• Wed. Oct 8th, 2025

24×7 Live News

Apdin News

10.10 கி.மீ நீளத்தில் கோவை – அவிநாசி சாலை மேம்பாலம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | 10.10 KM Long Coimbatore – Avinashi Flyover: What are Special Features?

Byadmin

Oct 7, 2025


கோவை: கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தூரத்துக்கு கட்டப்பட்ட அவிநாசி சாலை புதிய உயர்மட்ட மேம்பாலத்தை வரும் 9-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், ரூ.1,791.23 கோடி மதிப்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டப்பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு, இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் வரும் அக்.9ம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்த மேம்பாலத்தில் உள்ள சிறப்புகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது: “இந்த பாலத்தின் மொத்த தூரம் 10.10 கிலோ மீட்டர். ஓடுதள அகலம் 17.25 மீட்டர். 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலையில், 4 வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது உள்ளது.

உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் வழித்தடத்தில் அண்ணாசிலை, பீளமேடு ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், ஹோப்காலேஜ், விமான நிலையம் ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. கோல்டுவின்ஸ் – உப்பிலிபாளையம் வழித்தடத்தில் விமான நிலையம், ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், பீளமேடு, அண்ணாசிலை ஆகிய இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது.

விமான நிலைய ஏறுதளம் 577 மீட்டர், விமான நிலைய இறங்குதளம் 567 மீட்டர், ஹோப்காலேஜ் ஏறுதளம் 483 மீட்டர், இறங்குதளம் 527 மீட்டர், நவ இந்தியா ஏறுதளம் 561 மீட்டர், இறங்குதளம் 551 மீட்டர், அண்ணாசிலை ஏறுதளம் 411 மீட்டர், இறங்குதளம் 391 மீட்டர் தூரம் கொண்டதாகும். இதில் அண்ணாசிலை ஏறுதளம் மட்டும் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிலுவையில் உள்ளது.

அணுகு சாலையாக கோல்டுவின்ஸ் அருகே 183 மீட்டரும், உப்பிலிபாளையம் அருகே 267 மீட்டரும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஹோப்காலேஜ் சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மீது 52 மீட்டர் தூர நீளத்து 8 இரும்பு கார்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது 725 டன் எடை கொண்ட தாகும். தூண்களில் முதலில் கட்டப்பட்டன. இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் ஓடுதளம் காரிடர், தென்னம் பாளையத்தில் உள்ள தனியிடத்தில் தயாரித்து இங்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில் நுட்பங்களுடன் ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது.

கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடத்திலிருந்து வெறும் 10 நிமிடமாக குறைகிறது. கோவை நகரிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி செல்வதற்கு முன்பு 10 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த மேம்பாலம் மூலம் அந்த பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர்.

ஜி.டி.நாயுடு பெயர்: இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் (அக்.9ம் தேதி) மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.



By admin