1
லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் திடீரென மின்தடைப்பட்டு இருந்தாலும் அதனைத் தொடர்ந்தும் செயற்படுத்தியிருக்கலாம் எனவும் ஹீத்ரோ விமான நிலையத்தை மூடியிருக்கவே தேவையில்லை எனவும் பொதுப் பயனீட்டு நிறுவனமான National Gridஇன் தலைவர் தெரிவித்துள்ளார்.
அங்கு போதுமான மின்சார விநியோகம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நார்த் ஹைட் துணை மின்நிலையத்தில் தீ மூண்டதால் விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, ஹீத்ரோ விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டது.
ஆனால், ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் விநியோகிக்கும் மேலும் 2 துணை மின்நிலையங்களில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை என்று National Gridஇன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலையம் செயல்படுவதற்குத் தேவைப்படும் மின்சாரத்தை அவற்றால் வழங்கமுடியும் என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி : ஹீத்ரோ விமான நிலைய மின்தடையை மறு ஆய்வு செய்ய உத்தரவு!
இதேவேளை, ஒரு நகரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதோ கிட்டத்தட்ட அதே அளவு மின்சாரத்தை ஹீத்ரோ விமான நிலையம் பயன்படுத்துவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தோமஸ் வோல்ட்பை தெரிவித்தார்.
அதனால் நிலையத்தில் வழங்கப்படும் மற்ற சேவைகளுக்குத் துணை மின்சார விநியோகம் இல்லாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதை ஆராய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (21) தற்காலிகமாக மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம், நேற்று (23) முதலே முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளது.