காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் 1,000-வது நாளுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன் கடைசி முயற்சியாக இந்தத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி துணை முதல்வர் உதயநிதியை சந்திக்கவும் போராட்டக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிப்படையக்கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏகனாபுரத்தை மையப்படுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 966-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்தபோதும் விமான நிலையம் அமைக்கும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது. சமீபத்திய நிதி நிலை அறிக்கையின்போது தமிழ அரசு சார்பில் பந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக் குழுவினர் ஆலோசனை: இதனிடையே ஆயிரமாவது நாளை நோக்கி செல்லும் இந்தப் போராட்டம் குறித்து போராட்ட க் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில் 1000-வது நாளுடன் போராட்டத்தை முடித்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளனர். அதற்கு முன் கடைசி முயற்சியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து திட்டத்தை கைவிட வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோவிடம் கேட்டபோது, “நாங்கள் எங்கள் பகுதியில் விமான நிலையம் வராது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். தமிழக அரசு விமான நிலையம் விரைவுபடுத்தப்படும் என்று கூறினாலும் நிதி எதுவும் ஒதுக்கவில்லை. மச்சேந்திர நாதன் கமிட்டி அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது இந்த அறிக்கையை வெளியிட்டால் தமிழக அரசின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும் என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கின்றனர். அந்த அறிக்கை எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
1000-வது நாளில் போராட்டத்தை முடிக்க திட்டம்: போராட்டம் தொடங்கி வரும் ஏப்ரல் 20-ம் தேதியுடன் 1,000-வது நாள் நிறைவடைகிறது. அன்றைய தினம் சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தலைமையில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து திட்டத்தை கைவிட வலியுறுத்த நேரம் கேட்டுள்ளோம்.
அரசு 1,000-வது நாளில் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளோம். நன்செய் நிலத்தில் விமான நிலைய விரிவாக்கத்துக்குக் கூட நீதிமன்றம் பல இடங்களில் அனுமதி அளிக்கவில்லை. பல தீர்ப்புகள் எங்களிடம் அதற்கு மேற்கோள்களாக உள்ளன. இந்தத் திட்டம் பரந்தூரில் வராது என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்றார்.