எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.
ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரம் பாட்டீல் பிபிசிக்கு அளித்த தகவலின்படி 10க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கர்னூலின் புறநகர்ப்பகுதியான கல்லூர் மண்டல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள்?
பட மூலாதாரம், UGC
பேருந்து தீப்பிடித்த போது அதில் 43 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பேருந்தில் பயணித்தோரின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
பட மூலாதாரம், NCBN/X
பேருந்திலிருந்து உயிருடன் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சூர்யா, பேருந்தின் டீசல் டேங்க் மீது பைக் ஒன்று மோதியதால் தீப்பற்றியதாக கூறினார்.
காயமடைந்த பயணிகளை கர்னூல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிரி (SIRI) சந்தித்த பிறகு பேசினார். அதன்பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், பேருந்தில் பயணம் செய்த 43 பேரில் 23 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார்.
11 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேரின் நிலை குறித்து விசாரித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
பேருந்தின் மீது பைக் மோதியதாலேயே இந்த விபத்து நடந்ததாக கூறிய அவர், விபத்து குறித்து விசாரிக்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த விபத்து
அதிகாலை 3 மணி முதல் 3.30-க்கு இடைப்பட்ட நேரத்தில் பேருந்து தீப்பிடித்துள்ளது. அப்போது பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். தீப்பற்றியதை அறிந்த சில பயணிகள் சன்னலை உடைத்து வெளியேறி உள்ளனர்.
2 மாத மற்றும் 5 வயது குழந்தையுடன் பயணித்த தந்தை சன்னலை உடைத்துள்ளார். அவராலேயே பலரும் தப்பியுள்ளனர் என பேருந்தில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.
தீவிபத்தால் ஹைட்ராலிக் அமைப்பு எரிந்து சேதமடைந்தது, இதனால் கதவு திறக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது என காவல் துறையினர் கூறியதாக PTI செய்தி முகமை கூறுகிறது.
மேலும், இதில் உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவலர்கள் தெரிவித்தனர் எனவும் பிடிஐ தெரிவித்தது.