பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஹெச்-1பி விசா கட்டணத்தை திடீரென பல மடங்கு அதிகரித்து ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார்.
இந்நிலையில், திறன்மிகு இந்தியத் தொழிலாளர்களை இந்தியாவுக்குத் திரும்ப அழைக்க, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தற்போது முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் திரும்பி வந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறினார்.
“ஹெச்-1பி போன்ற விசாக்கள் எப்போதும் விசா வழங்கும் நாட்டுக்கு தான் நன்மை பயத்துள்ளன. அதனால், விசா கட்டணம் உயர்த்தப்படுவது இது இந்தியாவுக்கு பலனளிக்கும். ஏனெனில் இது இந்தியாவின் உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கும் திறனை மேம்படுத்தும்.” என்று அவர் கூறினார்.
இதன் முக்கிய சாரம் என்னவென்றால், வெளிநாடுகளில் வாழும் திறமையான இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு ஏற்ற பணிச்சூழலை உருவாக்கி, இதுநாள் வரை இருந்த நிலையை மாற்றும் சிறந்த வாய்ப்பு தற்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்பது தான்.
குறிப்பாக தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் புதிய ஆராய்ச்சி தொடர்பாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் கடுமையாகி வருவதால், சில இந்தியர்கள் தற்போது இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதைப் பற்றி யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை அங்கிருந்து, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு மீண்டும் வரச் செய்வது எளிதான காரியம் அல்ல என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவில் மில்லியன் டாலர் வேலையை உதறிய இந்தியர்
பட மூலாதாரம், Nithin Hassan
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த சில இந்தியர்களில் நிதின் ஹாசனும் ஒருவர். ஆனால் மிகப்பெரிய முடிவெடுத்த அவர், கடந்த ஆண்டு இந்தியா திரும்பினார்.
அந்த முடிவு அவருக்கு எளிதானது அல்ல. ஏனென்றால் மெட்டாவில் பல மில்லியன் டாலர் சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டு, நிச்சயமற்ற ஸ்டார்ட்அப் உலகத்தில் நுழைந்தார் நிதின்.
“நான் எப்போதும் சொந்தமாக ஏதாவது தொடங்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அமெரிக்காவில் என் குடியேற்ற நிலை அந்த சுதந்திரத்தை கட்டுப்படுத்தியது,” என்று ஹாசன் பிபிசியிடம் கூறினார்.
இந்தியா திரும்பிய பிறகு, ஹாசன் இரண்டு ஸ்டார்ட்அப்களை தொடங்கியுள்ளார்.
அதில் ஒன்று பி2ஐ (B2I-Back to India) என்ற தளம்.
இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது எதிர்கொள்ளும் உளவியல், பொருளாதார மற்றும் தொழில்முறை சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.
சமீபத்திய மாதங்களில் அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களால், இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவோர் அதிக அளவில் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும், ஹெச்-1பி விசா சர்ச்சை நிலைமையே மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களுக்கு ஒருபோதும் கிரீன் கார்டு கிடைக்காது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து பி2ஐ பற்றிய விசாரணைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன,” என்று ஹாசன் கூறினார்.
மேலும் அவர், “கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து எங்களுடன் பேச இணைந்துள்ளனர்.” என்றார்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய திறமையாளர்களைத் தேடும் பிற நிறுவனங்களும் இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன.
“அமெரிக்காவின் பணக்கார தனியார் (ஐவி லீக்) பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்ப விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இந்த சீசனில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.” என்று பிடிஓ நிர்வாகத் தேடலின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிவானி தேசாய் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுபோன்ற சூழலின் காரணமாக, அமெரிக்காவில் பணிபுரியும் மூத்த இந்திய அதிகாரிகள் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி “தீவிரமாக சிந்திக்க” வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
“அவர்களில் பலர் இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை ஒரு முக்கியமான தேர்வாக கருதும் உயர் நிர்வாகிகள் மற்றும் மூத்த தொழில்நுட்ப துறை தலைவர்கள் அதிகரித்து வருகிறார்கள்,” என்று தேசாய் கூறினார்.
இந்த மாற்றத்திற்கு, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் தொலைதூர அலுவலகங்கள் விரைவாக வளர்ந்ததும், திரும்பி வரும் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைப்பதும் காரணமாக இருக்கலாம்.
சொத்து மேலாண்மை நிறுவனமான பிராங்க்ளின் டெம்பிள்டனின் கூற்றுப்படி, அமெரிக்கா தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தன் கதவுகளை மூடினால், அவர்கள் பிற நாடுகளுக்கு திரும்பக்கூடும். இதன் விளைவாகவும், குறிப்பாக ஆன்சைட் வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாலும் உலகளாவிய திறன் மையங்கள் திறமையாளர்களை ஈர்க்கின்றன.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகரும், ‘வெற்றிகரமானவற்றின் முடிவு: புதிய இந்தியாவிலிருந்து வெளியேறுதல்’ (‘Cessation of the Successful: The Flight Out of New India’)’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான சஞ்சய் பாருவும் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
“திறன்மிகு இந்தியர்களை மீண்டும் கொண்டுவரும் பெரிய அளவிலான தலைகீழ் இடப்பெயர்வுக்கு, அரசாங்கத்திடமிருந்து ஒருங்கிணைந்த மற்றும் தீவிரமான முயற்சி தேவைப்படும். ஆனால் இது தற்போது குறைவாகவே உள்ளது” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“அரசாங்கம் மீண்டும் கொண்டுவர விரும்பும் நபர்களை தீவிரமாக அடையாளம் காண வேண்டும், இதில் உயர்மட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் அடங்குவர்,” என்று பாரு கூறினார்.
“இதற்கு தீவிர முயற்சி தேவை, மேலும் இந்த முயற்சி நேரடியாக உயர் மட்டத்திலிருந்து வர வேண்டும்.” என்றார்.
“இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இதைத்தான் செய்தார். விண்வெளி மற்றும் அணுஆயுதத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் திறன்மிகு நபர்களை மீண்டும் கொண்டு வந்து இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களை உருவாக்கினார்” என்று அவர் கூறினார்.
“அவர்களுக்கு ஆழ்ந்த நோக்கமும் தேசபக்தியும் இருந்தன. இப்போது திரும்பி வருவதற்கான வலுவான காரணமாக எது உள்ளது?” என்று பாரு கேள்வி எழுப்பினார்.
மாறாக, நாட்டில் திறமையான நிபுணர்கள் வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தும் காரணங்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன என்றும், அந்தப் போக்கை தடுக்க முயல்வதற்குப் பதிலாக, இந்தியா அதை எப்போதும் ‘கொண்டாடி’ வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோல்டன் விசா, குடியுரிமை அல்லது குடியேற்றத் திட்டங்கள் மூலம் நிரந்தர வசிப்பிட வாய்ப்புகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், வெளிநாடுகளின் மீதான ஈர்ப்புக்கு ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா தனது ஹெச்-1பி விசா விதிகளை கடுமையாக்கிய போது, திறமையான இந்திய குடியேறிகளுக்கு, ஜெர்மனி போன்ற நாடுகள் உடனடியாக தங்கள் கதவுகளைத் திறந்தன.
திறமையான இந்தியர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்?
பட மூலாதாரம், Getty Images
அரசாங்க விதிமுறைகள், சிக்கலான அரசு நிர்வாகம் மற்றும் மோசமான வணிகச் சூழல் போன்ற காரணிகள் நீண்டகாலப் பிரச்னைகளாக இருந்து வருகின்றன.
பணக்காரர்களும் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர்களும் பல ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணங்களில் இவையும் அடங்கும்.
2020 ஆம் ஆண்டு முதல் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளதாக அரசாங்கத்தின் தரவுகள் காட்டுகின்றன .
கோடீஸ்வரர்கள் இடம்பெயர்ந்து பிற நாடுகளில் குடியுரிமை அல்லது வசிப்பிடத்தைப் பெறும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது .
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை மீண்டும் அழைத்து வருவதில் அரசாங்கம் உண்மையிலேயே தீவிரமாக இருந்தால், “ஒரே நேரத்தில் பல தடைகளை நீக்குவதற்கு” அது பாடுபட வேண்டும் என்று ஹாசன் கூறுகிறார்.
இதில் எளிமையான வரிச் சட்டங்கள், சிறப்பு ஸ்டார்ட்அப் விசாக்கள் போன்ற திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை, நகர்ப்புற நெரிசல் போன்ற பிற அடிப்படை பிரச்னைகளுக்கான தீர்வுகள் போன்றவையும் அடங்கும்.
இதை அடைய, உள்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வியை கணிசமாக மேம்படுத்த வேண்டும் என்று பாரு கூறுகிறார்.
இதனால்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திய திறமையாளர்களுக்கு அமெரிக்கா மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்து வருகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு