• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

11 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை!

Byadmin

Oct 21, 2024


8 மாத குழந்தையின் உணவு அட்டவணைக்கும் 11 மாத குழந்தையின் உணவு அட்டவணைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஒன்றே ஒன்று என்னவென்றால், 8 மாத குழந்தைக்கு ஐயத்தோடு கொடுக்கப்படும் உணவு, 11 மாத குழந்தைக்கு வழக்கமான உணவாக கொடுக்கலாம். அந்த காலக்கட்டத்தில் குழந்தைகளும் திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகள் திட உணவு உண்ண மறுத்தால் பயப்படாதீர்கள். சில குழந்தைகள் திட உணவுகளுக்கு பழக சில நாட்கள் பிடிக்கும். பெற்றோர்கள், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு அட்டவணை, ஒரு 11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை தயாரிக்கும் போது பெற்றோர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பரிந்துரை செய்கிறது.

குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிறது என்பதற்காக தாய்ப்பால் புகட்டுவதை தாய்மார்கள் நிறுத்தக்கூடாது. 12 மாதங்கள் அதாவது 1 வயது ஆகும் வரை குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு தாய்ப்பால் தான்.

உணவு அட்டவணை
திங்கட்கிழமை

அதிகாலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பின் காலை உணவிற்கு கோதுமை ரவையினால் செய்த உப்புமாவை கொடுக்கலாம். நற்பகலில் மீண்டும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பின் மதிய உணவிற்கு சாதத்தில் பருப்பு சேர்த்து கொடுக்கலாம். சிறிது நேரம் கழித்து மீண்டும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முன்மாலை வேளையில் பழம் கொடுப்பது சிறந்தது. இரவு உணவிற்கு பன்னீர் தோசை கொடுக்கலாம். பின் மீண்டும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை

அதிகாலையை தாய்ப்பாலுடன் தொடங்குங்கள். பின் காலை உணவிற்கு இட்லி அல்லது தோசை கொடுக்கலாம். நற்பகலில் குழந்தைக்கு பசி எடுத்தால் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மதிய உணவிற்கு தயிர் சாதம் மற்றும் மாலை வேளைகளில் மசித்த கேரட் அல்லது உருளைக்கிழங்கு கொடுக்கலாம். இரவு உணவிற்கு ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாம். பின், சிறிது நேரம் கழித்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

புதன்கிழமை

மக்ரோனி மற்றும் சீஸ் போன்ற உணவுகளை அதிகாலையில் தாய்ப்பால் கொடுத்த பின் காலை உணவிற்கு கொடுக்கலாம். மதிய உணவிற்கு வழக்கம் போல் சாதத்தில் பருப்பு சேர்த்து கொடுக்கலாம். துவரம் பருப்பிற்கு பதிலாக பயத்தம் பருப்பு சேர்த்துக்கொள்ளலாம். மாலையில் ஒரு பழம் மற்றும் இரவு ஆப்பம் கொடுக்கலாம். இவை அனைத்திற்கும் நடுவில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வியாழக்கிழமை

வழக்கம் போல் அதிகாலையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பின் காலை உணவிற்கு தோசையில் சிறிது கேழ்வரகு சேர்த்து கொடுக்கலாம். நண்பகலில் தாய்ப்பால் கொடுக்க மறந்துவிடாதீர்கள். மதிய உணவிற்கு சாதத்துடன் சிறிதளவு சாம்பார் சேர்த்து கொடுக்கலாம். மாலையில் ஆப்பிள் கேரட் சூப் கொடுக்கலாம். இரவு உணவிற்கு ரொட்டி அல்லது சாதம் கொடுத்தபின் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை

அதிகாலையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். காலை உணர்விற்கு கோதுமை தோசை கொடுக்கலாம். சாதம் அல்லது இட்லி அல்லது ஆவியில் வேகவைத்த தோசையை மதியம் மற்றும் இரவு உணவிற்கு கொடுக்கலாம். மாலையில் ஆப்பிளை வேகவைத்து கொடுக்கலாம். நண்பகலிலும் இரவு உணவிற்கு பின்னும் தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

சனிக்கிழமை

வழக்கம் போல அதிகாலையை தாய்ப்பாலுடன் தொடங்குங்கள். காலையில் இட்லி அல்லது தோசை கொடுக்கலாம். மதிய உணவிற்கு மசித்த சாதத்துடன் நெய் சேர்த்து கொடுக்கலாம். இப்போது குழந்தைக்கு முட்டை கொடுக்க ஆரம்பிக்கலாம். மாலையில் ஒரு பழம் மற்றும் இரவு உணவிற்கு தோசை கொடுக்கலாம். நண்பகலிலும் இரவு உணவிற்கு பின்னும் தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை

தாய்ப்பால் கொடுத்த பின் குழந்தைக்கு சிறிது நேரம் கழித்து உப்புமா கொடுக்கலாம். நண்பகலில் தாய்ப்பால் கொடுத்தபின் மதியம் உணவிற்கு பருப்பு சாதம் கொடுக்கலாம். மாலையில் சூப் அல்லது பழம் கொடுக்கலாம். இரவு உணவிற்கு உப்புமா அல்லது இட்லி அல்லது தோசை கொடுக்கலாம். பின் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் உணவுகளை விரும்பி உண்ணுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு எந்த உணவை கொடுக்கும் முன்பு அதை நன்கு மசித்து கொடுங்கள். குழந்தைகளுக்கு பல் முளைத்து அவர்கள் கடித்து மென்று சாப்பிட்டாலும் உணவு தொண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நன்கு மசித்து அல்லது சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொடுங்கள்.

By admin