பட மூலாதாரம், Wim van den Heever
நமீப் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற கழுதைப்புலியின் (ஹைனாவின்) புகைப்படம் தற்போது ஒரு முக்கிய விருதைப் பெற்றுள்ளது. அதன் மூலம் அந்தப் பாலைவனம் புத்துயிர் பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தின் பின்னணியும் சுவாரஸ்யமானது.
நமீபியாவின் அட்லாண்டிக் கடற்கரைக்கு அருகே, கோல்மன்ஸ்காப் எனும் இடத்தில் ஒரு பழைய வைரச் சுரங்கம் உள்ளது. இரவு நேரத்தில், அப்பகுதி முழுவதும் அமைதியில் மூழ்கி இருக்கும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட இந்த நகரத்தில், மணலால் மூடப்பட்ட கட்டிடங்களைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், இரவில் தாங்கள் தங்குமிடங்களுக்குத் திரும்பிவிடுகிறார்கள்.
ஆனாலும் அந்த வெறிச்சோடிய தெருக்களில், நடமாட்டம் தென்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டிடங்களின் நிழல்களுக்கும், பாதி மணலில் புதைந்த தெருக்களுக்கும் இடையே, தன்னந்தனியாக ஒரு பழுப்பு நிற கழுதைப்புலி (ஹைனா) நடந்து செல்கிறது.
அச்சமயத்தில் ஒரு பிரகாசமான ஒளி அப்பகுதியை ஒளிரச் செய்கிறது. அது, தென்னாப்பிரிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விம் வான் டென் ஹீவரின் பத்து ஆண்டுகால உழைப்பின் உச்சம்.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நடத்திய இந்த ஆண்டுக்கான வனவிலங்கு புகைப்படப் போட்டியில் அவர் எடுத்த படம் முதல் பரிசை வென்றுள்ளது. இந்தப் புகைப்படம் அது எடுக்கப்பட்ட விதத்துக்காக மட்டுமல்ல, அதன் பொருளுக்காகவும் பாராட்டப்பட்டது.
பழுப்பு நிற கழுதைப்புலி (ஹைனா) உலகிலேயே மிக அரிய ஹைனா இனமாகக் கருதப்படுகிறது. புத்திசாலித்தனமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மையும் கொண்ட ஒரு விலங்கான இந்த கழுதைப்புலி, நமீபியா பாலைவனத்தின் பழைய வைர சுரங்க நகரங்களைத் தன் வாழிடமாக மாற்றிக்கொண்டுள்ளது.
பட மூலாதாரம், Marie Lemerle
வான் டென் ஹீவர் உலகம் முழுவதும் புகைப்படம் எடுப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் நமீப் பாலைவனத்திற்கு செல்கிறார். ஆரம்ப காலங்களில் அங்கு சென்றபோது இரவில் ஒரு பழுப்பு நிற கழுதைப்புலி கோல்மன்ஸ்காப் நகரத்தில் சுற்றி வருவதை அவர் உணர்ந்தார்.
“அங்கு கழுதைப்புலியின் பாதச்சுவடுகளோ அல்லது அதன் தடயங்களோ தெரிந்தது,” என அவர் நினைவுகூர்கிறார். அப்போது தான், அந்த நகரத்தின் வெறிச்சோடிய நகரத்தில் கழுதைப்புலியை படம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
பல வகைகளிலும் முயற்சி செய்த பிறகு, அவர் ஒரு திட்டத்தை வகுத்துள்ளார்.
அதிகாலை 2.00 மணி முதல் 3.00 மணிக்குள் எழுந்து, நகரம் முழுவதும் அமைதியாக இருக்கும் நேரத்தில் கோல்மன்ஸ்காப்பில் தனது கேமராவை அமைக்க அவர் முடிவு செய்தார்.
ஆனால், அங்கு படம் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. பழுப்பு நிற கழுதைப்புலி மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட விலங்கு. அது இரவு நேரத்தில் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை கொண்டது.
அதனால் பல ஆண்டுகளாக, நகரத்திலிருந்து தொலைவில், விரைவாக ஓடி மறையும் கழுதைப்புலியை மட்டும் தான் டென் ஹீவரால் பார்க்க முடிந்தது.
அதேபோல், நமீப் பாலைவனத்தின் கடுமையான சூழலும் இதற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
கிழக்கிலிருந்து வீசும் காற்று, இரவில் அவரது கேமரா உபகரணங்களின் மீது ஒரு மீட்டர் உயரம் வரை மணலை குவித்துவிடும்.
“ஒரு சில ஆண்டுகளில் என் கேமராக்கள் முற்றிலும் சேதமடைந்தன,” என்று அவர் கூறுகிறார்.
மேற்கு காற்று கடல் வழியாக வீசும்போது, அது அடர்ந்த மூடுபனியை கொண்டு வரும்.
“அப்போது, நீங்கள் எடுக்கும் படத்தில் கழுதைப்புலி இருந்தாலும் கூட, மூடுபனியின் காரணமாக உங்களால் அதைப் பார்க்க முடியாது” என்கிறார் டென் ஹீவர்.
பட மூலாதாரம், Wim van den Heever
இறுதியாக, வான் டென் ஹீவருக்குச் சவாலாக இருந்த கேள்வி, ‘கேமராவை எங்கு வைப்பது’ என்பதுதான்.
அந்த பழைய நகரில் ஒரு கழுதைப்புலி எந்த வழியாக நடந்து செல்லும் என்பதை அவர் கற்பனை செய்துள்ளார்.
“ஒரு கழுதைப்புலி இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் செல்ல வேண்டுமெனில், அது இந்த இடத்தின் வழியாகத்தான் செல்லும் என நான் நினைத்தேன்” என்கிறார் டென் ஹீவர்.
நேரத்தை சரியாகக் கணித்தால், இங்கே கழுதைப்புலியையும், பின்னணியில் வீட்டையும் சேர்த்து படம் எடுக்க முடியும். இப்படி யோசித்துத் தான் கேமராக்களை அமைத்தேன்”என்று விளக்குகிறார் டென் ஹீவர்.
அதன் பிறகு இடைவிடாமல் காத்திருக்க வேண்டியிருந்தது. வான் டென் ஹீவர் பத்து ஆண்டுகள் தொடர்ந்து கோல்மன்ஸ்காப்பிற்கு சென்று வந்தார். அப்போது, அவரது கேமரா இரண்டு நரிகளை மட்டுமே படம் பிடித்தது. ஆனால் அந்த பழுப்பு நிற கழுதைப்புலியைப் பார்க்க முடியவில்லை.
அப்படியே நாட்கள் உருண்டோடின.
ஒரு நாள் இரவு, சூழல் சரியாக அமைந்தது.
அவர் எதிர்பார்த்தபடியே கழுதைப்புலி அந்த வழியாக வந்தது.
“அந்த இரவு என் கேமரா மூன்று முறை இயங்கியது,” என்கிறார் டென் ஹீவர்.
முதல் முறை காட்சியைச் சோதிக்க நானே இயக்கினேன். இரண்டாவது முறை எதுவும் நடக்கவில்லை. மூன்றாவது முறை, படத்தில் கழுதைப்புலி சிக்கியது”என்று விவரிக்கிறார் டென் ஹீவர்.
கேமராவில் முதல் முறையாக அந்தப் படத்தைப் பார்த்தபோது, அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.
“நான் கற்பனை செய்தபடியே படம் இருந்தது” என்று கூறிய டென் ஹீவர், “முதல் நாளிலிருந்து நான் எதிர்பார்த்தது இதுதான். இதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் உழைத்தேன், இத்தனை இரவுகளைச் செலவிட்டேன்”என்கிறார்.
பட மூலாதாரம், Marie Lemerle
தென்னாப்பிரிக்காவில் , சுமார் 4,370 முதல் 10,110 பழுப்பு நிற கழுதைப்புலிகள் மட்டுமே தற்போது இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
பழுப்பு நிற கழுதைப்புலி இனம் உலகிலேயே மிக அரிதான இனமாகக் கருதப்படுகிறது.
இந்த இனம் “அச்சுறுத்தலுக்கு அருகில்” (near threatened) உள்ளதாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் எண்ணிக்கை தற்போது நிலையாகவே உள்ளது என்று கோல்மன்ஸ்காப்பிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூடெரிட்ஸ் நகரில் ‘பழுப்பு நிற கழுதைப்புலி ஆராய்ச்சித் திட்டத்தை’ மேற்கொள்ளும் மேரி லெமர்லே கூறுகிறார்.
“இவை பெரும்பாலும் மறைவாக வாழும் விலங்குகள்,மக்கள் எதிர்பார்க்காத பல இடங்களில் இவை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்”என்கிறார் லெமர்லே.
இவை அமைதியான விலங்குகளும் கூட.
புள்ளிகள் கொண்ட கழுதைப்புலி தொலை தூரத்திலும் கேட்கக்கூடிய அளவு தனித்துவமான குரல் கொண்டது. ஆனால் பழுப்பு நிற கழுதைப்புலி அப்படி இல்லை.
“இவை உங்கள் கூடாரத்தைக் கடந்து சென்றாலும் கூட, உங்களுக்கு அதன் சத்தம் கேட்காமல் இருக்கலாம், அடுத்த நாள் காலை எழுந்தால், அவற்றின் பாதச்சுவடுகளை மட்டும் நீங்கள் காணலாம்”என்கிறார் லெமர்லே.
கோல்மன்ஸ்காப் மற்றும் லூடெரிட்ஸ் ஆகிய இரண்டும், நியூ ஜெர்சி அளவிலான பரப்பளவு கொண்ட ஒரு தேசிய பூங்காவில் உள்ளன. இந்தப் பூங்கா, 1908ஆம் ஆண்டு வைர சுரங்கப் பணிகளுக்காக பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தடை செய்யப்பட்டது.
இப்போது பூங்காவில் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், “இது உலகின் அரிய, கிட்டத்தட்ட தூய்மையான இடங்களில் ஒன்றாக உள்ளது,” என்கிறார் லெமர்லே.
பட மூலாதாரம், Wim van den Heever
இந்தப் பகுதியில், உணவுச் சங்கிலியில் முதன்மையாக இருக்கும் முக்கிய விலங்காக பழுப்பு நிற கழுதைப்புலி உள்ளது.
இவை பெரும்பாலும் கடற்கரையில் உள்ள சீல் குட்டிகளை வேட்டையாடி உணவாகக் கொள்கின்றன. இதனால், ஊட்டச்சத்து மிகக் குறைவாக உள்ள நமீப் பாலைவனத்திற்கு புதிய உயிரும், உணவுச்சத்தும் கொண்டு வருவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார் மேரி லெமர்லே.
தொடர்ந்து பேசிய அவர், மரங்களில்லாமல், வெப்பம் அதிகமாக இருக்கும் பாலைவனப் பகுதியில், பழைய சுரங்க நகரங்கள் இந்த கழுதைப்புலிகளுக்கு வெப்பத்திலிருந்து புகலிடம் அளிக்கின்றன.
மேலும், “இந்த பழைய கட்டிடங்களைத் தங்களது தங்குமிடமாகப் பயன்படுத்த இவை விரும்புகின்றன,” என்று கூறுகிறார்.
சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு பழைய சுரங்க நகரத்தில், சமீபத்தில் ஒரு கழுதைப்புலி பழைய இடிந்த கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் குட்டி பெற்றது.
“அங்கு ஒரு பழைய சமையலறை இருந்தது. கீழே ஒரு பெரிய அடுப்பு, இரும்புக் குழாய்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை, பிரசவிக்கும் இடமாக கழுதைப்புலி தேர்ந்தெடுத்தது. இன்றும் பழைய குழாய்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களையே தங்களின் குகைகளாக கழுதைப்புலிகள் பயன்படுத்துகின்றன”என்கிறார் லெமர்லே.
இந்தப் பழைய குடியிருப்புகள் இவ்விலங்குகளுக்கு சில வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், புதிய சாலை அமைப்புகளும் நகர மேம்பாடுகளும் இவற்றின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
சாலை விபத்துகள், பழுப்பு நிற கழுதைப்புலிகள் இறப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
அப்பகுதிக்கு வெளியே, விவசாயிகளுடனான மோதல்களும் மற்றொரு காரணமாக உள்ளது. பல விவசாயிகள் இவற்றை விரட்டி விடுவதுண்டு.
“பொதுவாக கழுதைப்புலிகளுக்கு ஒரு கெட்ட பெயர் உண்டு, பழுப்பு நிற கழுதைப்புலிகள் பெரும்பாலும் வெற்றிகரமாக வேட்டையாடும் விலங்குகளாக இல்லை”என்கிறார் லெமர்லே.
இவை சில நேரங்களில் “அசிங்கமான, துர்நாற்றம் வீசும் விலங்குகள்” என்று புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால், அந்தப் பெயர் முற்றிலும் தவறானது, என்கிறார் லெமர்லே.
“இவை , இறந்த விலங்குகளையும் அழுகும் சடலங்களையும் அகற்றி, நோய்களைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன”
பட மூலாதாரம், Wim van den Heever
இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விலங்கியல் நிபுணர் நடாலி கூப்பர், வான் டென் ஹீவரின் புகைப்படத்தைப் போன்ற படங்கள் மக்களின் மனநிலையை மாற்ற உதவும் என நம்புகிறார்.
“இந்தப் படம், மனிதர்களும் வனவிலங்குகளும் சுற்றுச்சூழலின் ஒரு பகுதி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. எனவே, அவற்றுடன் இணைந்து வாழ நாம் முயற்சிக்க வேண்டும்,” என்கிறார் நடாலி கூப்பர்.
புகைப்படங்கள் இயற்கைச் சூழலைப் பற்றி மக்களுக்குப் புதிய புரிதலை உருவாக்கும் சக்தி கொண்டவை. மனித செயல்பாடுகளால் உலகளாவிய பல்லுயிர் அமைப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. ஆனால் அதன் பொருளை புரிந்துகொள்வது பலருக்கும் கடினமான ஒன்று.
“புகைப்படங்கள் மனிதர்களை சிந்திக்க வைக்கும் ஒரு வலுவான கருவி,” என்கிறார் கூப்பர்.
விருது பெற்ற புகைப்படத்திற்காக தான் பத்து ஆண்டுகள் உழைத்ததை நினைத்து வான் டென் ஹீவர் சிரிக்கிறார். “இந்தப் படத்திற்காக நான் நிறைய முயற்சி செய்திருக்கிறேன். சில நேரங்களில் இதை நினைக்கும்போது எனக்கே சிரிப்பு வருகிறது. இது எனது அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டுகிறதா அல்லது நான் முட்டாள்தனமாக நடந்துகொண்டேனா என்று எனக்குத் தெரியவில்லை” என பகிர்ந்து கொள்கிறார் ஹீவர்.
இந்த ஆண்டுக்கான சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் அவருக்கு சமீபத்தில் கிடைத்துள்ள பரிசு, இது ஒரு முட்டாள்தனமான முயற்சி எனும் கருத்தை முற்றிலும் நீக்குகிறது.
ஆனால், கழுதைப்புலி தொடர்பான தனது பயணம் முழுமையாக முடிந்து விட்டதாக வான் டென் ஹீவர் நினைக்கவில்லை.
“எப்போதும் புதிதாக ஏதாவது செய்ய முடியும். கழுதைப்புலி வாயில் ஒரு சீல் குட்டியுடன் இருக்கலாம், அது கண் சிமிட்டியிருக்கலாம், அங்கு இரண்டு கழுதைப்புலிகள் இருக்கலாம், அல்லது அந்தக் கழுதைப்புலி துள்ளிக் குதிக்கலாம். அதனால், ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்க நாங்கள் மீண்டும் அங்கு செல்கிறோம். புகைப்படக் கலைஞர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை”என்கிறார் வான் டென் ஹீவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு