சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) சார்பில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
ஏயுடி தலைவர் பேராசிரியர் ஜெ.காந்திராஜ், மூட்டா தலைவர் பேராசிரியர் பி.கே.பெரியசாமி ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது, யுஜிசி நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்ஃபில் மற்றும் பிஎச்டி பட்டத்துக்கு ஊக்க ஊதியம் வழங்குவது, பணியில் உள்ள ஆசிரியர்களின் இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கு பிஎச்டி கட்டாயம் என்ற விதிமுறையை தளர்த்துவது, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதாவை முற்றிலுமாக கைவிடுவது என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.
ஏயுடி செயலாளர் ஏ.சேவியர் செல்வகுமார், பொருளாளர் ஜெ.சார்லஸ், மூட்டா செயலாளர் ஏ.டி.செந்தாமரை கண்ணன், பொருளாளர் ஆர்.ராஜா ஜெய சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினர்.