பட மூலாதாரம், Courtesy of Tel Aviv University
-
- எழுதியவர், இசபெல் காரோ
- பதவி, பிபிசி முண்டோ
-
நமது இனத்தின் பரிணாம வளர்ச்சியையும், நவீன மனிதர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது.
140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குழந்தையின் மண்டை ஓடு, வடமேற்கு இஸ்ரேலில் உள்ள கார்மல் மலையின் குகைகள் ஒன்றில் கண்டறியப்பட்டது. மிகப் பழமையான கல்லறையாக அறியப்படும் இந்தக் குகையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ஓர் பகுதியாக இந்த மண்டையோடும் இருந்தது. இந்த மண்டையோடு தொடர்பான ஆய்வு, L’Anthropologie என்ற அறிவியல் இதழில் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு வந்த நிலையில், அவை பெரும்பாலும் உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்களாகக் கருதப்பட்டன.
3 முதல் 5 வயதுக்குட்பட்ட இந்தக் குழந்தை, லெவண்டினின் அந்தப் பகுதியில் வேண்டுமென்றே புதைக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பகுதி, மத்திய ப்ளீஸ்டோசீனின் காலத்தின் போது ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியாவிலிருந்து வந்த பூர்வீக வம்சாவளிகளுக்கும் பிற குழுக்களுக்கும் இடையில் மரபணு ஓட்டங்கள் கலந்த உயிர் புவியியல் பகுதியாகும்.
1931-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டோரதி கரோட் மற்றும் அமெரிக்க இயற்பியல் மானுடவியலாளர் தியோடர் மெக்கவுன் ஆகியோர் இந்தப் பகுதியை ஆராய்ந்தபோது கண்டுபிடித்த முதல் புதைபடிவத்தில் உள்ள இந்த குழந்தையின் மண்டையோடு ஸ்குல் I (Skhūl I) என்று அழைக்கப்படுகிறது.
இந்த புதிய ஆராய்ச்சியின் படி, அதன் உருவவியல், ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் மற்றும் ஹோமோ சேபியன்களுக்கு இடையிலான கலப்பினத்திற்கான பழமையான சான்றாக இருக்கலாம்.
இரண்டு இனங்களும் கலந்திருந்தன என்பதும், நவீன மனிதர்களுக்கு நியாண்டர்தால் மரபணுக்கள் 1% முதல் 5% வரை இருப்பதும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஸ்குல் I என்ற குழந்தையின் வயதுதான் வித்தியாசமாக உள்ளது.
“நாங்கள் இப்போது சொல்வது உண்மையில் புரட்சிகரமான ஒன்று” என்று இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய இஸ்ரேலிய பழங்கால மானுடவியலாளரும் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் மற்றும் மானுடவியல் துறையின் பேராசிரியருமான இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிட்ஸ் பிபிசியிடம் விளக்குகிறார்.
“முன்னர் கருதப்பட்டது போல், நியாண்டர்தால்களுக்கும் ஹோமோ சேபியன்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழவில்லை என்பதை நாங்கள் காட்டுகிறோம், அது குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 140,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்பது முக்கியமானது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் எல்லா விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
பட மூலாதாரம், Dan David Center for Human Evolution, Tel Aviv University
இளம் வயதிலேயே இயற்கையான காரணங்களால் ஸ்குல் I குழந்தை இறந்தது. அந்தக் குழந்தையின் வாழ்க்கை தொடர்பான தகவல்கள் அதிகம் அறியப்படவில்லை. இளம் வயதிலேயே அந்தக் குழந்தையின் இறப்புக்கு காரணமான நோய் என்ன என்பதை மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் பாலினத்தைக் கூட உறுதியாக கூற முடியாது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெவண்ட் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகவும், கூட்டு கல்லறையாகவும் கருதப்படும் அந்த இடத்தில், பிற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் சேர்ந்து ஸ்குல் I குழந்தையும் அடக்கம் செய்யப்பட்டிக்கலாம் என்று அறியப்படுகிறது.
ஸ்குல் I மண்டை ஓடு மற்றும் தாடையின் உருவவியல் (அகழாய்வின் போது எலும்புக்கூட்டிலிருந்து தற்செயலாகப் பிரிக்கப்பட்டு பிளாஸ்டருடன் ஒருங்கிணைக்கப்பட்டது) அதன் தொடர்பு மற்றும் வகைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக டோமோகிராஃபி படங்கள் மற்றும் 3D மெய்நிகர் புனரமைப்புகளைப் பயன்படுத்தி மறு மதிப்பீடு செய்தனர்.
பிற ஹோமோ சேபியன்கள் மற்றும் நியாண்டர்தால் குழந்தைகளின் எச்சங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்த ஹெர்ஷ்கோவிட்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, “அவற்றின் உருவவியல் பண்புகளின் மொசைக் தன்மை” மற்றும் இரு குழுக்களுக்கிடையில் ஓர் “இருவகை உருவவியல்” இருப்பதைக் கவனித்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குழந்தையின் மண்டை ஓட்டின் அமைப்பு பொதுவாக ஹோமோ சேபியன்களின் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தாலும், தாடையின் குணங்கள் நியாண்டர்தால்களின் பரிணாமக் குழுவுடன் “வலுவான உறவை” சுட்டிக்காட்டின.
பட மூலாதாரம், Dan David Center for Human Evolution, Tel Aviv University
“ஸ்குல் I-இல் காணப்பட்ட பண்புகளின் கலவையைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தை நியாண்டர்தால்களுக்கும் ஹோமோ சேபியன்களுக்கும் இடையிலான கலப்பினமாக இருக்கலாம் என்று கூற முடியும்” என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அந்தக் குழந்தை நவீன மனிதனாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அதை நியாண்டர்தால் அல்லது ஹோமோ சேபியன் என வகைப்படுத்துவது “கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“கலப்பினம்” என்ற சொல், அந்தக் குழந்தை ஒரு நியாண்டர்தால் மற்றும் ஹோமோ சேபியன் பெற்றோருக்குப் பிறந்தது என்பதைக் குறிக்கவில்லை என்றும், மாறாக இரு குழுவுக்கும் இடையிலான படிப்படியான கலவையின் விளைவாகும் என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
“நாங்கள் அதை ‘மரபணு ஊடுருவிய மக்கள் குழு’ என்று அழைக்கிறோம், அதாவது ஓர் மக்கள் குழுவின் மரபணுக்கள் மெதுவாகவும் படிப்படியாகவும் மற்றொன்றுக்குள் ஊடுருவின. எனவே, உண்மையில், ஸ்குல் I-இல் நாம் காண்பது கிட்டத்தட்ட ஹோமோ சேபியன்களைக் கொண்ட ஓர் இனமாகும், ஆனால் இது நியாண்டர்தால் மரபணுக்களின் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது,” என்று அவர் விளக்குகிறார்.
அந்த வகையில், அந்தக் குழந்தையை “பேலியோடீம்” என்று வகைப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர், அதாவது, இனக்கலப்பு காரணமாக ஏற்படும் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் குழு, இது ஓர் இனத்திற்குள் குறிப்பிட்ட குழுவாக அங்கீகரிக்கப்படத் தகுதியானது ஆகும்.
பட மூலாதாரம், Fudan University
லபெடோ குழந்தை மற்றும் இரண்டாம் யுன்சியான் II-வின் பின்னணி
1990களின் பிற்பகுதி வரை, நியாண்டர்தால்களும் நவீன மனிதர்களும் இரண்டு வெவ்வேறு இனங்கள் என்பதால் அவர்கள் கலப்பினமாக இருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தொற்றுமை இருந்தது.
1998-ஆம் ஆண்டு போர்ச்சுகலில் லபெடோ குழந்தை போன்று கிட்டத்தட்ட அப்படியே இருந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது, சேபியன்கள் மற்றும் நியாண்டர்தால்களுக்கு இடையிலான கலவையான பண்புகளையும் கொண்டிருந்தது, பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலில் இது தீவிர மாற்றத்தை இது ஏற்படுத்தியது.
சுமார் 29,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிட்டத்தட்ட 4 வயது குழந்தை இரு குழுக்களுக்கும் இடையில் கலப்பினத்திற்கான தெளிவான ஆதாரங்களைக் காட்டியது.
இந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்திய பெருமாற்றம் 2010-களில் வந்தது, அப்போது முதல் நியாண்டர்தால் மரபணு வரிசைப்படுத்தப்பட்டது. வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நவீன மனிதர்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்கர் அல்லாத மக்களின் டி.என்.ஏவில் 1% முதல் 5% வரை நியாண்டர்தால்களிடமிருந்து தோன்றியது என கண்டறியப்பட்டது.
மனித பரிணாம வரலாற்றின் சமீபத்திய கிராசிங்கைப் பற்றி லபெடோ குழந்தை நமக்குச் சொன்னது போல், ஸ்குல் I மிகவும் முந்தைய காலத்தைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட பத்து லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு யுன்சியான் II பற்றிய ஆய்வை, journal Science இதழ் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டது. அதன்படி, ஹோமோ சேபியன்கள் நாம் நினைத்ததை விட குறைந்தது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றத் தொடங்கியது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பு தங்கள் ஆய்வின் முடிவுகளுடன் தொடர்புடையது அல்ல என்று ஸ்கல் I தொடர்பாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“சீன யுன்சியான் II மண்டை ஓடு மிகவும் பழமையானதாகக் கூறப்படுகிறது. அதற்கும் எங்கள் ஆய்வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை” என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் கூறுகிறார்.
“மத்திய மற்றும் பிற்பகுதியில் ப்ளீஸ்டோசீன் காலத்தில் பூமியில் அதிக அளவிலான ஹோமோ இனங்கள் நடமாடியதில் ஆச்சரியமில்லை” என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்பெயினில் உள்ள தேசிய இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தின் (CSIC) பழங்கால உயிரியல் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியரான அன்டோனியோ ரோசாஸ், ஸ்குல் I பற்றிய சில கண்டுபிடிப்புகள் பற்றி கேள்வி எழுப்புகிறார்.
ஹோமோ சேபியன்களின் மண்டை ஓட்டின் அடிப்பகுதி மற்றும் நியாண்டர்தால் உடற்கூறியல் தொடர்பான தாடை ஆகியவற்றின் கலவை “உயிரியல் ரீதியாகப் பொருந்தாதது” என்கிறார்.
“உடற்கூறியல் மரபணு நிர்ணயம் சிக்கலானது மற்றும் பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட எலும்பு கூறுகளில், அதாவது மண்டை ஓடு மற்றும் தாடையில் இவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை” என்று அவர் கூறுகிறார்.
போர்ச்சுகலில் சேபியன்ஸ்-நியாண்டர்தால் கலப்பினத்தின் மற்றொரு உதாரணமாக இருப்பது லாகர் வெல்ஹோ. இது, மிக சமீபத்திய காலத்தின் ஹோமோ சேபியன்ஸின் தாடை எலும்பை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறது, இது ஸ்குல் I-இல் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.
அன்டோனியோ ரோசாஸின் கூற்றுப்படி, சடலத்தின் அடக்கத்தின் வகைப்பாடு முக்கியமானது. அடக்கம் செய்யப்பட்ட சடலம் அதற்குப் பிறகு மாற்றங்களுக்கு உட்பட்டதாக அறியப்படுகிறது. “ஸ்குல் I கீழ் தாடை நியாண்டர்தால் நபருக்கு சொந்தமானது, அவர் ஹோமோ சேபியன்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது ஏன் என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்துகிறார்.
அறிவியல் உலகில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, பரிணாம ஆய்வின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பண்டைய புதைபடிவங்களிலிருந்து டிஎன்ஏவை மீட்டெடுக்கும் திறன் ஆகும்.
“சந்தேகத்திற்கு இடமின்றி, இங்கே வழிமுறை சிக்கல் உள்ளது. மனித இனங்களுக்கிடையேயான கலப்பினமாக்கல், பழங்கால மரபணு தரவுகள் மூலம் மறுக்க முடியாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது, உருவவியல் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது கடினம். நியாண்டர்தால் மற்றும் ஹோமோ சேபியன்களின் மரபணு தகவல்களின் கலவையானது உடற்கூறியல் துறையில் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு பெரும்பாலும் தெரியாது” என்று ரோசாஸ் கூறுகிறார்.
இந்த ஆய்வு மண்டை ஓடு பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது. ஆனால், அதன் டிஎன்ஏவைப் பிரித்தெடுக்காமல் அந்தக் குழந்தையை ஒரு கலப்பினமாக உறுதியாக அடையாளம் காண முடியாது என பிற விஞ்ஞானிகளும் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், Mike Kemp/In Pictures via Getty Images
ஒருங்கிணைப்பு மற்றும் கலாசார நடைமுறைகள்
ஸ்குல் I ஆய்வு, மனித பரிணாம வளர்ச்சியில் ஆரம்பகால கலப்பினமாக்கல் குறித்த அறிவை வழங்குவதுடன், இரு குழுக்களுக்கிடையிலான ஒருங்கிணைவு மற்றும் வரலாற்று ரீதியாக நவீன மனிதர்களுடன் தொடர்புடைய கலாசார நடைமுறைகள் பற்றிய புதிய நுண்ணறிவுகள் என இரு முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது.
“மிகவும் வியத்தகு மற்றும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டு குழுக்களும் மிக நீண்ட காலத்திற்கு அருகருகே வாழ முடிந்தது என்பது நமக்கு இப்போது தெரிய வந்துள்ளது” என்பதை ஹெர்ஷ்கோவிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இது ஹோமோ சேபியன்ஸ் என்பது “வலிமையானவர்களின் சட்டத்தின்” மூலம் மற்றவர்களை விட மேலோங்கிய ஓர் இனம் என்ற விஷயத்திற்கு மாறுபட்டுள்ளது.
“இதுதான் உண்மையான ஆச்சரியம், ஏனென்றால் பூமியில் உள்ள பிற அனைத்து ஹோமோ குழுக்களையும் ஒழிப்பதற்கு ஹோமோ சேபியன்கள் மட்டுமே காரணம் என்று மானுடவியலாளர்கள் நீண்ட காலமாக நினைத்தார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
“நாம் ஆக்கிரமிப்பு இனமாக இருந்ததால் அவற்றை வெளியேற்றினோம், இடம்பெயர்த்தோம் அல்லது அழிவுக்கு அழுத்தம் கொடுத்தோம் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, அடிப்படையில், சிறிய எண்ணிக்கையிலான ஹோமோ சேபியன்களை பெரிய குழுக்களாக இணைத்தோம், அவை சிறிது சிறிதாக மறைந்துவிட்டன” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஸ்குல் குகை என்ற கூட்டு கல்லறையில் ஸ்குல் I குழந்தையும் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அங்கு இறந்தவர்களின் சடலங்களுடன் காணிக்கைகளும் (பொருட்களும்) வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது, இது குழு சார்ந்த உணர்வு மற்றும் குழந்தைகளுக்கான மரியாதை மற்றும் ஆரம்பகால பிராந்திய நடத்தை ஆகியவற்றைக் குறிக்கிறது.
“அனைவராலும் நம்பப்படும் முன்னுதாரணத்திற்கு மாறாக, அடக்கம் சம்பந்தப்பட்ட பழமையான சவக்கிடங்கு நடைமுறைகள் போன்றவை, ஹோமோ சேபியன்கள் அல்லது ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் என்பதாக மட்டுமே இருக்க முடியாது” என்று ஆய்வு குறிப்பிடுகிறது.
“பல ஆண்டுகளாக, கல்லறை என்பது மனித கலாசாரத்தின் மிக சமீபத்திய கண்டுபிடிப்பு என்பதை நாம் புரிந்துகொண்டோம். கல்லறை என்பது சமூக அடுக்குமுறை என்றும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் நம்பிக்கை, மனித கலாசாரம், அதன் இயல்பு, அதன் நம்பிக்கைகள், உளவியல் பற்றிய பல விஷயங்களைக் குறிக்கிறது,” என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் மேலும் கூறுகிறார்.
“140,000 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை நாம் கொண்டிருந்தோம் என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு