0
ஜப்பானில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டியில், சுவீடன் நாட்டு வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் (Armand Duplantis) கோலூன்றிப் பாய்தலில் 6.3 மீற்றர் உயரம் தாவி, 14 ஆவது முறையாக உலக சாதனையை புதுப்பித்துள்ளார்.
ஆர்மண்ட் டுப்லான்டிஸ் புதுப்பித்த உலக சாதனையின் புதிய உயரம் 6.3 மீற்றர் (20 அடி, 8.04 அங்குலம்). ஆகும். முந்தைய சாதனை குறித்து பார்த்தால், டுப்லான்டிஸ் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 6.26 மீற்றர் உயரம் தாவி உலக சாதனை படைத்திருந்தார்.
சாதனைகளின் தொடர்ச்சியாக டுப்லான்டிஸ், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 14 முறை உலக சாதனையை முறியடித்துள்ளார். இது, உலக கோலூன்றிப் பாய்தல் வரலாற்றில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பின்னர் டுப்லான்டிஸ், இந்தப் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
25 வயதான டுப்லான்டிஸ், “மோன்டோ” (Mondo) என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தையும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் பல லீக் பட்டங்களையும் வென்றுள்ளார்.
இந்தச் சாதனை, கோலூன்றிப் பாய்தல் விளையாட்டில் டுப்லான்டிஸின் ஆதிக்கத்தையும், உலக அளவில் அவரது திறமையையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.