தங்கத்தின் விலை வேகமாக உயரத் தொடங்கிய நிலையில் , சிறிய தொகைக்கு தங்கம் வாங்க விரும்பும் பலரும் டிஜிட்டல் தங்கத்தை (e-gold) வாங்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் சமீபத்தில், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஆன்லைன் தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
”டிஜிட்டல் தங்கங்கள் செபி விதிமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல. ஆகையால் செபி இவற்றை கண்காணிக்காது. இந்த டிஜிட்டல் தங்கங்கள் முதலீட்டாளர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்” என்று செபி கூறியுள்ளது.
தங்க விலை உச்சத்தை எட்டியுள்ளதால், தங்கத்தை வாங்குவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஆனால் ஆன்லைன் தளங்கள் சிறிய தொகையிலேயே தங்கம் வாங்கும் வசதியை வழங்குகின்றன. அதனால் இதன் புகழ் வேகமாக உயர்ந்து வருகிறது.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட தகவலில், என்பிசிஐ (NPCI) தரவுகளின்படி, ஜனவரி 2024-ல் இந்தியாவில் ₹761 கோடி மதிப்பிலான டிஜிட்டல் தங்கம் வாங்கப்பட்டது. செப்டம்பர் 2025-ல் இது ₹1410 கோடியாக உயர்ந்தது. அதாவது, டிஜிட்டல் தங்க விற்பனையில் 85% உயர்வு ஏற்பட்டுள்ளது என்பது இந்த தரவின் மூலம் தெரிய வருகிறது.
டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, செபி எச்சரிக்கை விடுத்தது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த 10 மாதங்களில் இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் வாங்கும் நடைமுறை, மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.
டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?
இன்று இந்தியாவில் பல பேமென்ட் ஆப்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் டிஜிட்டல் தங்கம் வாங்கும் வசதியை வழங்குகின்றன. இதில் வெறும் ₹10 அல்லது ₹100 முதலீட்டில் கூட தங்கத்தை வாங்கலாம்.
டிஜிட்டல் தங்கம் வாங்கும் போது கட்டணங்கள் ஆன்லைனிலேயே செலுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையான தங்கமாக வேறு ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் டிஜிட்டல் தங்கத்தை விற்றுவிடலாம் அல்லது தங்கமாக டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக, எம்எம்டிசி பிஏஎம்ப் (MMTC PAMP) என்பது இந்தியாவின் முன்னணி தங்க – வெள்ளி சுத்திகரிப்பு நிறுவனம். இதன் மூலம் ஆன்லைனில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் முடியும்.
இந்தியா முழுவதும் பல தளங்கள் இந்த முறையில் தங்கம் விற்பனை செய்கின்றன.
அதேபோல், பல மொபைல் பேமென்ட்ஆப்களும் இந்த தளங்களுடன் இணைந்து தங்கப் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன.
இவற்றைத் தவிர, சில பெரிய நகைக்கடைகளும் தங்கள் வலைத்தளங்கள் மூலமாக டிஜிட்டல் தங்க சேவையை வழங்குகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாணயங்கள் அல்லது நகைகள் வடிவில் தங்கத்தை வாங்குவதற்கு அதிக அளவு பணம் தேவைப்படுகிறது, அதே நேரத்தில் டிஜிட்டல் தங்க முதலீடு, 10 அல்லது 100 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
முதலீட்டாளர்கள் எப்படி வாங்கவும் விற்கவும் முடியும்?
டிஜிட்டல் தங்கம் வாங்க வேண்டுமெனில், முதலில் ஒரு பேமென்ட் ஆப் அல்லது நகைக்கடையின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அந்த நேரத்தில், ஒரு KYC செயல்முறை செய்யப்படுகிறது. இதில் பான் எண், முகவரி மற்றும் அடையாளச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் வழங்கப்பட வேண்டும். பின்னர் ஆன்லைன் பேமென்ட் மூலம் தங்கத்தை உடனடியாக வாங்கலாம். பணம் அல்லது காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஒரு முதலீட்டாளர் டிஜிட்டல் வடிவில் வாங்கும் தங்கம் பாதுகாப்பான வால்டில் (vault) வைக்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலைக்கு கூடுதலாக சேமிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகள் சேர்க்கப்படுகின்றன.
டிஜிட்டல் தங்கத்தை வாங்கிய பிறகு அதனை விற்பதற்கான காலக்கெடு (lock-in period) எதுவும் இல்லை.
பொதுவாக தங்கத்தை நீண்ட காலம் வைத்திருக்கலாம். ஆனாலும் சில தளங்கள், அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அதனை வைத்திருக்க அனுமதிக்கின்றன.
ஒரு வாடிக்கையாளர் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும்போது, அதே அளவு தங்கம் பாதுகாப்பான வால்டில் சேமிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் தங்கத்தை நேரடியாகப் பெற (physical delivery) விரும்பினால், அவர்கள் தங்க நாணயங்கள் அல்லது தங்க கட்டிகளின் வடிவில் தங்கத்தைப் பெற முடியும்.
இதற்கான தயாரிப்பு கட்டணங்கள், டெலிவரி கட்டணங்கள், வரிகள் ஆகியவை கூடுதலாக வசூலிக்கப்படும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து செபி எச்சரிக்கிறது
டிஜிட்டல் தங்கம் குறித்து செபி எச்சரித்தது ஏன் ?
முக்கியமாக, டிஜிட்டல் தங்கத்தை வாங்குவது அல்லது விற்பது போன்ற செயல்பாடுகளில் செபி, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் கண்காணிப்பு எதுவும் இல்லை.
மேலும், பல தளங்களில் காட்டப்படும் தங்க விலையின் வெளிப்படைத்தன்மை பற்றியும் சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் தங்க விலை மேலும் உயரும் என நம்பி, டிஜிட்டல் தங்கத்தை அதிகமாக வாங்கி வருவதையும் செபி கவனித்திருக்கலாம். அதனால் கூட இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம்.
இது தொடர்பாக நிதி ஆலோசகர் பைரன் படாலியா கூறுகையில், “டிஜிட்டல் தங்கம் தொடர்பாக எழும் மிகப்பெரிய கேள்வி பாதுகாப்பு குறித்துதான். மொபைல் ஆப் அல்லது பிளாட்ஃபார்மில் நீங்கள் வாங்கும் தங்கத்தை உண்மையில் யார் பாதுகாக்கிறார்கள் என்பது குறித்து நமக்கு தெளிவாக தெரியாது. ஏதாவது தவறு நடந்தால் முதலீட்டாளர்கள் யாரிடம் புகார் செய்ய முடியும்?” என்கிறார்.
அதேபோல், டிஜிட்டல் தங்கத்தை வாங்கும்போது கூடுதலாக சில கட்டணங்களும் சேர்க்கப்படும்.
உதாரணமாக, டிஜிட்டல் தங்கத்தை வாங்குபவர்கள் தங்கத்தை நாணயம் அல்லது கட்டி வடிவில் டெலிவரி செய்யக் கோரினால், அதற்கு தயாரிப்பு கட்டணம் போன்றவற்றுக்காக கூடுதல் பணம் வசூலிக்கப்படும். இதனால் டெலிவரி எடுக்கும் போது தங்கத்தின் மொத்த விலை மேலும் உயர்கிறது.
வேறு வழிகள் உள்ளதா?
“பல்வேறு முறைப்படுத்தப்பட்டத் திட்டங்கள் மூலம், தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு செபி வழிவகை செய்துள்ளது” என தனது அறிக்கையில் செபி தெரிவித்துள்ளது.
”பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஒப்பந்தங்கள் (Exchange traded commodity derivative contracts), மியூச்சல் பண்ட் மூலம் வழங்கப்படும் ‘கோல்ட் இடிஎஃப்’-கள் (Gold ETFs) மற்றும் பங்குச்சந்தைகளில் வர்த்தகமாகும் மின்னணு தங்க ரசீதுகள் (EGRs) ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.”
“செபியால் முறைப்படுத்தப்பட்ட இந்தத் தங்கத் திட்டங்களில், செபியில் பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்கள் மூலமாக முதலீடு செய்யலாம். இவை செபியின் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டவை ஆகும்.” என்று தெரிவித்துள்ளது.