பட மூலாதாரம், INSTAGRAM/BHUWANESHWARI SHEESANT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, ஐபிஎல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் லலித் மோதி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கேல் கிளார்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் கிரிக்கெட்டர் மைக்கேல் கிளார்க்கின் Beyond23 Cricket Podcast என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட லலித் மோதி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்த 17 ஆண்டுக்கு முந்தைய “slapgate” வீடியோவைப் பற்றி பேசினார், நிகழ்ச்சியில் அந்த காணொளியும் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில், எதிரணி அணியின் வீரர்களுடன் மைதானத்தில் கைகுலுக்கிக் கொண்டிருக்கும் ஹர்பஜன் சிங், யாரும் எதிர்பாராத விதமாக ஸ்ரீசாந்தை அறைவதையும் காணலாம். அறை வாங்கிய ஸ்ரீசாந்த் அழுதுவிட்டார்.
இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் “slapgate” என்று பிரபலமானது. 2008ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (அப்போது கிங்ஸ் XI பஞ்சாப்) அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபில் போட்டியில் இந்த மோசமான சம்பவம் நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ‘அறையும்’ காட்சிகள், முதன்முறையாக ‘Beyond23’ பாட்காஸ்டின் சமீபத்திய எபிசோடில் காட்டப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
ஸ்ரீசாந்தின் மனைவியின் கோபத்துக்கு காரணம் என்ன?
ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “லலித் மோதி மற்றும் மைக்கேல் கிளார்க், நீங்கள் இருவரும் வெட்கப்பட வேண்டும். உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? மலிவான விளம்பரம் மற்றும் சமூக ஊடகப் பார்வைகளைப் பெறுவதற்காக 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை இப்போது நீங்கள் இழுத்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் அவர்களின் பழைய காயங்களை மீண்டும் கிளறிவிடுகிறீர்கள். ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருக்குமே இப்போது பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் செய்தது அருவருப்பான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்” என்று எழுதியுள்ளார்.
“ஸ்ரீசாந்த் மிகவும் கடினமான நாட்களைக் கடந்து, தற்போது கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளார். ஸ்ரீசாந்தின் மனைவியாகவும், அவரது குழந்தைகளின் தாயாகவும், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வீடியோ மீண்டும் வெளிவருவதும், அதைப் பார்ப்பதும் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேதனையான அனுபவமாகும். மீண்டும் இந்த அதிர்ச்சியைச் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு எங்களை உள்ளாக்கிவிட்டீர்கள். சமூக ஊடகத்தில் பார்வைகளைப் பெறுவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது ஒன்றுமறியா குழந்தைகளை காயப்படுத்தியுள்ளது, இப்போது அவர்களும் பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செய்யாத தவறுக்கு அவர்கள் அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று புவனேஸ்வரி ஸ்ரீசாந்த் எழுதியுள்ளார்.
“இந்த இழிவான மற்றும் மனிதாபிமானமற்ற செயலுக்காக உங்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். ஸ்ரீசாந்த் வலிமையானவர், நல்ல குணங்களைக் கொண்டவர். எந்தவொரு வீடியோவும் அவரது கண்ணியத்தைப் பறிக்க முடியாது. குடும்பங்களை காயப்படுத்துவதற்கு முன்பு, கடவுளுக்கு பயப்படுங்கள். உங்கள் சொந்த நலனுக்காக குழந்தைகளை காயப்படுத்தாதீர்கள்” என்று அவர் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
லலித் மோதி மற்றும் கிளார்க்கின் பாட்காஸ்ட் பதிவை டேக் செய்த புவனேஸ்வரி ஸ்ரீசாந்த், “உண்மையை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நீங்கள் என்னுடைய கருத்தை நீக்கிவிட்டீர்கள். பார்வைகளுக்காக பதிவிட முடிந்த உங்களுக்கு , உண்மையை வெளிகாட்டும் தைரியம் இருக்கவேண்டும்” என்று எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடக பயனர்களும் இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது எக்ஸ் தளப் பதிவில், “ஹர்பஜன்-ஸ்ரீசாந்த் வீடியோ 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எங்களில் மிகச் சிலரே அன்று நிகழ்ந்ததை நேரில் பார்த்தோம், ஐபிஎல் தொடங்கிய முதல் ஆண்டில் இதுபோன்ற செய்தி வெளிவருவது எதிர்மறையாக இருக்கும் என்பதால், அதை பொதுவெளியில் கொண்டுவரவேண்டாம் என்று நாங்கள் உறுதியளித்திருந்தோம்” என்று எழுதியுள்ளார்.
ஆகாஷ் என்ற எக்ஸ் தளப் பயனர், “இது வெறும் “அடிப்பது தொடர்பான” விஷயம் அல்ல, உண்மையைச் சொல்வதானால், ஸ்ரீசாந்த்தால் இதற்குப் பிறகு மீள முடியவில்லை. மூத்த சகோதரர் போன்ற ஹர்பஜன் இப்படி செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. அவரது கேப்டன் யுவராஜ், தனது அணியின் வீரருக்கு ஆதரவு கொடுப்பதற்குப் பதிலாக தனது நண்பருடன் இருந்துவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
“ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான தருணங்களில் ஒன்றான ஹர்பஜன்-ஸ்ரீசாந்த் ‘ஸ்லாப்கேட்’ தொடரின் பார்க்கப்படாத, இதற்குமுன்பு ஒளிபரப்பப்படாத காட்சிகள்” என விஷால் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் எழுதினார்.
முன்னதாக, சர்ச்சைக்குரிய பாட்காஸ்டின் வீடியோவை வெளியிட்ட லலித் மோதி, “எனது Beyond23 Cricket Podcast நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் பிரபலமான “slapgate” அறை காட்டப்பட்டுள்ளது. எனக்கு ஹர்பஜன் சிங்கை மிகவும் பிடிக்கும். ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சொல்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், அவை தற்போது உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே இருக்கும். அதனை, நான் ஐபிஎல் தலைவராகவும் ஆணையராகவும் இருந்தபோது சோனி இந்தியாவின் சந்தைப்படுத்தல் தலைவராக பதவி வகித்த சினேகா ரஜ்னி என்னுடைய சார்பில் கவனித்துக் கொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
2008 ஏப்ரல் 25ஆம் நாளன்று மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பரிசு விநியோகத்தின் போது, பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அழுது கொண்டிருப்பதை தொலைக்காட்சித் திரையில் காணமுடிந்தது.
மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஏதோ ஒரு விஷயத்திற்காக கோபமடைந்து ஸ்ரீசாந்தை அறைந்துவிட்டார்.
தனது நடத்தைக்கு ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டபோதிலும், அவர் 11 போட்டிகளில் விளையாட முடியாதவாறு இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் அவரது ஊதியம் குறைக்கப்பட்டது என பல பிரச்னைகளை எதிர்கொண்டார். அதுமட்டுமல்ல, ஸ்ரீசாந்த்தை அடித்த ஹர்பஜன் சிங்கின் செயல், அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்னை பெரிய அளவில் விவாதப்பொருளான நிலையில், அப்போதைய ஐபிஎல் ஆணையர் லலித் மோதி, டெல்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த பரபரப்பான செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங், அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்.
பிரச்னை தொடர்பாக, ஹர்பஜன் சிங்கும் ஸ்ரீசாந்தும் அப்போதைய பிசிசிஐ விசாரணை ஆணையர் சுதிர் நானாவடி முன்பு ஆஜரானார்கள். மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ இந்த விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, ஹர்பஜன் சிங்கிடம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
பட மூலாதாரம், Getty Images
வருத்தம் தெரிவித்த ஹர்பஜன்
அண்மையில் கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசிய ஹர்பஜன் சிங், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். “வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை மாற்ற வேண்டும் என்றால், அது ஸ்ரீசாந்த்தை நான் அடித்த சம்பவமாகத்தான் இருக்கும். அதை என் வாழ்க்கையிலிருந்து அழிக்க விரும்புகிறேன். என்ன நடந்ததோ அது தவறு, நான் அதைச் செய்திருக்கக் கூடாது, 200 முறை மன்னிப்பு கேட்டுள்ளேன்” என்று கூறினார்.
“அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆன பிறகும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு மேடையிலும் நான் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது, மிகவும் மோசமாக உணர்கிறேன், நான் செய்தது தவறு” என்று கூறிய ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தின் மகளை சந்தித்த சம்பவத்தையும் விவரித்திருந்தார்.
“பல வருடங்களுக்குப் பிறகும், என்னை மிகவும் காயப்படுத்திய விஷயம் நான் ஸ்ரீசாந்தின் மகளைச் சந்தித்தபோது நிகழ்ந்தது. நான், அவரிடம் மிகவும் அன்பாகப் பேசினேன். அப்போது அவர், நீ என் அப்பாவை அடித்துவிட்டாய்; உன்னிடம் பேச விரும்பவில்லை என்று சொன்னார். இதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்தது, என் இதயம் உடைந்தது. அந்தக் குழந்தையிடம் என்னைப் பற்றிய எப்படிப்பட்ட அபிப்ராயத்தை பதிய வைத்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அந்தக் குழந்தை என்னை கெட்டவனாகவே நினைத்துக் கொண்டிருக்கும். தன் தந்தையை அடித்த நபராகவே அந்தக் குழந்தை என்னைப் பார்க்கும்.”
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு