இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (Hizb-ut-Tahrir) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 3) அன்று கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஐ.எஸ் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் சதிவேலைகளில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக என்.ஐ.ஏ கூறியுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கைதான நபர்களின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பின் மீதான குற்றச்சாட்டு என்ன? கைதான நபர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் என்ற அமைப்பை தடை செய்வதாக கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. முன்னதாக, பாகிஸ்தான், எகிப்து, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளன.
ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததாகக் கூறி சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முனைவர் ஹமீது உசேன் உள்பட நான்கு பேர் மீது கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்.ஐ.ஏ அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர் ஒன்றை பதிவு செய்தனர்.
இதற்கு அடிப்படையாக கடந்த ஆண்டு மே மாதம் ஹமீது உசேன் மீது தமிழக காவல்துறை பதிவு செய்த வழக்கு ஒன்று காரணமாக அமைந்தது.
அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக ஹமீது உசேனின் பேச்சுகள் அமைந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் முனைவர் ஹமீது உசேன் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வழக்கின் பின்னணியை அடிப்படையாக வைத்தே ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
திருவாரூரில் சோதனை
இந்தநிலையில், சென்னை மற்றும் மன்னார்குடி உள்பட ஆறு இடங்களில் கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 3) தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை பாவா என்ற பாவா பக்ரூதீன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த சோதனைக்குப் பிறகு பாவா பக்ரூதீனை என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, பாவா பக்ரூதீன் வீட்டில் 2022 ஆம் ஆண்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி கைது செய்தனர். “இவர் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததாக” என்.ஐ.ஏ கூறியுள்ளது.
அதேநாளில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் வசிக்கும் கபீர் அகமது அலியார் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், மண்ணிவாக்கத்தில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
என்.ஐ.ஏ வெளியிட்ட விளக்கம்
இவ்விரு சோதனைகளிலும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், கைது சம்பவங்கள் தொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை திங்கள் கிழமையன்று தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (HUT) அமைப்பின் சித்தாந்தங்களை ரகசிய சொற்பொழிவுகள் மூலமாக பரப்பி வந்ததாக என்.ஐ.ஏ குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், ஜிகாத் மூலம் இந்திய அரசைக் கலைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள என்.ஐ.ஏ, ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பின் அடிப்படைவாத, பழைமைவாத, பயங்கரவாத கொள்கைகளால் இவர்கள் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் அமைப்பாக இது உள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாகவும் கூறியுள்ளது.
இதன் பின்னணியில் சர்வதேச அளவில் இணைந்து செயல்படுவோர், ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு நிதி அளிப்போர் ஆகியோரை கண்டறிவது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
பாவா பக்ருதீன் குடும்பத்தினர் சொல்வது என்ன?
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் பாவா பக்ருதீனின் தாயார் ராபியத்துல் பசிரியா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “என்.ஐ.ஏ கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. தற்போது கூறப்படும் இதே குற்றச்சாட்டின் பேரில் 2022 ஆம் ஆண்டு பாவா பக்ருதீனை என்.ஐ.ஏ கைது செய்தது.
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவர் என்னுடன் தான் இருக்கிறார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. அவரது அக்கா மகன் இறந்துவிட்டதால் அவரது குடும்பத்தையும் பக்ருதீன் தான் பார்த்து வருகிறார்” என்கிறார்.
மன்னார்குடியில் கடந்த முப்பது ஆண்டுகளாக குடியிருந்து வருவதாகக் கூறும் ராபியத்துல் பசிரியா, “தற்போது பக்ருதீனைப் பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகளால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறோம். தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ளதாக செய்தி பரப்புகின்றனர். அது தவறான தகவல்” எனக் கூறுகிறார்.
“யாரைப் பற்றியும் அவர் தவறாகப் பேசியதில்லை” என்கிறார் ராபியத்துல் பசிரியா.
எம்.எஸ்.சி உளவியல் படித்திருக்கும் பாவா பக்ருதீன், மன்னார்குடியில் ரியல் எஸ்டேட் தொழிலைக் கவனித்து வந்துள்ளார். இப்பகுதியில் மருத்துவ முகாம்களை அவர் நடத்தி வந்ததாகக் கூறும் அவரது தாயார், “கைது சம்பவத்துக்குப் பிறகு அருகில் உள்ளவர்கள், எங்களைப் பார்க்கும் பார்வை மாறிவிட்டது” எனக் கூறினார்.
“ஒரு சாட்சிகள் கூட இல்லை”
ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக 2022 ஆம் ஆண்டில் கைதான பாவா பக்ரூதீன், பத்து மாதம் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்ததாகக் கூறுகிறார் அவரது வழக்கறிஞர் நைனா முகமது.
அப்போது போடப்பட்ட அதே பிரிவுகளில் தற்போதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ராயப்பேட்டையில் முனைவர் ஹமீது உசேன் கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பாவா பக்ரூதீன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் நைனா முகமது, “தமிழக இஸ்லாமியர்கள் மீது தவறான கண்ணோட்டத்தைப் பதிவு செய்வதற்கான முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம்” எனக் கூறுகிறார்.
முனைவர் ஹமீது உசேன் தொடர்புடைய வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளதாகக் கூறும் நைனா முகமது, “ஐந்தாயிரம் பக்கங்களைக் கொண்டதாக குற்றப்பத்திரிகை உள்ளது. அதில், நான்கு மற்றும் ஐந்தாவதாக கைதான நபர்களுக்கு எதிராக ஒரு சாட்சிகள் கூட இல்லை. ஆனால் அவர்கள் சிறையில் உள்ளனர்” என்கிறார்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் சொல்வது என்ன?
இதுதொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகளிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. “ஊடகங்களிடம் பேசுவதற்கு எங்களுக்கு அனுமதியில்லை” எனக் கூறி பேசுவதற்கு மறுத்துவிட்டனர்.
அதேநேரம், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர், “தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பாவா பக்ரூதீன் செயல்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவ்வாறு அவர் செயல்படவில்லை என்றால் நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்காது” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு