பட மூலாதாரம், Ministry of Culture and Tourism of Türkiye
படக்குறிப்பு, காராஹான்டெப்பே தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிற்பம் கூர்மையான முக அம்சங்கள், ஒரு சிறிய மூக்கு மற்றும் குழிந்த கண்களைக் காட்டுகிறது.கட்டுரை தகவல்
ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பு, நமது மூதாதையர்கள் தங்களைப் பற்றி நினைத்த விதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
தென்கிழக்கு துருக்கியில் உள்ள சான்லியுர்ஃபாவில் (Sanliurfa) உள்ள ஒரு பழமையான தளமான காராஹான்டெப்பேயில் (Karahantepe) மனித முகம் செதுக்கப்பட்ட ‘T’ வடிவத் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் உழைப்பு குறைவான வாழ்க்கை முறையை (sedentary lifestyle) பின்பற்றத் தொடங்கிய ஆரம்பகாலக் குடியிருப்புகளில் காராஹான்டெப்பே ஒன்றாகும்.
எழுத்துத் தோன்றுவதற்கு முன், கால்நடை வளர்ப்பு (animal husbandry) அப்போதுதான் உருவாகி வந்த நியோலித்திக் (Neolithic – புதிய கற்காலம்) காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மனித முகத்தின் உருவாக்கம், ஆரம்பகால மனித சமூகங்களில் காணப்பட்ட குறியீட்டுச் சிந்தனை மற்றும் அருவமான கருத்துகள் (abstract concepts) பற்றிய முக்கியமான துப்புகளை வழங்குகிறது.
“இதுவரை, நாங்கள் தோண்டியெடுத்த கற்கள் மனிதர்களைக் குறிக்கின்றன என்று நம்பினோம், ஆனால் உண்மையான முகத்தின் சித்தரிப்பை நாங்கள் கண்டறிந்தது இதுவே முதல் முறை. இது நம்பமுடியாத உற்சாகமான தருணம்,” என இந்த அகழ்வாராய்ச்சிக்குத் தலைமை தாங்கியவரும், கண்டுபிடிப்பின் போது தளத்தில் இருந்தவருமான பேராசிரியர் நெக்மி கருல் கூறினார்.
பிரிட்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் தாவரவியலாளர் (Archaeobotanist) செரென் கபுக்சு (Ceren Kabukcu) என்பவரும் இதில் பங்கேற்கிறார். அவர் இந்த கண்டுபிடிப்பு “கலை நுணுக்கத்தின் (artistic complexity) ஒரு பரிணாம வளர்ச்சி பெற்ற மற்றும் உயர்தரமான உதாரணம்” என்று வலியுறுத்தினார்.
“நாம் எவ்வளவு அதிகமாக உதாரணங்களைக் கண்டுபிடிக்கிறோமோ, அந்த அளவு அதிகமாக இந்த உலகம் நாம் கற்பனை செய்வதை விட மிகவும் சிக்கலானது என்பதை உணருகிறோம்.”
இந்தச் சிற்பம் கூர்மையான முக அம்சங்கள், ஒரு சிறிய மூக்கு மற்றும் ஆழமான கண் குழிகளைக் (deep eye sockets) காட்டுகிறது.
பேராசிரியர் கருல், இது ஒரு தெய்வத்தைக் குறிக்கிறது என அனுமானம் செய்வதற்கு எதிராக எச்சரிக்கிறார்.
“இது கடவுளையோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதனையோ குறிக்காமல் இருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார். “இது மனித வடிவத்தின் மூலம் ஒரு யோசனை அல்லது கருத்தை அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.” மேலும், இது கலாசார மாற்றத்தின் முந்தைய விளக்கங்களுடன் ஒத்துப்போகிறது.
“ஆரம்பகாலச் சிற்பங்கள் பெரும்பாலும் விலங்குகளைக் கொண்டிருந்தன,” என்று பேராசிரியர் கருல் கூறுகிறார். “குடியேறிய வாழ்க்கை முறைக்கு மாறிய சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மனிதச் சிலைகள் தோன்றின; முதலில் விலங்குகளுடன் இணைக்கப்பட்டு, பின்னர் தனித்த உருவங்களாகத் தோன்றின. இது மனிதர்கள் தங்களை பிரபஞ்சத்தின் மையத்தில் வைக்கத் தொடங்கினர் என்பதைக் குறிக்கிறது.”
“அவர்கள் ஒரு முகத்தை மட்டும் செதுக்கவில்லை, உணர்ச்சியையும் சேர்த்தனர்,” என்று அவர் கூறுகிறார். “அர்த்தத்தைச் சேர்த்திருப்பது மேலும் நுட்பமான உலகக் கண்ணோட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறது.”
பட மூலாதாரம், Gabi Laron via Cambridge University
படக்குறிப்பு, கோலன் குன்றுகளின் தென்மேற்கு சரிவுகளில் உள்ள நஹால் எய்ன் கெவ் (Nahal Ein Gev) தளத்தில் ஆராய்ச்சியாளர்கள் 2017 ஆம் ஆண்டில் 12,000 ஆண்டுகள் பழமையான ஒரு மனித முகத்தின் உருவ சித்தரிப்பை கண்டனர்.
“எனக்கு அந்த முகத்தை தெரியும்”
காராஹான்டெப்பேயில் அகழ்வாராய்ச்சிகள் 2019 இல் தொடங்கப்பட்டன, ஆனால் பாரம்பரிய சடங்குகளுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தளமாக கருதப்பட்ட கோபெக்லிடெப்பே (Gobeklitepe) என்ற தளத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகளால்தான் முதன்முதலில் அதன் வரலாற்றுக்கு முந்தைய பாரம்பரியம் குறித்து உலகளாவிய கவனத்தை துருக்கி ஈர்த்தது. இரண்டு தளங்களும் ஏறக்குறைய கிமு 9600 முதல் கிமு 8000 வரை பயன்பாட்டில் இருந்தன.
காராஹான்டெப்பே முகத்தைப் போன்ற கலைப்பொருட்கள் லெவண்ட் (Levant) பிராந்தியத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இதில் தற்போதுள்ள லெபனான், இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அடங்கும்.
2017 இல், ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கோலன் குன்றுகளின் தென்மேற்கு சரிவுகளில் உள்ள நஹால் எய்ன் கெவ் II (Nahal Ein Gev II) தொல்பொருள் தளத்தில் 12,000 ஆண்டுகள் பழமையான மனித உருவ சித்தரிப்பை அகழ்ந்தெடுத்தனர்.
அந்தத் திட்டத்தில் பணியாற்றிய அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகப் பேராசிரியர் நடாலி மன்ரோ, காராஹான்டெப்பேயில் கண்டெடுக்கப்பட்ட உருவப்படம் உடனடியாகத் தனது கவனத்தை ஈர்த்ததாகக் கூறுகிறார்.
“நாங்கள் புகைப்படத்தைப் பார்த்தபோது, ‘அந்த முகம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொன்னோம்,” என்று அவர் கூறுகிறார். “அதன் வடிவம் மிகவும் பழக்கமானதாக இருந்தது.”
“அதன் குறைந்தபட்ச பாணி (minimalist style) ஆச்சரியமளிக்கிறது: ஒரு முகம், ஒரு புருவம் மற்றும் ஒரு தனித்துவமான மூக்கு ஆகியவற்றை உருவாக்கும் சில கோடுகள், செதுக்குவதன் மூலம் ஆழம் எட்டப்பட்டுள்ளது. நாங்கள் இஸ்ரேலில் கண்டுபிடித்த சுண்ணாம்புக் கல்லால் ஆன மனித முகத்தை இது மிகவும் ஒத்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கண்டுபிடித்த போது அனுபவித்த அதே உற்சாகத்தை நான் உணர்ந்தேன். இவ்வளவு தொலைவில் உள்ள இரண்டு இடங்களில் இவ்வளவு ஒத்த முகத்தைப் பார்ப்பது உண்மையில் வியக்க வைக்கிறது.”
பட மூலாதாரம், Karahantepe Excavation Archive
படக்குறிப்பு, காராஹான்டெப்பேயில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல ‘T’ வடிவத் தூண்களை வெளிப்படுத்தின. அவை கூரைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள், வீடுகள் மற்றும் நினைவுச்சின்னங்களைத் தாங்கி இருந்ததாக நம்பப்படுகிறது.
“பகிரப்பட்ட வரலாறு”
ஆரம்பகால நியோலித்திக் காலகட்டத்தில் மத்திய கிழக்கு முழுவதும் விரைவான கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. காராஹான்டெப்பே மற்றும் கோபெக்லிடெப்பே போன்ற அனடோலியாவில் உள்ள சமூகங்களும் லெவன்ட் பகுதியினரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியமும் அதன் சொந்த தனித்துவமான கலாசார அடையாளத்தை உருவாக்கிக்கொண்டன என்று பேராசிரியர் கருல் கூறுகிறார்.
“சான்லியுர்ஃபா இந்தக் காலத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்,” என்று அவர் உறுதிப்படுத்துகிறார். மேலும் அதன் தளங்கள் அக்காலத்தின் மனிதனைப் போன்ற குறியீடுகளை கொண்டிருக்கின்றன.
பேராசிரியர் மன்ரோவும் இதை ஒப்புக்கொள்கிறார். “இந்த வகை கலை லெவன்டில் இருந்து வடக்கே அனடோலியா நோக்கி நகர்ந்தது என்று எங்கள் முந்தைய ஆராய்ச்சி சுட்டிக்காட்டியது,” என்று அவர் கூறுகிறார். “காராஹான்டெப்பேயில் சமீபத்திய கண்டுபிடிப்பு அந்தக் சங்கிலித் தொடர் தொடர்ந்ததைக் காட்டுகிறது.”
பட மூலாதாரம், Karahantepe Excavation Archive
படக்குறிப்பு, காராஹான்டெப்பே தளம் துருக்கிய தேசியப் பூங்கா ஒன்றில் சுண்ணாம்புப் பாறைகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில் 1,40,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
இந்தச் செதுக்கப்பட்ட முகத்தைத் தவிர, தேசியப் பூங்காவுக்குள் உள்ள சுண்ணாம்புப் பாறை முகட்டில் அமைந்துள்ள 1,40,000 சதுர மீட்டர் பரப்பளவிலான காராஹான்டெப்பேயில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில், பல ‘T’ வடிவத் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை சமூக கட்டடங்களின் கூரைகளைத் தாங்கியதாக நம்பப்படுகிறது – மேலும் வீடுகள் மற்றும் நினைவுச்சின்னங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இது ஒரு துருக்கியப் புதையலை விட அதிகம் என்பதில் நிபுணர்கள் உடன்படுகின்றனர். “இது அனடோலியாவைப் பற்றியது மட்டுமல்ல,” என்று பேராசிரியர் கருல் கூறுகிறார். “இது மனிதகுலம் முழுமையின் பகிரப்பட்ட வரலாற்றிற்கான ஒரு திட்டம்.”