சர்வாதிகாரிகள் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் கூட்டத்தை நினைத்தே அச்சம் கொள்ளும் நபர்களாக இருப்பார்கள்.
மற்றொரு உண்மையும் கூட அவர்களைப் பற்றி இருக்கிறது. அது, அனைத்து சர்வாதிகாரிகளுக்கும் ஒரு கெடு உண்டு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் வீழ்ச்சி நடந்தே தீரும்.
வரலாறு நெடுக சர்வாதிகாரிகள் உருவாகிக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். சீனாவின் மாவோ, பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், இராக்கின் சதாம் ஹூசைன், லிபியாவின் கடாஃபி, உகாண்டாவின் இடி அமின் எல்லாம் இதற்கு ஒரு உதாரணம்.
பல நாடுகளுக்கான இந்திய தூதுவராக பணியாற்றிய ராஜீவ் டோக்ரா சமீபத்தில், ஆட்டோகிராட்ஸ், கரிஸ்மா, பவர் அண்ட் லைவ்ஸ் (Autocrats, Charisma, Power and Their Lives) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
உலக சர்வாதிகாரிகளின் மனநிலை, பணியாற்றும் முறைகள் மற்றும் வாழ்க்கைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.
ரோமானியாவில் இந்தியாவுக்கான தூதராக தான் பணியாற்ற சென்ற போது, அந்நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலே இறந்து பத்து ஆண்டுகள் ஆன பின்பும் கூட அந்நாட்டின் மக்கள் தங்களின் நிழலைக் கண்டே அஞ்சினார்கள் என்று கூறுகிறார் டோக்ரா.
தங்களை யாரேனும் பின் தொடருகிறார்களா என்ற அச்சத்திலேயே அவர்கள் பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தனர் என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ராஜீவ் டோக்ரா.
பூங்காக்களில் நடந்து கொண்டிருந்தால் கூட, அங்கே உள்ள இருக்கையில் யாரேனும் அமர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்று நோட்டம் விடுவார்கள். யாரேனும் அங்கே செய்தித்தாள்கள் படித்துக் கொண்டிருந்தால், அதில் ஓட்டை ஏதேனும் இருக்கிறதா என்றும் நோட்டம் விடுவதுண்டு என்கிறார் டோக்ரா.
எதிர்ப்பை எதிர்கொள்ளவே முடியாத சர்வாதிகாரிகள்
“நாங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டோம். அரசு எங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்தது” என்று ரோமானியாவின் புகழ்பெற்ற நடிகர் ஐயன் கரமித்ரோ கூறியதாக தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் டோக்ரா.
“நாங்கள் யாரைப் பார்க்க வேண்டும், யாரை பார்க்கக் கூடாது, யாருடன் பேச வேண்டும், எவ்வளவு நேரம் பேச வேண்டும், என்ன உண்ண வேண்டும், எவ்வளவு உண்ண வேண்டும், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது என்று அனைத்தையும் நிர்வாகமே தீர்மானித்தது. உங்களுக்கு எது சரியென்று நிவாகம் நினைக்கிறதோ அதையே தேர்வு செய்தது,” என்று நடிகர் ஐயன் கரமித்ரோ கூறியதாக அவர் குறிப்பிடுகிறார்.
இளம் வயது வாழ்க்கையும் ஒரு காரணம்
சர்வாதிகாரிகளின் குழந்தைப் பருவமும், இளம் வயது நிகழ்களுமே அவர்களின் கொடூர போக்குகளுக்கு காரணம்.
13 ஃபேக்ட்ஸ் அபவுட் பெனிட்டோ முசோலினி (13 Facts About Benito Mussolini) என்ற கட்டுரையை எழுதிய லெவின் அரெடி, ஆடம் ஜேம்ஸ், “முசோலினியின் குழந்தைப் பருவம் மிகவும் கடினமாக இருந்தது. அவரை மாற்ற அவருடைய பெற்றோர்கள் கத்தோலிக்க பள்ளியில் சேர்த்தனர். மிகவும் கண்டிப்பான சூழலை கொண்ட உண்டு, உறைவிடப் பள்ளி அது. அந்த பள்ளியும் கூட அவரை ஒழுக்கத்தின் பக்கம் திருப்பவில்லை,” என்று கூறியுள்ளனர்.
