பட மூலாதாரம், Getty Images
கடந்த பல தசாப்தங்களாக, இரான் தனது பாதுகாப்பு உத்தியை ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்நாட்டுத் திறன்களுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பிராந்தியத்தில் தனது செல்வாக்குடன் இணைக்க முயற்சி செய்துள்ளது.
இந்த உத்தியின் கீழ், இரான் லெபனான், இராக், சிரியா மற்றும் ஏமனில் ஆயுதம் ஏந்திய அரசு சாரா குழுக்களின் வலையமைப்பில் முதலீடு செய்துள்ளது.
இரான் நாட்டின் இந்த உத்தி முற்றிலும் பாரம்பரியப் போரையோ அல்லது நிரந்தர அமைதியையோ அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த உத்தி அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் தெளிவற்ற தாக்குதல்களிளை அடிப்படையாகக் கொண்டது, இது எதிரியை பரபரப்பாக வைத்திருக்கும், ஆனால் மறுபுறம் இரானை எந்த உலகளாவிய சக்தியுடனும் பெரிய அளவிலான மோதலுக்கு இட்டுச் செல்லாது.
இருப்பினும், 7 அக்டோபர் 2023 முதல், இஸ்ரேல் இந்த இரான் வலையமைப்பில் உள்ள பல்வேறு கூறுகளை இலக்கு வைத்துள்ளது.
ஆரம்பத்தில் இஸ்ரேல் தரப்பிலிருந்து இரான் தொடர்புடைய குழுக்கள் இலக்கு வைக்கப்பட்டன. பின்னர் பிராந்தியத்தில் உள்ள இரான் தளங்கள் மற்றும் இரான் நாட்டின் உள்ளே கூட தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த உத்தியின் நோக்கம், டெஹ்ரானை ‘தெளிவற்ற நிலையில்” இருந்து வெளியே தள்ளி முற்றிலும் பின்வாங்குவது அல்லது பதற்றத்தை அதிகரிப்பது என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்குக் கொண்டு செல்வதாகும்.
7 அக்டோபர் 2023 முதல், பிராந்தியத்தில் இரான் தொடர்புடைய சில ஆயுதக் குழுக்கள் மற்றும் போராளிப் படைகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் அதன் பிறகும் பலவீனமடைந்துள்ள இரான் நாட்டின் இந்த கூட்டாளிகள் முற்றிலும் அழிந்துவிடவில்லை.
இந்த கட்டுரையில் பிராந்தியத்தில் உள்ள இரான் நாட்டின் மூன்று பெரிய கூட்டாளிகளைப் பற்றிப் பார்ப்போம், அதாவது லெபனானில் ஹெஸ்பொலா, இராக்கில் ஷியா மற்றும் ஏமனில் ஹூத்தி. அமெரிக்க-இரான் மோதலில் இந்தக் கூட்டாளிகள் எத்தகைய பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதையும் விவாதிப்போம்.
லெபனானில் ஹெஸ்பொலா: பலவீனமான நிலையில் இருந்தாலும் செல்வாக்குள்ளது
பட மூலாதாரம், Getty Images
வரலாற்று ரீதியாகப் பிராந்தியத்தில் ஹெஸ்பொலா இரான் நாட்டுக்கு மிக முக்கியமான கூட்டாளியாக இருந்து வருகிறது. இரான் நாட்டுக்கு ஹெஸ்பொலாவின் அசாதாரண முக்கியத்துவம் அதன் ராணுவ மற்றும் ஏவுகணைத் திறன்களால் ஆனது.
இதனுடன் இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் அதன் புவியியல் இருப்பு மற்றும் லெபனானில் கடந்த பல தசாப்தங்களாக இந்தக் குழு ஆற்றிய அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பும் இரான் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது.
இருப்பினும், ஹெஸ்பொலாவின் தற்போதைய நிலை பழைய காலத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. இஸ்ரேலுடனான போர் மற்றும் பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்கள் ஹெஸ்பொலாவின் நிறுவனத் திறன் மற்றும் வலிமையைப் பலவீனப்படுத்தியுள்ளன.
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் தலைமை மட்டத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தக் குழுவின் தலைமை மற்றும் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசப்படுகிறது.
இதே நேரத்தில், லெபனானின் உள்நாட்டுச் சூழல் ஹெஸ்பொலாவின் திறனை மேலும் மட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி, சமூக அழுத்தம் மற்றும் ஏதேனும் புதிய போரைப் பற்றி ஷியா அல்லாத சமூகங்களிடையே அதிகரித்து வரும் உணர்ச்சிகள் ஆகியவை இதற்குப் பல காரணங்களாகும்.
பெய்ரூட்டில் உள்ள ‘மிடில் ஈஸ்ட் சென்டர்’ இதழின் ஆசிரியர் மைக்கேல் யங் பிபிசி பார்சியிடம் கூறுகையில், லெபனான் தரப்பிலிருந்து இரான் நாட்டுக்கு ஆதரவாகச் செய்யப்படும் எந்தவொரு தலையீட்டுக்கும் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்றார்.
அவரது கூற்றுப்படி, “வலிமை சமநிலையை மாற்றும் ஹெஸ்பொலாவின் திறன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஹெஸ்பொலா தற்போது தனித்து விடப்பட்டுள்ளது மற்றும் லெபனானில் பலர் எந்தவொரு புதிய போரின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எதிராக உள்ளனர்.”
இஸ்ரேலுக்கு எதிராகப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த ஹெஸ்பொலா முடிவு செய்தால், இஸ்ரேலின் எதிர்வினை ‘பேரழிவை’ ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். அதன் பிறகு லெபனானைப் பொருளாதார ரீதியாக முடக்குவதற்குச் சமமான ஒரு நிலை உருவாகலாம்.
இரான்-அமெரிக்க போரின் போது குறைந்தபட்சம் போரின் ஆரம்ப நாட்களில் ஹெஸ்பொலா ஒருவேளை பரந்த அளவில் இந்தப் போரின் ஒரு பகுதியாக மாற முடியாமல் இருக்கலாம். லெபனானை முழுப் போருக்குள் தள்ளும் விதமாக அவர்களால் இதைச் செய்ய முடியாது.
நிச்சயமாக ஹெஸ்பொலாவிடம் இன்னும் சிறிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் மற்றும் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் மட்டுப்படுத்தப்பட்ட திறன் உள்ளது, ஆனால், ஏதேனும் முழுப் போரில் ஈடுபடுவது இந்தக் குழுவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமையலாம். அப்படி நடந்தால், லெபனானில் எஞ்சியிருக்கும் அதன் அரசியல் கட்டமைப்புக்குப் பெரும் பாதிப்பு ஏற்படலாம்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஸ்டிம்சன் மையத்துடன் தொடர்புடைய மூத்த ஆய்வாளர் காவா ஹசன் பிபிசியிடம் கூறுகையில், அமெரிக்கத் தாக்குதல்கள் இரான் இஸ்லாமியக் குடியரசின் இருப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஹெஸ்பொலா உணர்ந்தால், ஒருவேளை இந்தக் குழு வேறு பாதையை எடுக்கலாம் என்றார்.
இங்கே உண்மையான கேள்வி என்னவென்றால், இரான் தனது இருப்பை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாக அவர்கள் உணர்கிறார்களா என்பதுதான். எனது கருத்துப்படி, இந்த உணர்வு ஏற்பட்டால் மட்டுமே ஹெஸ்பொலா பரந்த அளவில் தலையிடும்,” என அவர் கூறினார்.
இராக்கின் ஷியா குழுக்கள்
பட மூலாதாரம், Getty Images
ஹெஸ்பொலாவிடம் முடிவுகளை எடுப்பதற்கான அதிக மையப்படுத்தப்பட்ட மற்றும் புகழ்பெற்ற கட்டமைப்பு உள்ளது. அதிலிருந்து வேறுபட்டு, இராக்கில் இரான் தொடர்புடைய ஆயுதக் குழுக்கள் அதிக பன்முகத்தன்மை கொண்டவை, பல பரிமாணங்களைக் கொண்டவை மற்றும் ஓரளவுக்குப் போட்டித்தன்மை கொண்டவை.
இராக்கின் ஷியா குழுக்களில் சில (பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்சஸ் போன்றவை) அரசாங்க அல்லது பகுதி அரசாங்கக் கட்டமைப்பின் ஓர் அங்கமாக உள்ளன. சில அரசியல் கூட்டணியின் உதவியுடன் இராக் நாடாளுமன்றத்தை எட்டியுள்ளன.
மற்ற குழுக்கள் அரசியல் ரீதியாகத் தொடர்பைப் பேணுகின்றன, ஆனால் அதே நேரத்தில் தங்களின் சுதந்திரமான ஆயுதமேந்திய அடையாளத்தையும் தக்கவைத்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், இந்த ஷியா குழுக்கள் ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளை அடைந்துள்ளன. அதாவது ‘எதிர்ப்பு அச்சு’ (அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் குழுக்களின் அமைப்பு) பகுதிக்குள் இருந்துகொண்டு தங்களின் அடையாளம் மற்றும் பங்கினை வலுப்படுத்தியுள்ளன மற்றும் இராக் அரசியலில் ஈடுபட்டு நாட்டுக்குள் தங்கள் நிலையை வலுப்படுத்தியுள்ளன.
இராக்கில் உள்ள இந்தக் குழுக்களின் உறவுகள் இரான் நாட்டுடன் நீடிக்கின்றன மற்றும் இரான் அதிகாரிகள் அவ்வப்போது இந்தக் குழுக்களின் தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர்.
சில ஷியா போராளிகள் இராக்கில் தங்கள் உள்நாட்டு அதிகாரத்தை வலுப்படுத்துவதிலும், நாட்டின் அரசியல் அமைப்பில் தங்கள் நிலையைப் பாதுகாத்துக் கொள்வதிலும் மற்றும் தேர்தல்கள் அல்லது ஜனநாயகம் மூலம் கிடைக்கும் நன்மைகளிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
இரான் தொடர்புடைய இந்த ஷியா குழுக்கள் இராக்கில் 2025-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பெரும் வெற்றியைப் பெற்றன. இப்போது உள்ளூர் மட்டத்தில் அவர்களின் அடையாளம் வெறும் ஏதேனும் ஓர் ஆயுதக் குழுவுடன் மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக இராக்கில் உள்ள அதிகாரக் கட்டமைப்பில் அவர்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர்.
இந்தக் குழுக்களின் இதே நிலைதான் அவர்களைத் தற்போதைய மோதலில் இரான் நாட்டுடன் முறையாக இணைவதைத் தடுக்கிறது, ஏனெனில் அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் இழப்பதற்கு நிறைய இருக்கும். உதாரணமாக இராக் நாடாளுமன்றத்தில் இடங்கள், அரசுப் பதவிகள் மற்றும் வாக்குகளின் மூலம் கிடைக்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் போன்றவை.
இருப்பினும், ஹெஸ்பொலாவுடன் ஒப்பிடும்போது சில இராக் குழுக்களின் தலையீடு அதிக பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் இஸ்ரேலுடன் ஒப்பிடும்போது அதிக அருகாமையிலும் எளிதான இலக்குகளாகவும் இருக்கக்கூடும்.
இரான் மீதான புதிய தாக்குதலின் போது இராக் அரசு நிதானத்தைக் கடைப்பிடித்தாலும், நாட்டில் உள்ள பல சிறிய பெரும்பாலும் கருத்தியல் குழுக்கள் சுதந்திரமாகத் தங்கள் முடிவை எடுக்கக்கூடும்.
இராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருப்பதால் இங்கேயுள்ள நிலை லெபனானில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று மைக்கேல் யங் கூறுகிறார், மேலும் இரான் நாட்டுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட நடவடிக்கையின் போது டெஹ்ரான் பிராந்தியத்தில் உள்ள தனது கூட்டாளிகளை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் போகலாம்.
காவா ஹசனின் கூற்றுப்படி, தாக்குதலின் போது இராக்கில் உள்ள குர்திஸ்தான் பிராந்தியத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இது சில இராக் ஷியா குழுக்கள் எளிதான இலக்காக கருதும் பகுதியாகும், இங்கே நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதல் மூலமும் அமெரிக்காவுக்குச் செய்தியை அனுப்ப முடியும். காவா ஹசனின் கூற்றுப்படி இது முன்னரும் நடந்துள்ளது.
ஷியா குழுக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கே அதிக வாய்ப்பு. இருப்பினும், இது குறித்த அனைத்துச் சாத்தியமான சூழல்களும் இரான் நாட்டின் முடிவுகளைப் பொறுத்தே அமையும்.
ஹூத்தி போராளிகள்: கூடுதல் தீவிரமுள்ள ஒரு தெரிவு
பட மூலாதாரம், Getty Images
ஹெஸ்பொலா மற்றும் இராக் ஷியா போராளிகளுக்கு மாறாக, ஏமனின் ஹூத்தி போராளிகள் அதிக சுதந்திரத்துடன் செயல்படுவதாகப் பல வர்ணனையாளர்கள் கருதுகின்றனர். இதற்கு அவர்கள் இரான் நாட்டின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பது காரணமல்ல, மாறாக அவர்களுக்கு ஹெஸ்பொலா மற்றும் இராக் போராளிகளைப் போன்ற உள்நாட்டுப் பிரச்னைகள் எதுவும் இல்லை என்பதே காரணம்.
ஏமனில் ஹூத்தி போராளிகளின் புவியியல் இருப்பு அவர்களை உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஹூத்தி போராளிகள் உலகளாவிய கடல்வழிப் பாதைகளை இலக்கு வைப்பதிலும், செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டேப் நீரிணையில் கடல் போக்குவரத்தைத் தடுப்பதிலும் தங்களின் திறனைப் பலமுறை நிரூபித்துள்ளனர்.
