• Fri. Mar 14th, 2025

24×7 Live News

Apdin News

‘₹’ குறியீட்டைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா? – அன்புமணி கேள்வி | Will DMK throw away Karunanidhi centenary memorial coins bearing the ‘₹’ symbol? – Anbumani

Byadmin

Mar 14, 2025


சென்னை: “தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ‘₹’ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ‘₹’ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை திமுக மறந்து விடுகிறது. ‘₹’ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை திமுக ஆதரித்தது.

‘₹’ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 2010-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வர் கருணாநிதி அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.

அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ‘₹’ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது திமுக.

தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ‘₹’ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



By admin