படக்குறிப்பு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான்
டாக்காவில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) நிர்வாகத் தலைவர் தாரிக் ரஹ்மான், “கடவுள் விரும்பினால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம், நமது நம்பிக்கைக்குரிய வங்கதேசத்தை உருவாக்க கடுமையாக உழைப்போம். வரும் நாட்களில், நாட்டை வழிநடத்த யார் முன்வந்தாலும், அவரது தலைமையின் கீழ் வளர்ச்சிக்காகவும், அந்தப் புதிய தலைவர் காட்டிய பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றார்.
தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 25 அன்று வங்கதேசம் திரும்பினார்.
“நாட்டின் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கான ஒரு திட்டம் என்னிடம் உள்ளது.” என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், அந்தத் திட்டம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
தனது உரையின் முடிவில், வன்முறையை நிறுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், ‘நாட்டில் அமைதியைப் பேணுவது நமது பொறுப்பு’ என்றார்.
அவர் வந்த விமானம் வியாழக்கிழமை (டிசம்பர் 25) காலை 11:41 மணிக்கு டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஆயிரக்கணக்கான பிஎன்பி தொண்டர்களும் ஆதரவாளர்களும் வீதிகளில் தாரிக் ரஹ்மானை வரவேற்றனர்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தலுக்கு முன்பு தாரிக் ரஹ்மான் வங்கதேசத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் போட்டியிட வங்கதேச அவாமி லீக் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பிஎன்பி தேர்தலில் வெற்றி பெற்றால், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் பிரதமராக முடியும். அவரது தாயார் கலீதா ஜியா தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். பிஎன்பி கட்சி தற்போது தாரிக் பொறுப்பில் செயல்படுகிறது.
பட மூலாதாரம், BNP Media Cell
படக்குறிப்பு, தாரிக் ரஹ்மான், அவரது மகள் (நடுவில்) மற்றும் அவரது மனைவி ஜுபைதா ரஹ்மான்
யார் இந்த தாரிக் ரஹ்மான்?
கலீதா ஜியா நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேச அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவர் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
வங்கதேசத்தின் அதிபராக இருந்த ஜியாவுர் ரஹ்மான் 1981ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். கலீதா ஜியா வங்கதேசத்தில் பல கட்சி ஜனநாயகக் கொள்கையின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
பேகம் ஜியா 1991ஆம் ஆண்டு வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரானார். 1991 தேர்தலில் பிஎன்பி வெற்றி பெற்றது. 2001ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர், 2006 வரை ஆட்சியில் இருந்தார்.
கடந்த மூன்று தேர்தல்களையும் பிஎன்பி புறக்கணித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்தை கலீதா ஜியா ஆதரித்தார். தற்போது வங்கதேசத்தில் பிஎன்பி மிகப்பெரிய கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தலில் அது ஆட்சிக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், BNP Media
படக்குறிப்பு, பிஎன்பி நிர்வாகத் தலைவர் தாரிக் ரஹ்மான் தனது மனைவி ஜுபைதா ரஹ்மானுடன்.
ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது கலீதா ஜியா சிறையில் இருந்தார். அவரது மகன் தாரிக் ரஹ்மானும் பல வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் முகமது யூனுஸின் இடைக்கால அரசு கலீதாவையும் அவரது மகனையும் அந்த வழக்குகளில் இருந்து விடுவித்தது.
வங்கதேசத்தில் 2007 ஜனவரியில் பொறுப்பேற்ற ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசின் ஆட்சிக் காலத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் கைது செய்யப்பட்டார். அவர் சுமார் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் அவர் 2008 செப்டம்பர் 3 அன்று விடுவிக்கப்பட்டார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு, 2008 செப்டம்பர் 11 அன்று அவர் தனது குடும்பத்துடன் டாக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றார். அப்போது முதல், தாரிக் ரஹ்மான் லண்டனில் வசித்து வருகிறார்.
பட மூலாதாரம், MUNIR UZ ZAMAN/AFP via Getty
படக்குறிப்பு, சலாவுதீன் அகமது (கோப்புப் படம்)
செய்தியாளர் சந்திப்பில் என்ன கூறப்பட்டது?
இந்த மாதத் தொடக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ‘கலீதா ஜியாவின் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்வதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும்’ தெரிவித்தார்.
இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, “பேகம் கலீதா ஜியாவின் உடல்நிலை குறித்து அறிந்து நான் மிகுந்த வருந்துகிறேன். பேகம் ஜியா தனது பொது வாழ்க்கையில் பல ஆண்டுகளாக வங்கதேசத்திற்காகப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக இந்தியா தம்மால் இயன்றதைச் செய்யத் தயாராக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, தாரிக் ரஹ்மானை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் டாக்காவின் வீதிகளில் திரண்டனர்.
பிரதமர் மோதியின் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், வங்கதேச தேசியவாத கட்சி, “பிஎன்பி தலைவர் பேகம் கலீதா ஜியாவின் உடல்நலத்திற்காகப் பிரார்த்தனை செய்த இந்திய பிரதமருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆதரவை பிஎன்பி கட்சி பாராட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, இந்திய அரசுக்கும் பிஎன்பி-க்கும் இடையே இத்தகைய சுமூகமான உறவு அரிதாகவே இருந்தது. அதேநேரம், ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது தொடர்பாக இந்திய அரசை பிஎன்பி விமர்சித்தும் வருகிறது.
இந்திய பிரதமர் 2015 ஜூன் மாதம் வங்கதேசத்திற்குச் சென்றிருந்தபோது, கலீதா ஜியாவை சந்தித்துப் பேசினார். அந்தக் காலகட்டத்தில், இந்தியா வங்கதேசத்துடன் நில எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அப்போது ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தார்.
அது வங்கதேச எதிர்க்கட்சியினருடன் பிரதமர் மோதி நடத்திய ஒரு அசாதாரண சந்திப்பாகும். கலீதா ஜியா மட்டுமல்லாது, ஜாதியா கட்சியின் (Jatiya Party) ரோஷன் எர்ஷத்தையும் இந்திய பிரதமர் சந்தித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த 2007இல் ராணுவ ஆதரவுடன் கூடிய இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார் (கோப்புப் படம்)
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தாரிக் ரஹ்மான் தாயகம் திரும்புவதற்காக முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிஎன்பி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) மற்றும் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துள்ளதாக சலாவுதீன் அகமது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், பிஎன்பி கட்சியும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
தாரிக் ரஹ்மானை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக சிவப்பு மண்டலப் பகுதியில் (Red Zone) நிலைக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
டாக்காவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்குமாறு பிஎன்பி வேண்டுகோள் விடுத்திருந்தது.
தாரிக் ரஹ்மானுக்கு “சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள்” செய்யப்பட்டு இருப்பதாக அகமது தெரிவித்தார்.
தாரிக் ரஹ்மானின் வருகையையொட்டி நடைபெறவுள்ள நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, விமான நிலையம், ‘தீன் சௌ ஃபீட் சாலை’ மற்றும் உத்தரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.