தற்போதைய போரில் அவர்கள் இரான் நாட்டின் மிகவும் தீவிரமான கூட்டாளியாக இருக்க முடியும், ஏனெனில் அவர்கள் ஏமனில் குறைந்த உள்நாட்டு அரசியல் அழுத்தத்தையே எதிர்கொள்கின்றனர்.
கடந்த காலத்தில் அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு எதிரான பெரிய வான்வழித் தாக்குதல்கள் கூட விரும்பிய முடிவைத் தரவில்லை. உலகளாவிய கடல்வழிப் பாதைகளைத் தடுக்கும் அவர்களின் திறன் அவர்களுக்கு உலகளாவிய மட்டத்தில் நன்மையை அளித்துள்ளது.
மைக்கேல் யங் கூறுகிறார், “ஹூத்திகளிடம் நிச்சயமாகப் பல விருப்பங்கள் உள்ளன. அவர்கள் ஏற்கெனவே சர்வதேச வர்த்தகப் பாதைகளைப் பாதித்து வருகின்றனர், மேலும் பதற்றமான சூழ்நிலையில் அவர்கள் பாப் அல்-மண்டேப்பை முடக்க முயற்சி செய்யலாம்.”
தற்போதைய போரில் அவர்கள் இரான் நாட்டின் மிகவும் தீவிரமான கூட்டாளியாக இருக்க முடியும், ஏனெனில் அவர்கள் ஏமனில் குறைந்த உள்நாட்டு அரசியல் அழுத்தத்தையே எதிர்கொள்கின்றனர்.
கடந்த காலத்தில் அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு எதிரான பெரிய வான்வழித் தாக்குதல்கள் கூட விரும்பிய முடிவைத் தரவில்லை. உலகளாவிய கடல்வழிப் பாதைகளைத் தடுக்கும் அவர்களின் திறன் அவர்களுக்கு உலகளாவிய மட்டத்தில் சாதகமாக அமைந்துள்ளது.
மைக்கேல் யங் கூறுகையில், “ஹூத்திகளிடம் நிச்சயமாகப் பல தெரிவுகள் உள்ளன. அவர்கள் ஏற்கெனவே சர்வதேச வர்த்தகப் பாதைகளைப் பாதித்து வருகின்றனர், மேலும், பதற்றமான சூழ்நிலையில் அவர்கள் பாப் அல்-மண்டேப்பை முடக்க முயற்சி செய்யலாம்.”
மைக்கேல் யங்கின் கூற்றுப்படி, “அமெரிக்காவுடனான போரின் போது இரான், ஹார்முஸ் நீரிணையை மூட முயற்சி செய்யலாம், ஆனால் இது குறித்த இரான் நாட்டின் உத்தி அமெரிக்கத் தாக்குதலின் வடிவம் மற்றும் அளவைப் பொறுத்தே அமையும்.”
அமெரிக்காவின் (மற்றும் இஸ்ரேலின்) நோக்கம் இரான் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தான் என்ற முடிவுக்கு இரான் விரைவில் அல்லது தாமதமாக வந்தால், அது சந்தேகத்துக்கு இடமின்றி அழுத்தத்தை அதிகரிக்கவும் சேதத்தை அதிகப்படுத்தவும் பிராந்தியத்தில் உள்ள தனது அனைத்து கூட்டாளிகளையும் செயல்படுத்தும்.
அத்தகைய சூழ்நிலையில், இரான் தரப்பிலிருந்து ஹார்முஸ் நீரிணையையும், ஹூத்திகள் தரப்பிலிருந்து பாப் அல்-மண்டேப்பையும் முடக்குவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கும்.
இருப்புக்கு அச்சுறுத்தல் என்ற உணர்வு
பட மூலாதாரம், Getty Images
இந்த இரான் தொடர்புடைய பினாமி குழுக்களின் எதிர்வினை உடனடியாகவும் நேரடியாகவும் தெரிவதற்கான வாய்ப்பு குறைவு என்பதில் பெரும்பாலான பார்வையாளர்கள் ஒருமனதாக உள்ளனர்.
இரான் நாட்டின் இருப்புக்கே ஏதேனும் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் மட்டுமே தலையீடு இருக்கும் என காவா ஹசன் கூறினார்.
அத்தகைய சூழ்நிலையில் சில குழுக்கள் செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது குவைத் ஆகிய நாடுகளையும் இலக்கு வைக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இரான் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதாகும் என்று மைக்கேல் யங் கூறுகிறார்.
இரான் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலும், பிராந்தியத்தில் அசாதாரணமான நிகழ்வுகளின் வரிசையைத் தொடங்குவதற்குக் காரணமாக அமையலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு