
“எனது இரண்டு கால்களிலும் காவலர்கள் கடுமையாக அடித்தனர். என்னால் சரியாக எழுந்து நிற்க முடியவில்லை. திடீரென பெரிய கல் ஒன்று என் முதுகின் மீது வந்து விழுந்தது. வாந்தி எடுத்தவாறு அங்கேயே மயங்கி விழுந்தேன்” எனக் கூறுகிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.
கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் – வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது தனக்கு ஏற்பட்ட துயரத்தை இவ்வாறாக அவர் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து வியாழக்கிழமையன்று (நவம்பர் 27) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், ‘தாக்குதலின் பின்னணியில் இயங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை – வழக்கறிஞர்கள் மோதல் ஏற்பட்டது ஏன்?
இலங்கையில் 2009ஆம் ஆண்டு அந்நாட்டு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
‘போரை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் வழக்கறிஞர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், அந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் பிப்ரவரி 17 வரை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த வழக்கில் தன்னை மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி வந்திருந்தார்.

சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் ஏன்?
“அன்று பிப்ரவரி 17ஆம் தேதி. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக உயர்நீதிமன்றத்தின் வராண்டாவில் நடந்தபடியே, அனைவரும் வெளியே வருமாறு கூறியபடி சென்று கொண்டிருந்தேன்” என்று நடந்ததை பிபிசி தமிழிடம் விவரித்தார் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.
“நீதிமன்ற அறை எண் 3 அருகே சென்றபோது எங்களைக் கவனித்த சுப்ரமணியன் சுவாமி, விடுதலைப் புலிகளின் பணத்தில் இவர்கள் போராட்டம் நடத்துவதாகக் கூறினார். இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம்” எனத் தெரிவித்தார் அவர்.
சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பான வழக்கு நீதிபதிகள் சந்துரு, பி.கே.மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அறைக்குள் இருந்த சுப்ரமணியன் சுவாமியை முற்றுகையிட்டு சில வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பினர்.
“வழக்கறிஞர்கள் அமரும் வளைவு நாற்காலியில் சுப்ரமணியன் சுவாமி அமர்ந்திருந்தார். நான் நாற்காலி ஒன்றின் மீது ஏறியதைப் பார்த்த நீதிபதி சந்துரு, ‘இதுதான் வரம்பு (This is the limit)’ என எச்சரித்தார். அப்போது சிலர் சுப்ரமணியன் சுவாமி மீது முட்டையை வீசினர்” என்றார், அங்கயற்கண்ணி.

தாக்குதல் நடந்த நாளில் என்ன நடந்தது?
இதுதொடர்பாக, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில், வழக்கறிஞர்கள் கருப்பன், சங்கரசுப்பு, விஜேந்திரன், சா.ரஜினிகாந்த், பார்த்தசாரதி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அதே நேரம், வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் சுப்ரமணியன் சுவாமி பேசியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சா.ரஜினிகாந்த் புகார் அளித்தார்.
“மூத்த வழக்கறிஞர் கருப்பன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்று புகார் அளித்தோம். இதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதன் நகலைக் கொடுப்பதற்குத் தாமதம் செய்தனர்” என்கிறார், வழக்கறிஞர் சா.ரஜினிகாந்த். (இவர் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்)
பிப்ரவரி 19ஆம் தேதி சுமார் 12 மணியளவில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் குவிந்தனர். அப்போது வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் வழக்கறிஞர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
அப்போது உயர் நீதிமன்ற செய்தியாளராகப் பணிபுரிந்து வந்ததால் சம்பவ இடத்தில் இருந்த நானும் இந்தக் காட்சியைப் பார்த்தேன். சென்னை மாநகர காவல் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இணை ஆணையர் (வடக்கு) ராமசுப்ரமணி, துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்பட உயர் அதிகாரிகள் பலரும் அங்கு கூடியிருந்தனர்.
அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடியே நிகழ்வுகளைக் கவனித்தனர். உயர் நீதிமன்ற வளாகத்தின் மற்றொரு புறம் எஸ்பிளனேடு காவல் நிலையம் அமைந்திருந்தது. அதன் நுழைவு வாயிலில் இருந்து குடும்ப நீதிமன்றம் வரை கையில் லத்தியுடன் ஏராளமான காவலர்கள் குவிந்திருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ரத்த காயத்துடன் பதறிய நீதிபதி
சுமார் 2 மணிக்குப் பிறகு காவல் நிலையம் அருகே கூடியிருந்த வழக்கறிஞர்களை காவலர்கள் தாக்கத் தொடங்கினர். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் நொறுக்கப்பட்டன.
வழக்கறிஞர்கள், பொது மக்கள், பத்திரிகையாளர்கள் என காவலர்களின் கண்ணில் பட்ட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல், தலை, கால் ஆகியவற்றைக் குறிவைத்தே நடந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
சுமார் 4 மணியளவில் தலையில் காயத்துடன் பதறியபடியே நடந்து வந்து கொண்டிருந்தார், நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன். ‘இது சார்ட்டர்ட் கோர்ட்… என்ன நடக்கிறது?’ எனப் பதறியபடியே வந்த அவரை வழக்கறிஞர் சுதா (தற்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி) கைத்தாங்கலாக அழைத்துச் சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினார்.
வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடப்பதைக் கேள்விப்பட்டு வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் (தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர்), அங்கிருந்த என்னைக் கடந்து சென்று நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நுழைந்தார்.
அப்போது அவரைச் சூழ்ந்து கொண்டு காவலர்கள் தாக்கியதில் சிறிது நேரத்தில் தலையில் அதீத ரத்தத்துடன் வெளியே அழைத்து வரப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.
அதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன், “எனக்கு தலை மற்றும் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு மூன்று மாதம் தொடர் சிகிச்சையில் இருந்தேன்,” எனக் கூறுகிறார்.
காவல்துறையின் தாக்குதலுக்கு எதிராக எதிர்முனையில் நின்றிருந்த வழக்கறிஞர்கள் பலரும் கையில் கிடைத்த கற்களை எடுத்து காவலர்கள் மீது வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.
‘என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்ற பதற்ற சூழலில், அருகில் இருந்த நீதிமன்ற கட்டடத்தின் முதல் தளத்திற்குச் சென்று அங்குள்ள சிறிய ஜன்னல் வழியாக நடந்து கொண்டிருந்த மோதலை கவனிக்கத் தொடங்கினேன்.
அப்போது எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் திடீரென தீ பரவியது. இந்தத் தீ விபத்தில் காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. “இந்தத் தீயில் வழக்கறிஞர்கள் மீது சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின்பேரில் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர், மற்றும் அவர் மீது நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் எரிந்துவிட்டதாக காவல்துறை கூறியது” என்கிறார், வழக்கறிஞர் சா.ரஜினிகாந்த்.

‘2 மணிநேரத்துக்கு மேலாக நீடித்த தாக்குதல்’
இலங்கைத் தமிழர் போராட்டங்களை முன்னெடுத்த வழக்கறிஞர்களை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறுகிறார், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “எனது இரண்டு கால்களில் கடுமையாகத் தாக்கினர். இடதுகாலின் கீழே உள்ள ஜவ்வு கிழிந்துவிட்டதாகப் பிறகு மருத்துவர்கள் கூறினர். கால்களை நிலத்தில் ஊன்ற முடியவில்லை,” என்றார்.
“அடிக்கும்போதே பெரிய கல் ஒன்று நடுமுதுகில் வந்து விழுந்தது. அப்படியே வாந்தி எடுத்தவாறு கீழே விழுந்துவிட்டேன். என்னை வழக்கறிஞர் ஒருவர் தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினார். அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த மோதலில் மாலை 6 மணி வரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் அடிபட்ட வழக்கறிஞர்கள் வந்து கொண்டே இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
“அரசு மருத்துவமனையில் ஒருநாள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். பிறகு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காவல் துறையின் செயல்பாட்டைக் கண்டித்து மருத்துவமனையிலும் உண்ணாவிரதம் இருந்தோம்” என்கிறார், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.
காவல் நிலையத்தை எரித்தது யார்?
எஸ்பிளனேடு காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் வழக்கறிஞர் அங்கயற்கண்ணியின் பெயர், முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. “மாலை சுமார் 6 மணியளவில் காவல் நிலையம் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆறாவது நபராக என்னைச் சேர்த்துள்ளனர்” என்கிறார் அவர்.
“ஆனால், மாலை சுமார் மூன்று மணியளவில் காலில் அடிபட்ட என்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக ஆவணங்கள் உள்ளன. பிறகு எப்படி நான் 6 மணியளவில் காவல் நிலையத்தை எரித்திருக்க முடியும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சுப்ரமணியன் சுவாமி மீது முட்டை வீசியதாகப் பதியப்பட்ட வழக்கில் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் நள்ளிரவு நேரத்தில் தன்னை காவல்துறை தேடி வந்து கைது செய்ததாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
காவல் துறையின் தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வந்தது. ஆனால், வழக்கறிஞர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
“எனக்கு அதிக காயம் ஏற்பட்டிருந்ததால் ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாகக் கொடுத்தனர். ஆனால் அதை ஏற்கவில்லை” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன்.
பட மூலாதாரம், Getty Images
’32 வழக்கறிஞர்கள்… 5 காவலர்கள் மீது வழக்கு’
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ விசாரித்து வந்தது. சி.பி.ஐ விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே, 2009 அக்டோபர் மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அதில், ‘சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூடுதல் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி, துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர், சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘நீதிமன்ற வளாகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் அதிகாரிகள் செயல்பட்டனர். இதில் எந்தச் சதியும் இல்லை’ எனக் கூறினார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சி.பி.ஐ விசாரணையை கேலிக்கூத்தாக மாற்றும் என்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக அறிக்கையில் எந்த முடிவையும் வழங்க முடியாது எனவும் அவர் வாதிட்டார்.
“இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால அறிக்கை ஒன்றை சி.பி.ஐ தாக்கல் செய்தது. அதில், மோதல் சம்பவம் தொடர்பாக 32 வழக்கறிஞர்கள் மற்றும் ஐந்து போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேந்திரன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘சி.பி.ஐ விசாரணை சரியான முறையில் நடக்கவில்லை’ எனக் கூறியிருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று நடந்த மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றதாக மனுவில் கூறியுள்ள அவர், “ஆனால், சி.பி.ஐ தனது அறிக்கையை வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ளது” எனத் தெரிவித்தார். அதோடு, சிபிஐ தாக்கல் செய்த மனுவின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இதை ஏற்று மேல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

வழக்குகள் ரத்து – நீதிபதி சொன்ன காரணம்
இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் மோதல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு ரத்து செய்யப்பட வேண்டுமென்று வழக்கறிஞர் சா.ரஜினிகாந்த் உள்பட 28 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை மோகன கிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய நீதிபதி நிர்மல்குமார், “மோதல் சம்பவம் நடந்தபோது அனைத்து நிகழ்வுகளையும் ஒரு வழக்கறிஞராக நானும் நேரில் பார்த்தேன்” எனக் குறிப்பிட்டு தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.
வியாழக்கிழமையன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், மனுதாரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார். குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட 15 ஆண்டுக்கால தாமதம், ஊடகங்களில் வெளியான மங்கலான புகைப்படங்களை நம்பியிருப்பது, அடையாள அணிவகுப்பு நடத்தத் தவறியது போன்றவற்றை வழக்கை ரத்து செய்வதற்கான காரணங்களாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
“பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு தரப்பினரும் மறந்துவிட்டு முன்னேற வேண்டிய நேரம் இது. வழக்குகளைத் தொடர்வது பயனற்ற செயல்” எனவும் நீதிபதி நிர்மல்குமார் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
“வழக்குகளை ரத்து செய்ததன் மூலம் இது இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைவரிடமும் பேசி முடிவு செய்வோம்” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன்.
“உச்சபட்ச விசாரணை அமைப்பாக சி.பி.ஐ உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மீதே அவர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். காவல் துறை உயர் அதிகாரிகள் தவிர்த்து ஐந்து காவலர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் இறந்துவிட்டார்” எனவும் அவர் தெரிவித்தார்.
“வழக்கில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது” என்கிறார், வழக்கறிஞர் சா.ரஜினிகாந்த்.

‘யாரையும் குறை சொல்ல முடியாது’
“இந்த விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டுக் குறை சொல்ல முடியாது” எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி.
“உயர் நீதிமன்றத்தில் யாரும் எதிர்பார்க்காமல் மோதல் நடந்தது. எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை. இரு தரப்புமே ஒருவர் மீது ஒருவர் குறை கூறினர். காவல் துறை மீது தவறு இருந்திருந்தால் நீதித்துறை அமைதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார் அவர்.
காவல் நிலையம் கொளுத்தப்பட்டது முதல் பல்வேறு விவகாரங்கள் இதன் பின்னணியில் உள்ளதாகக் கூறிய அவர், “காவல் துறையும் நீதித் துறையும் தொழில்ரீதியாக ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படக் கூடியவர்கள். அந்த வகையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது” என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 19 அன்று கறுப்புக் கொடி அணிந்து நீதிமன்ற வளாகத்தை வலம் வந்து, 2009 சம்பவத்தை நினைவுகூரும் வழக்கத்தை வழக்கறிஞர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். அதை கறுப்பு தினமாகவும் அனுசரிக்கின்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போலீஸ் – வழக்கறிஞர்கள் மோதலுக்குப் பிறகு உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, 2015ஆம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) கட்டுப்பாட்டின்கீழ் சென்னை உயர் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது.
“இந்த நடவடிக்கை உடனடித் தேவையாக உள்ளது” என, அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சிவஞானம் அமர்வு தமது தீர்ப்பில் தெரிவித்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு