பட மூலாதாரம், Chetan Singh
அமெரிக்காவில், 2024-ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு 10 ஹெச்-1பி விசா விண்ணப்பங்களிலும், 8 விண்ணப்பங்கள் நிலை 1 மற்றும் நிலை 2 பணியாளர்களுக்காக இருந்தன.
நிலை 1 என்பது தொடக்க நிலை ஊழியர்களுக்கானது. இவர்களுக்கு தொடக்க நிலை சம்பளம் வழங்கப்படும்.
நிலை 2 என்பது ஓரளவு சிக்கலான பணிகளைச் செய்யக்கூடிய தகுதியும் திறமையும் கொண்ட ஊழியர்களுக்கானது.
பெரும்பாலான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிலை 2 ஊழியர்களையே அதிகம் நம்பியுள்ளன. ஆனால், இவர்களுக்கு வழங்கிய சம்பளம், ஹெச்-1பி ஊழியர்களுக்கான சராசரி சம்பளத்தை விட குறைவாக இருந்தது.
ஹெச்-1பி விசா என்பது ஒரு தற்காலிக விசா. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் போன்ற மிகவும் திறமையான வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. இதன் மூலம், “அமெரிக்காவில் இல்லாத சில தொழில்திறன்கள் மற்றும் நிபுணத்துவங்களை முதலாளிகள்” பெற முடிகிறது.
ஹெச் -1பி விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்திய டிரம்ப்
பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images
ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்களே அதிகம் பயன் அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், இந்த விசாவுக்கான விண்ணப்பங்களில் 70%க்கும் அதிகமானவை இந்தியர்களால் பெறப்பட்டுள்ளன.
FWD.US மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் தற்போது 7.3 லட்சம் ஹெச்-1பி விசா வைத்திருப்போரும், 5.5 லட்சம் பேர் அதனைச் சார்ந்தும் இருக்கிறார்கள்.
ஹெச்-1பி விசா வைத்திருப்போரும், அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் ஆண்டுதோறும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு 86 பில்லியன் டாலர் பங்களிக்கின்றனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செப்டம்பர் 19 அன்று ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி, ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணம் ஆண்டுக்கு 100,000 டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது.
அமெரிக்கர்களின் வேலைகளை, வெளிநாட்டு மக்கள் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
2024-ஆம் ஆண்டு, ஹெச்-1பி விண்ணப்பங்களில் 28% நிலை 1 பிரிவுக்கும், 48% நிலை 2 ஊழியர்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. நிலை 3 (14%) அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கானது. நிலை 4 (6%) கணிசமான அனுபவமும் நிர்வாகப் பொறுப்புகளும் உள்ள ஊழியர்களுக்கானது.
இந்த பகுப்பாய்வு எவ்வாறு செய்யப்பட்டது?
பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து ப்ளூம்பெர்க் பெற்ற ஹெச்-1பி தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பிபிசி இந்த புள்ளிவிவரங்களைத் தொகுத்தது.
பின்னர், தொழிலாளர் துறையால் வெளியிடப்பட்ட காலாண்டு தொழிலாளர் நிலை விண்ணப்பப் பதிவுகளுடன் இணைத்ததன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளிவந்தன.
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மென்பொருள் உருவாக்குநர்கள், கணினி அமைப்பு பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள் உள்ளிட்ட கணினி தொடர்பான வேலைகளுக்கானவையாக இருந்தன.
அமெரிக்காவுக்கு பணியாளர்களை அனுப்பும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் கிட்டத்தட்ட முழுமையாக நிலை 2 ஊழியர்களையே சார்ந்திருந்தன.
விப்ரோ 874 விண்ணப்பங்களை அங்கீகரித்ததில், 822 (94%) நிலை 2 ஊழியர்களுக்கானவை.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 674 விண்ணப்பங்களை அங்கீகரித்ததில், 639 நிலை 2 ஊழியர்களுக்கானவை.
எல்டிஐ மைண்ட்ட்ரீ 559, டெக் மஹிந்திரா 343 விண்ணப்பங்களை நிலை 2 ஊழியர்களுக்காக அங்கீகரித்தன.
அமேசான், கூகுள் மற்றும் குவால்காம் நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையிலான இதே நிலை ஊழியர்களை கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
பிபிசி பகுப்பாய்வின்படி, இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் வழங்கிய சம்பளம் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கிய சம்பளத்தை விடவும், 2024-இல் அங்கீகரிக்கப்பட்ட ஹெச்-1பி பணியாளர்களுக்கான சராசரி சம்பளத்தை விடவும் குறைவாக இருந்தது.
தன் பணிக்காக ஊழியர்களை வைத்துக் கொள்ளாமல், தனது வாடிக்கையாளர்களாக இருக்கும் வேறு நிறுவனங்களுக்கு பணியாளர்களை அவுட்சோர்சிங் நிறுவனங்கள் வழங்கும் என வாஷிங்டனை தளமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கை நிறுவனம் (ஈபிஐ) கூறுகிறது.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட காக்னிசன்ட் ஆகியவை அவுட்சோர்சிங் வணிக மாதிரியில் செயல்படுகின்றன என்றும் ஈபிஐ கூறுகிறது.
ஆச்சரியப்படத்தக்க வேறுபாடு
நிலை-2 ஊழியர்களின் விண்ணப்பங்கள் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், இந்த ஆய்வு ‘கணினி செயல்பாடுகள்’ துறையில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை மையமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளில் கணிசமான வேறுபாடு காணப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா மற்றும் காக்னிசண்ட் ஆகியவை அமெரிக்காவுக்கு அனுப்பும் ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 77,000 டாலர் முதல் 87,400 டாலர் வரை சம்பளம் வழங்குகின்றன.
ஆனால் அமெரிக்கத் தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகத்தின் தகவலின்படி, 2024-இல் கணினி செயல்பாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் சராசரி சம்பளம் 105,990 டாலராக இருந்தது.
2024ம் ஆண்டில் கணினி தொடர்பான வேலைகளில் ஹெச்-1 பி ஊழியர்களுக்கு அனைத்து நிறுவனங்களாலும் வழங்கப்படும் சராசரி சம்பளம் 98,904 டாலராக இருந்தது. இது முக்கிய இந்திய ஐடி நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தை விட இது அதிகம்.
இதற்கிடையில், அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் நிலை-2 ஊழியர்களுக்கு மிக அதிக சம்பளத்தை வழங்குகின்றன. இங்குள்ள ஊழியர்களின் சராசரி சம்பளம் 145,000 டாலர் முதல் 165,000 டாலர் வரை உள்ளது.
“நிறுவனங்கள், ஹெச்-1பி ஊழியர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை மட்டுமே கொடுக்கின்றன. ஆனால் அதே ஊழியரை வாடிக்கையாளருக்கு அதிக விலையில் வழங்கி லாபம் சம்பாதிக்கின்றன” என்று தேசிய மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அமைப்பின் நிறுவனர் ராஜீவ் தபாட்கர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு நிலையான சம்பளம்தான் கிடைக்கிறது. ஆனால் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கின்றன” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.