• Sun. Nov 9th, 2025

24×7 Live News

Apdin News

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி

Byadmin

Nov 9, 2025


ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த தாதி, தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார்.

இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையற்ற அதிகப்படியான தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. விசாரணையில், அவர் 10 நோயாளிகளைக் கொலை செய்ததுடன், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றார் என்றும் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் தாதியின் பெயர் வெளியிடப்படாத நிலையில், வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றத்தை உறுதிசெய்த நீதிமன்றம், அந்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தாதியர்களால் அரங்கேற்றப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் இது முதல் முறையல்ல. வடக்கு ஜேர்மனியில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், நீல்ஸ் ஹோஜெல் (Niels Högel) என்ற ஆண் தாதி இரண்டு வைத்தியசாலைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் ஜேர்மனியின் நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான தொடர் கொலைகாரராகக் கருதப்படுகிறார்.

தற்போது அதே பாணியில், இரவுப்பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி மற்றொரு தாதியர் நிகழ்த்திய கொடூரக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை, ஜேர்மன் சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

By admin