகில் உள்ள சிலருக்கு, அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக மாறியுள்ள ‘ஹோலோகாஸ்ட் மறுப்பு’ மற்றும் அதன் தீவிரத்தைக் குறைக்கும் போக்கினை வலுவிழக்கச் செய்கிறது,” என அப்ரிடி பிபிசி உலக சேவையிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘நெருங்கி வந்த ஹோலோகாஸ்ட்’
மொராக்கோ மன்னரை அங்கீகரிக்க வேண்டும் என்று அப்ரிடி தானே கோரிக்கை விடுத்து வருகிறார். “நாஜி ஆதரவு விச்சி அரசாங்கத்தின் கீழ், மொராக்கோ மற்றும் டாஞ்சியர்ஸ் பகுதிகளில் உள்ள யூதர்களை கட்டாய உடல் உழைப்பு முகாம்களில் அடைக்க அறிவுறுத்தப்பட்டது. மொராக்கோ மன்னர் ஐந்தாம் முகமது, யூதர்களுக்கு எதிரான இனச் சட்டங்களைச் செயல்படுத்த அல்லது மொராக்கோ யூதர்களைப் பிரான்ஸிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்தார்,” என்று அவர் கூறுகிறார்.
யாட் வஷெம் இணையதளத்தில், அதன் ஹோலோகாஸ்ட் படிப்புகளுக்கான சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த (தற்போது ஓய்வு பெற்ற) ஜாக்கி மெட்ஸ்ஜர் எழுதுகையில்: “ஹோலோகாஸ்ட் என்றால் பெருமளவிலான கொலை என்று பொருளென்றால், வட ஆப்பிரிக்காவில் ஒரு ‘ஹோலோகாஸ்ட்’ நிகழவில்லை. இந்த காலத்தில் யூதர்களின் வரலாறு, நிறைவேறாமல் போன ஒரு ‘நெருங்கி வந்த ஹோலோகாஸ்ட்’ அச்சுறுத்தல் என்ற தலைப்பின் கீழ் சரியாக விவாதிக்கப்பட வேண்டும்.”
ஆனால் பிபிசி உலக சேவைக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அந்த மையம் “வட ஆப்பிரிக்கா ஹோலோகாஸ்டின் ஒரு பகுதி” என்று ஒப்புக்கொண்டது.
“ஐரோப்பிய யூதர்களுக்குத் திட்டமிட்ட அதே விதியைத்தான், அங்கிருந்த யூதர்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கின் யூதர்களுக்கும் நாஜிக்கள் திட்டமிட்டிருந்தனர்,” என்று அது கூறியது. “போலந்து விடுவிக்கப்பட்ட போது [1943-க்கு பதிலாக 1945] வட ஆப்பிரிக்கா விடுவிக்கப்பட்டிருந்தால், அந்த யூதர்களில் பெரும்பாலோர் உயிர் பிழைக்காமல் போயிருக்கலாம்.”
பட மூலாதாரம், Getty Images
அங்கீகாரத்திற்கான ஒவ்வொரு பரிந்துரையும் சார்பு இல்லாமல், ஒரே அளவிலான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஆனால் தற்போது புதிய விண்ணப்பங்கள் எதுவும் வராததால் மதிப்பீட்டுக்குழு “அரபு மீட்பாளர்களின் விஷயம் எதையும் விவாதிக்கவில்லை” என்றும் அது மேலும் கூறியது.
இருப்பினும் அப்துல்-வஹாப் போன்றவர்களின் கதைகள் செல்வாக்கு பெற்று வருகின்றன என்று அப்ரிடி கூறுகிறார். “2009 ஆம் ஆண்டில், வாஷிங்டனில் உள்ள ‘அடாஸ் இஸ்ரேல் நீதிமான்களின் தோட்டம்’ மற்றும் இத்தாலியின் மிலனில் உள்ள ‘உலகளாவிய நீதிமான்களின் தோட்டம்’ ஆகிய இரண்டிலும் அவருக்கு ஒரு மரம் அர்ப்பணிக்கப்பட்டது. அவரது மகள் ஃபைஸா முன்னிலையில் அந்த விழா நடைபெற்றது,” என்று அப்ரிடி கூறுகிறார்.
சாட்லோஃபும் இதை ஒப்புக்கொள்கிறார். “இந்தக் காலக்கட்டத்தில் யூதர்களைப் பாதுகாக்க முன்வந்த அந்த அராபியர்களின் தைரியத்தையும் வீரத்தையும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏராளமான அமைப்புகளும் நிறுவனங்களும் அங்கீகரித்திருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
மேலும் பல ஆதாரங்களுடன், எதிர்காலத்தில் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்கான கூடுதல் வாய்ப்புகள் இருக்கும் என்று சாட்லோஃப் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு