நாகர்கோவில்: தலைகவசம் அணியாமல் சென்ற விளவங்கோடு எம்எல்ஏதாரகை கத்பர்ட்டுக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பிற்கு கடந்த 20-ம் தேதி மாலை ராஜீவ்காந்தி நினைவு தின ஊர்வலம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. இதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட் மற்றும் காங்கிஸார் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மீது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ மற்றும் சிலர் இருசக்கர வாகனத்தில் காங்கிரஸ் கொடியுடன் தலைக்கவசம் அணியாமல் ஊர்வலத்தில் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தாரகை கத்பர்ட் உட்பட தலைக்கவசம் அணியாதவர்கள் மீது போலீஸார் தலா ரூ.1000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். தலைக்கவசம் அணியாத எம்எல்ஏவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.