படக்குறிப்பு, டாக்கா வந்தடைந்த பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தாரிக் ரஹ்மான்
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கை தேர்தலிலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரஹ்மான் மீண்டும் டாக்கா திரும்புவதும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தாரிக் ரஹ்மானின் தாயாரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதோடு, நாட்டிற்குள் பல விஷயங்கள் கட்டுப்பாடற்று இருக்கும் ஒரு சூழலில் அவர் வங்கதேசம் திரும்பியுள்ளார்.
தாரிக் ரஹ்மானின் வருகைக்கு வங்கதேச ஊடகங்களில் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் ஆங்கில நாளிதழான ‘ப்ரோதோம் ஆலோ’ தனது கருத்துக் கட்டுரை பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது, அதன் தலைப்பு: ‘தாரிக் ரஹ்மானின் வருகை ஏன் முக்கியமானது?’
ப்ரோதோம் ஆலோ எழுதியுள்ளதாவது: “உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில்தான் அவர் திரும்புவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. 1975-க்குப் பிறகு நாடு மிக நெருக்கடியான நிலையில் இருக்கும் சூழலில் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்புகிறார். தாரிக் முன் மிகப்பெரிய மற்றும் கடினமான சவால்கள் உள்ளன. தேர்தல் சமயத்தில் பிஎன்பி கட்சியின் உண்மையான தலைவராகவும், ஒருவேளை அவர் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானால் அதற்கு மேலதிகமான சவால்களையும் அவர் சந்திக்க வேண்டியிருக்கும்.”
ப்ரோதோம் ஆலோ-வின் இந்த கட்டுரையில் வங்கதேச அரசியல் ஆய்வாளர் ஸாஹித்-உர் ரஹ்மான் எழுதியதாவது: “ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சி மற்றும் அவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற பிறகு, அவாமி லீக்கிற்கான ஆதரவு ஒரே இரவில் முடிந்துவிடவில்லை என்பது உண்மைதான். இருப்பினும், தற்போதைக்கு அவாமி லீக் மீண்டு வருவது எளிதாகத் தெரியவில்லை.”
“வங்கதேச அரசியல் களத்தில் பிஎன்பி மட்டுமே முக்கிய சக்தியாக நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆட்சிக்கு வந்த பிறகு பிஎன்பி எவ்வாறு நிர்வாகம் செய்கிறது மற்றும் அடிமட்ட அளவில் ஒரு அரசியல் கட்சியாக அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது நாட்டின் எதிர்காலத்தோடும் மக்களின் எதிர்காலத்தோடும் ஆழமாகத் தொடர்புடையது.”
ஸாஹித்-உர் ரஹ்மான் மேலும் எழுதியுள்ளதாவது “நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பிஎன்பி-யை ஆதரிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உண்மையில் இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதும் அல்ல. அவாமி லீக் இல்லாத நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையில் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளின் கூட்டணி பிஎன்பி-க்கு எதிராக உருவெடுத்து வருகிறது. தாராளவாத ஜனநாயக அல்லது நடுநிலை அரசியல் நாட்டிற்கு மிகவும் பொருத்தமானது என்று நம்புபவர்களுக்கு, தற்போதைய குறைகளுக்கு மத்தியிலும் பிஎன்பி மட்டுமே ஒரே மாற்றாக உள்ளது.”
பட மூலாதாரம், @bdbnp78
படக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பியுள்ளார்
சிறுபான்மையினர் குறித்து அவர் என்ன சொன்னார்?
தாரிக் ரஹ்மானின் வருகை மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்க நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’ எழுதியுள்ளதாவது: “வங்கதேச பிரதமர் பதவிக்கான முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான அவர், நாட்டில் சட்ட வழக்குகளை எதிர்கொண்ட காரணத்தால் சுமார் இரண்டு தசாப்தங்களாக நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்தார், அவர் வியாழக்கிழமை தலைநகர் டாக்காவிற்குத் திரும்பினார். தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளாக பிரிட்டனில் இருந்தவாறே வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) உண்மையான தலைவராக கட்சியின் அரசியல் விவகாரங்களை வழிநடத்தினார்.”
நியூயார்க் டைம்ஸ் மேலும் எழுதியுள்ளது: “60 வயதான ரஹ்மான் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தத் தயாராகி வருகிறார். அரசியல் மாற்றத்தில், ரஹ்மான் மீது டஜன் கணக்கான வழக்குகளைப் பதிவு செய்து பிஎன்பி-யைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இப்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கின் செயல்பாடுகளுக்கு, கடந்த ஆண்டு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு தடை விதிக்கப்பட்டது.”
நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளதாவது: “தேர்தலில் அவாமி லீக் இல்லாதது பிஎன்பி-யை நாட்டின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாற்றியுள்ளது. ஆனால் வரவிருக்கும் மாதங்கள் ரஹ்மானுக்கோ அல்லது அவரது கட்சிக்கோ எளிதானதாக இருக்காது. வன்முறை கும்பல்களின் அட்டகாசம், அதிகரித்து வரும் மத சகிப்பின்மையின் வெளிப்படையான காட்சிப்படுத்தல்கள், வாக்குப்பதிவு விதிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆகியவற்றால் மிகவும் தீவிரமடைந்துள்ள ஒரு குழப்பமான காலகட்டத்தில் இந்தத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
தாரிக் ரஹ்மான் திரும்பிய பிறகு ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், “ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளை” மீட்டெடுக்கப் பாடுபடப்போவதாக” உறுதியளித்ததாக நியுயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி தீவிரவாத சக்திகள் வளர்ச்சியடைவது குறித்தும் அவர் பேசினார். நாட்டின் இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த சிறுபான்மையினரின் சம உரிமைகளை தாரிக் ரஹ்மான் வலியுறுத்தினார்.
“நாம் அனைவரும் இணைந்து ஒரு தாய் கனவு காண்பது போன்ற வங்கதேசத்தை உருவாக்க விரும்புகிறோம். அதாவது நாம் ஒரு பாதுகாப்பான வங்கதேசத்தை உருவாக்க விரும்புகிறோம். ஒரு பெண், ஆண் அல்லது குழந்தையாக இருந்தாலும் சரி, அவர்கள் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியே சென்றால், பாதுகாப்பாக வீடு திரும்பக்கூடிய ஒரு வங்கதேசத்தை நாம் விரும்புகிறோம்,” என தாரிக் கூறினார்.
பட மூலாதாரம், @bdbnp78
படக்குறிப்பு, தாரிக் ரஹ்மானின் பிஎன்பி தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் பிரதமராகலாம்
தாரிக் ரஹ்மானின் வாக்குறுதி
வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘தி டெய்லி ஸ்டார்’ தாரிக் ரஹ்மானின் வருகை குறித்து எழுதியுள்ளதாவது: ” சமூக ஊடகங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களை மகிழ்விக்கும் வகையில் ரஹ்மான் அவரது மனைவி ஜுபைதா ரஹ்மான், மகள் ஸைமா மற்றும் குடும்பப் பூனையுடன் டாக்கா வந்தடைந்தார். இந்தக் காட்சியின் குறியீட்டு முக்கியத்துவம் ஆழமானது.”
“விமான நிலைய முனையத்திற்கு வெளியே, 60 வயதான அந்தத் தலைவர் வெறும் காலுடன் நின்று 17 ஆண்டுகளாகத் தான் பிரிந்திருந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் ஒரு குண்டு துளைக்காத பேருந்தில் ஏறி, ஊர்வலமாக வரவேற்பு இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் பெருந்திரளான ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். இது அனைத்து விதத்திலும் 2008-ல் அவர் பிரிட்டன் சென்றபோது தொடங்கிய அந்தத் தேக்க நிலையின் முடிவாகும்.”
டெய்லி ஸ்டார் எழுதியுள்ளது: “அவரது வருகை சிதறிக்கிடக்கும் அரசியல் சூழலில் ஓரளவு சமநிலையை மீட்டெடுக்கக்கூடும். டாக்கா வந்தடைந்ததும் அவர் விமான நிலைய ஓய்வறையில் இருந்து தொலைபேசி மூலம் இடைக்கால அரசாங்கத்தின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸைத் தொடர்பு கொண்டு, தமக்கும் தமது குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பிற்காக நன்றி தெரிவித்தார். அவர் இறுதியாகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, ‘பாதுகாப்பான வங்கதேசத்தை’ உருவாக்குவோம் என்று அவர் அளித்த வாக்குறுதிதான் அவரது பேச்சில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய பகுதி.”
“சமீப காலங்களில் அரிதாகிப்போன அந்தப் பாதுகாப்பு என்ற அடிப்படை உணர்வை அவர் வலியுறுத்தினார். சாலைகளில் பரவியிருக்கும் வன்முறையற்ற ஒரு தேசத்தின் தோற்றத்தை அவர் விவரித்தார். ஒவ்வொரு பெண்ணும், ஆணும், குழந்தையும் வீட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறி, பாதுகாப்பாக வீடு திரும்பக்கூடிய ஒரு நாட்டை அவர் முன்நிறுத்தினார். பன்மைத்துவத்தின் மீதான தாரிக் ரஹ்மானின் அழுத்தம் மிகவும் குறிப்பிடத்தக்கது,” என்று டெய்லி ஸ்டார் எழுதியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் விடுதலைப் போர் மரபு தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன (கோப்புப் படம்)
ஜமாத்-இ இஸ்லாமி குறித்த கேள்வி
வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘டாக்கா ட்ரிப்யூன்’ தாரிக் ரஹ்மான் வருகை குறித்து ‘ப்ராக்ரஸ்’ இதழின் ஆசிரியரும் நார்த் சவுத் பல்கலைக்கழக சட்டத் துறையின் மூத்த விரிவுரையாளருமான சாகிப் ரஹ்மான் எழுதியுள்ள ஒரு திறந்த மடலைப் பிரசுரித்துள்ளது.
அந்தக் கடிதத்தில் சாகிப் எழுதியுள்ளதாவது: “உங்கள் கட்சி ஆரம்பத்தில் தேர்தலைக் கோரியதுடன் எந்தவொரு சீர்திருத்தங்களுக்கும் திட்டவட்டமாக எதிராக இருந்தது. உண்மையில், உங்கள் கட்சியின் தலைமை ஆரம்பத்தில் ஹசீனாவின் ஜனநாயகமற்ற அரசியலமைப்பையே தொடர முடிவெடுத்ததாக எங்களுக்குச் செய்திகள் கிடைத்தன.”
“எனது வெளிப்படையான கருத்திற்காக என்னை மன்னிக்கவும், ஆனால் நீங்கள் அடுத்த பிரதமராவதற்கு இருக்கும் வலுவான வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த அவமானகரமான அரசியலை பின்பற்றுவது நீங்கள் மிகவும் பேராசையுடன் இருப்பதான தோற்றத்தை தரும். இதைச் சொன்ன போதிலும், உங்கள் கட்சியின் சில தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பணம் மற்றும் அதிகாரத்தின் மீதான ஆசை தெளிவாகத் தெரிகிறது. கட்சி அரசை அமைப்பதற்கு முன்பே நாடு முழுவதும் உங்கள் உள்ளூர் தலைவர்களால் கட்டாய வசூல் செய்யப்படுவதைக் குறிப்பிடாமல் இருப்பது கடினம்.”
சாகிப் மேலும் எழுதியுள்ளார்: “நான்காவது விஷயம் என்னவென்றால், உங்கள் கட்சி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு தற்செயலாகவே அதிகம். ஏனெனில் மற்றொரு முக்கிய மாற்று சக்தியாக இருந்தவர்கள் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிஎன்பி பங்கேற்காத தேர்தல்களில் அவாமி லீக் எப்படி அரசாங்கத்தை அமைத்ததோ அதேபோல மற்றொரு பெரிய கட்சி அதிகாரத்தில் இல்லாததாலேயே நீங்கள் அரசாங்கத்தை அமைப்பீர்கள்.”
“எனவே, ஜூலை புரட்சிக்குப் பிறகு பழைய அரசியல் நடைமுறைகளில் இருந்து விடுதலை பெற விரும்புபவர்கள் மற்றும் உண்மையான மாற்றத்தைக் கற்பனை செய்யும் ஒவ்வொரு குடிமகனின் விருப்பமும் பிஎன்பி தான் என்று நம்புவதற்கு எந்த உறுதியான காரணமும் இல்லை. இந்த விஷயத்தை பிஎன்பி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் தெளிவுபடுத்துவதும், வங்கதேசத்தின் பொதுமக்களை ஏமாற்ற வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குவதும் பாராட்டுக்குரியதாக இருக்கும்.”
“ஒரு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரரின் மகன் என்ற முறையிலும், 1971 விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியின் தலைவர் என்ற முறையிலும், நீங்கள் ஏன் ஒரு காலத்தில் வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமியுடன் கூட்டணி வைக்க வேண்டியிருந்தது மற்றும் அந்த முடிவிற்காக நீங்கள் இப்போது வருந்துகிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள எந்தவொரு குடிமகனும் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என சாகிப் எழுதியுள்ளார்.