“பேனா கத்தியால் சக மாணவனை தாக்கிய காரணத்திற்காக அவர் 10 வயதில் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 20-வது வயதில், பெண் தோழிகள் உட்பட சிலரையும் அவர் கத்தியால் தாக்கியிருக்கிறார்,” என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டாலினும் கூட இளம் வயதில் சச்சரவுகளை ஏற்படுத்தும் நபராக இருந்திருக்கிறார். பல கடைகளை தீக்கிரையாக்கியுள்ளார்.
கட்சி செலவுக்கு தேவையான பணத்தைப் பெற அவர், பலரை கடத்தியதும் உண்டு. பிறகு அவருடைய பெயரை ஸ்டாலின் என்று மாற்றிக் கொண்டார். ‘இரும்பில் உருவாக்கப்பட்டது ‘ என்பதே அதன் பொருள்.
இந்த இரண்டு உதாரணங்களுக்கும் மாறாக, வட கொரியாவின் கிம் ஜோங் உன் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மிகவும் சொகுசாக வாழ்ந்தவர். அவரை பராமரிக்க ஒரு வேலையாட்கள் குழுவே இருந்தது.
ஐரோப்பாவில் எந்த ஒரு பொம்மைக் கடையில் இருக்கும் பொம்மைகளைக் காட்டிலும் கூடுதலான பொம்மைகள் அவரிடம் உண்டு. அவருடைய வீட்டுத் தோட்டத்தில் குரங்குகளும், கரடிகளும் பொழுதுபோக்கிற்காக கூட்டில் அடைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தனை சொகுசான வாழ்க்கை இருந்தும் கூட, கிம் மற்ற சர்வாதிகாரிகளைப் போன்றே பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்து கொண்டிருக்கிறார்.
அதிகாரத்தை தக்க வைக்கவே முன்னுரிமை
சர்வாதிகாரிகளின் கைகளில் அதிகாரம் வந்ததும், எந்த ஒரு சூழலிலும் அதனை தக்கவைத்துக் கொள்ளவே அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
“அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள மிக முக்கியமானது, சர்வாதிகாரிகளின் அடுத்த நகர்வு எப்படிப்பட்டது என்று அனுமானிக்க இயலாதபடி நடந்து கொள்வது. இரண்டாவது ஊடகங்களை மொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது,” என்று எழுதுகிறார் டோக்ரா.
“அனைத்து இடங்களிலும் அவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மேலும், கடவுளைப் போன்று எங்கிருந்தாலும் மக்களை பார்க்கும் வகையில் அவர்கள் இருக்க விரும்புவார்கள். யாரேனும் அவர்களுக்கு எதிராக செயல்பட விரும்பினால் அவர்கள் உடனடியாக ஒடுக்கப்பட்டு விடுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.
தி நியூ ஸ்டேட்ஸ்மன் நாளிதழில், செப்டம்பர் 20, 2019 அன்று வெளியான தி கிரேட் பெஃபார்மர்ஸ்: ஹவ் இமேஜ் அண்ட் தியேட்டர் கிவ் டிக்டேட்டர்ஸ் தேர் பவர் (The Great Performers: How Image and Theatre Give Dictators Their Power) என்ற கட்டுரையில், “விமானம் ஓட்டக் கற்றுக் கொள்ளும் புகைப்படம், தன்னை விமர்சிக்கும் பல தலையங்கங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முசோலினிக்கு தெரியும்,” என்று சியூ ப்ரோதோ குறிப்பிட்டிருக்கிறார்.
“தன்னுடைய முதல் வானொலி நேரலைக்கு பிறகு 1925-ஆம் ஆண்டு, நான்காயிரம் வானொலிப் பெட்டிகளை பள்ளிகளுக்கு இலவசமாக அவர் வழங்கியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியை கேட்பதற்காக கிட்டத்தட்ட 8 லட்சம் வானொலிப் பெட்டிகளும், ஒலிபெருக்கிகளும் சாலைகள் எங்கும் பொருத்தப்பட்டன. அவருடைய உருவம் சோப்புகளிலும் கூட பொறிக்கப்பட்டிருந்தது. குளியல் அறைகளிலும் கூட அவரின் முகத்தை மக்களால் காண முடியும். அவருடைய அலுவலக அறையில் இரவிலும் கூட விளக்குகள் எரிந்த வண்ணம் இருக்கும் அப்போது தான் மக்கள், அவர் விடிய விடிய வேலை பார்க்கிறார் என்று நினைத்துக் கொள்வார்கள் என்று” சியூ தன்னுடைய கட்டுரையில் எழுதியுள்ளார்.
விநோதமான உணவு பழக்கங்கள்
தீவிரமான சைவ உணவு பழக்கவழக்கங்களைக் கொண்டவர் ஹிட்லர் என்று ஒரு சிலருக்கே தெரியும். அவரின் இறுதி காலகட்டத்தில் அவர் வெறும் சூப்பையும் உருளைக்கிழங்குகளையும் மட்டுமே உணவில் சேர்த்துக் கொண்டார்.
சுறாவின் செதில்களையும், நாய் இறைச்சி சூப்பையும் அதிகமாக விரும்பி உண்ணக்கூடியவராக இருந்தார் இரண்டாம் கிம் ஜோங்.
தி டெய்லி பீஸ் இதழில் ஜூலை 14, 2017ம் ஆண்டு வெளியான, தி வே டூ அண்டர்ஸ்டாண்ட் கிம் ஜோங் II வாஸ் த்ரோ ஹிஸ் ஸ்டொமெக் (The Way to Understand Kim Jong Il Was Through His Stomach) என்ற கட்டுரையில், பார்பரா டெமிக், இரண்டாம் கிம் ஜோங் விசித்திரமாக, ஒரு பெண்கள் குழுவை கூடவே வைத்திருப்பார் என்று குறிப்பிட்டிருந்தார்.
“அவருடைய தட்டில் இருக்கும் உணவில் அனைத்து அரிசிகளும் ஒரே அளவில், நிறத்தில், வடிவில் இருப்பதை உறுதி செய்வதே அவர்களின் பணி. கோக்னாக் வகை மதுபானம் அவருடைய விருப்பமான பானமாக இருந்தது. ஹெனெஸி கோக்னாக் மதுபானத்தை அதிகமாக வாங்கும் வாடிக்கையாளராக அவர் திகழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறது அந்த கட்டுரை.
போல் போட், நல்ல பாம்பின் இதயத்தை விரும்பி உண்பார் என்று கூறும் டோக்ரா, தன்னுடைய புத்தகத்தில் போலின் சமையல்காரர் அவரிடம் கூறியதை குறிப்பிட்டிருக்கிறார். “போல் போட்டிற்காக நான் நல்ல பாம்பை சமைத்து தருவேன். முதலில் பாம்பை கொன்று, அதன் தலையை வெட்டி, மரத்தில் தொங்கவிடுவேன். அப்போது தான் அதன் விஷம் முறியும்,” என்று அவர் டோக்ராவிடம் கூறியுள்ளார்.
“பிறகு பாம்பின் ரத்தத்தை ஒரு குவளையில் சேகரித்து வெள்ளை ஒயினுடன் பரிமாறுவேன். சிறிது சிறிதாக வெட்டப்பட்ட பாம்பின் இறைச்சியை எலுமிச்சைப் புல், இஞ்சி சேர்த்து ஒரு மணி நேரம் வேக வைத்து போல் போட்டிற்கு தருவேன்,” என்று அவர் கூறியிருக்கிறார்.
பச்சை பூண்டு, ஆலிவ் எண்ணெய் கொண்டு செய்யப்படும் சாலட் முசோலினிக்கு மிகவும் பிடிக்கும். அவரின் இதயத்திற்கு அது நல்லது என்று அவர் நம்பினார்.
“அவருடைய வாயில் பூண்டின் நாற்றம் வீசியதால் அவருடைய மனைவி, உணவுக்கு பிறகு வேறொரு அறைக்கு சென்றுவிடுவார்,” என்று எழுதியுள்ளார் தோக்ரா.
ஹிட்லரின் உணவை பரிசோதிக்க ஒருவர்
தன்னுடைய எதிராளிகளை கொன்று அவர்களையே உண்ணுபவர் என்று உகாண்டாவின் அதிபர் இடி அமின் பற்றிய பல்வேறு வதந்திகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே பரவி வந்தன.
டிக்டேட்டர்ஸ் வித் ஸ்ட்ரேஞ்ச் ஈட்டிங் ஹேபிட்ஸ் (Dictators with Strange Eating Habits) என்ற கட்டுரையை எழுதிய அனிதா சுரேவிக்ஸ், “,மனிதக் கறியை தின்றது உண்டா என்று கேட்ட போது, எனக்கு மனிதக்கறி பிடிக்காது. ஏனென்றால் அது மிகவும் உப்புச்சுவையை கொண்டது என்று கூறினார் இடி அமின்,” என்று எழுதியிருக்கிறார்.
பாலுணர்வை தூண்டும் என்ற நம்பிக்கையில் நாள் ஒன்று 40 ஆரஞ்சுகளை உண்பாராம் இடி அமின்.
ஹிட்லர் தன்னுடைய உணவை உட்கொள்வதற்கு முன்பு, உணவை உட்கொண்டு பரிசோதனை மேற்கொள்பவர்கள் உண்பது வழக்கம்.
அவ்வாறு பணியாற்றிய மார்கோட் வோல்ஃப், 2013ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று தி டென்வர் போஸ்டில், “ஹிட்லரின் உணவுகள் மிகவும் ருசியானவை. சிறந்த உணவுப்பொருட்களைக் கொண்டு அவருக்கான உணவு சமைக்கப்படும்,” என்று எழுதியிருந்தார்.
“பாஸ்தா அல்லது அரிசு கொண்டு சமைக்கப்பட்ட உணவுகள் எங்களுக்கு வழங்கப்படும். ஆனால் அதனை மகிழ்ச்சியாக உட்கொள்ள முடியாது. விஷம் இருக்குமோ என்ற அச்சத்தில் தான் அதனை உட்கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும், இன்று தான் எங்கள் வாழ்க்கையின் இறுதி நாள் என்று தோன்றும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பல்லே துலக்காத மாவோ
விநோதமான பழக்கங்களுக்காக அறியப்படுபவர்கள் தான் சர்வாதிகாரிகள். சீனாவின் மாவோ சே துங் அவருடைய வாழ்நாளில் பல் துலக்கியதே இல்லை.
மாவோவின் மருத்துவர் ஜிசூய் லி எழுதிய ‘ப்ரைவேட் லைஃப் ஆஃப் சேர்மன் மாவோ’ என்ற புத்தகத்தில், மாவோ பல் விலக்குவதற்கு பதிலாக க்ரீன் டீயால் வாய் கொப்பளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் மாவோ. அவருடைய இறுதி காலத்தில் அவரின் பற்கள் அனைத்தும் பச்சையாக மாறிவிட, ஈறுகளில் தொற்று ஏற்பட்டது,” என்றும் எழுதியிருக்கிறார் லி.
அவரை பல் துலக்கும் படி மருத்துவர் அறிவுறுத்திய போது, அவர் அதற்கு, “சிங்கங்கள் எப்போதும் பல் துலக்கியது இல்லை. ஆனால் அதன் பற்கள் ஏன் கூர்மையாக இருக்கின்றன?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அவர்.
மியான்மரை 1988-ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த ஜெனரல் நே வினுக்கு சூதாடுவதும், கோல்ஃப் விளையாடுவதும், பெண்களும் பிடிக்கும். எளிதில் கோபம் அடையக் கூடியவராக அவர் இருந்தார்.
“ஒரு முறை ஜோதிடர் ஒருவர், அவருக்கு ராசியான எண் 9 தான் என்று கூறியிருக்கிறார். அதன் விளைவாக மியான்மரில் புழக்கத்தில் இருந்த அத்தனை 100 க்யாத் நோட்டுகளும் திரும்ப பெறப்பட்டு, 90 க்யாத் நோட்டுகளை வெளியிட்டவர் வின்” என்று ராஜிவ் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அவரின் அந்த முடிவால் மியான்மரின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்தனர்.
அல்பேனிய சர்வாதிகாரியின் தந்திரம்
1944ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை அல்பேனியாவை ஆட்சி செய்திருக்கிறார் என்வெர் ஹாக்ஸ்ஹா.
அவருடைய நாடு தாக்குதலுக்கு ஆளாகும் என்ற அச்சம் அவர் மத்தியில் இருந்தது. அந்த தாக்குதலில் இருந்து அவரை பாதுகாத்துக் கொள்ள நாடு முழுவதும் 75 ஆயிரம் பதுங்குக் குழிகள் உருவாக்கப்பட்டன.
அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி அவருக்கு சூனியம் வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில், பணத்தாள்களில் அவருடைய புகைப்படத்தை அச்சிட மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்வெர்.
என்வெர் ஹாக்ஸ்ஹா: தி ஐரன் ஃபிஸ்ட் ஆஃப் அல்பேனியா என்ற புத்தகத்தில் ப்லெண்டி ஃபாவ்ஜியூ, “அவரை யாராவது கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சம் அவரிடம் இருந்ததால் அவரைப் போன்றே தோற்றம் கொண்ட ஒருவர் ரு கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டார். என்வெரைப் போலவே மாற்றுவதற்காக சில ‘ப்ளாஸ்டிக் சர்ஜரிகள்’ செய்யப்பட்டன. அந்த நபருக்கு என்வெரைப் போல நடக்க கற்றுத்தரப்பட்டது. சில தொழிற்சாலைகளை அவர் திறந்து வைத்திருக்கிறார். மக்கள் மத்தியில் உரையாற்றியும் இருக்கிறார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசை கொண்ட சர்வாதிகாரிகள்
துர்க்மேனிஸ்தான் நாட்டை ஆண்ட சர்வாதிகாரி சபர்முரத் நியாஜோவ், அவருடைய ஏழ்மையான நாட்டின் தலைநகரில் 50 அடி உயரம் கொண்ட, தங்கத் தகடு பொறுத்தப்பட்ட சிலையை நிறுவினார்.
ருஹ்னாமா என்ற புத்தகத்தை எழுதிய அவர், இந்த புத்தகத்தை முழுமையாக மனப்பாடம் செய்யும் நபர்களுக்கே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
பொது நிகழ்வுகளில் இசை இசைப்பதற்கு தடை விதித்த அவர், தொலைக்காட்சிகளுக்கும் தடை விதித்திருக்கிறார்.
ஹைத்தியின் ஃபிரான்கோய்ஸ் துவெலியெர் மூட நம்பிக்கைகளை கொண்டவர். நாட்டில் உள்ள அனைத்து கறுமை நிற நாய்களையும் கொல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
கொடூரமான இடி அமின்
“70களில் உகாண்டாவை ஆட்சி செய்த இடி அமின், தன்னுடைய எதிராளிகளை கொன்று அவர்களின் தலைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கின்றேன் என்று கூறியுள்ளார்,” என்று டோக்ரா தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
எட்டு வருட ஆட்சி காலத்தில், வங்கிப் பணியாளர்காள், மேதைகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் உட்பட 80 ஆயிரம் பேரை அவர் கொன்றிருக்கிறார் என்று அவர் எழுதியிருக்கிறார்.
அல்பேனியாவின் என்வெரும் அவருடைய எதிராளிகளை விட்டுவைக்கவில்லை. “மேதைகள் அனைவரையும் அவர் கொன்றுவிட்டார். அவருடைய இறப்பின் போது பொலிட்பீரோவில் பள்ளிப்படிப்பிற்கு மேலே படித்தவர்கள் என்று ஒருவரும் இல்லை,” என்று ப்லெண்டி கூறியுள்ளார்.
அல்பேனியாவில், பெற்றோர்கள் தங்கள் விருப்பம் போல் குழந்தைகளுக்கு பெயர் கூட வைக்க முடியாத சூழல் நிலவியது.
சதாம் ஹுசைனின் துப்பாக்கிப் படை
அதே போன்று, 1979ம் ஆண்டு, ஆட்சிக்கு வந்த 7 நாட்களுக்கு பிறகு, இராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் பாத் சோஷலிச கட்சி தலைவர்களை ஜூலை 22ம் தேதி ஆலோசனைக்காக அழைத்திருக்கிறார்.
அவரின் உத்தரவின் பெயரில் அந்த நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 66 தலைவர்களும் துரோகிகள் என்று கண்டறியப்பட்டுள்ளனர் என்று அறிவித்திருக்கிறார் சதாம் ஹுசைன்.
சதாம் தி சீக்ரெட் லைஃப் என்ற புத்தகத்தில் கான் காலின், “தலைவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டதும் அவர்களின் இருக்கைக்கு பின்னால் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். முடிவில் அந்த அவையில் எஞ்சியிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள்.
மிச்சம் இருந்தவர்கள் அனைவரும் சதாமிற்கு தன்னுடைய விசுவாசத்தை செலுத்தினார்கள். அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட 22 நபர்களும் வரிசையாக நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்பினார் சதாம் ஹுசைன்” என்று எழுதியிருக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு