கரூர்: 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் ஊராட்சி தேத்தம்பட்டியில் இன்று (மே 1ம் தேதி) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து போராடியது.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்த போதெல்லாம் ராகுல்காந்தியை பாஜகவினர் கேலிக்குரியவராக சித்தரித்தனர். இப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்காக பாஜகவை பணிய வைத்த வேலையை ராகுல் காந்தி செய்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினும் மைக்ரோ மைனாரிட்டி (நுண் சிறுபான்மை) மக்களுக்கும் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். இதில் தமிழ்நாடு முன்னேறி போய்க்கொண்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாஜக அரசு படிப்படியாக குறைத்து அதை நிறுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் அல்ல. அது 25 நாள் வேலை. 25 நாட்கள் மட்டுமே வேலை வழங்கிய நிலையிலும் 5 மாதங்களாக ஊதியம் வழங்காத நிலையே பாஜக ஆட்சியில் உள்ளது.