1
புத்தாண்டு நெருங்கும் காலத்தில், உலகின் பல கோடிகணக்கான மக்கள் கவனத்தை திருப்பும் இடங்களில் ஒன்றாக, இங்கிலாந்தின் இலண்டன் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புடைய பிக் பென் (Big Ben) கடிகாரம் இருக்கிறது. டிசெம்பர் 31ஆம் தேதி, நள்ளிரவு 12 மணிக்கு அதன் மணி ஒலிக்கும்போது, பழைய ஆண்டை வாழ்த்தி விட்டு, புதிய ஆண்டை வரவேற்கும் அந்த சத்தம் உலகம் முழுவதும் ஒரு முக்கிய குறியீடாக மாறுகிறது.
எலிசபெத் கோபுரத்தில் (Elizabeth Tower) உள்ள கடிகாரக் கைகள் நள்ளிரவை தொடும் தருணம் தொலைக்காட்சி மற்றும் இணையவழி நேரலை ஒளிபரப்புகளில் உலகம் முழுவதும் பகிரப்படுகிறது. சில வினாடிகளுக்கு மட்டுமே நிலைகொள்ளும் இந்த நிகழ்ச்சி, வாரங்களாக நடைபெறும் மிக நுணுக்கமான ஆயத்தங்களின் முடிவாகும்.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு உட்பட்ட அனுபவமிக்க பராமரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு, புத்தாண்டுக்கு முன்பே சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாக கடிகாரத்திற்குப் பின்னால் உழைக்கின்றனர். கடிகார இயந்திரங்கள், மணி அமைப்பு, நேரத் துல்லியம் போன்றவை பலமுறை சோதிக்கப்படுகின்றன. உலகளவில் கவனிக்கப்படும் சிறிய நேர பிழைகளுக்கும் அவர்கள் அதிக பொறுப்புணர்வுடன் தயாராக இருக்கிறார்கள்.
வானிலை கடுமையாக இருந்தாலும், அவர்கள் கவனம் குறையாது. சரியான விநாடியில் மணி ஒலிக்கும் வரை, இவர்களின் உழைப்பு மறைவாகவும் அமைதியாகவும் தொடர்கிறது.
பிக் பென் என்பது கடிகாரத்தின் பெயராகவும், அதன் பெரும் மணி (Great Bell) பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது. 1859ல் முதன்முறையாக இயங்கத் தொடங்கிய இந்தக் கடிகாரம், பிரித்தானியாவின் கால அளவீட்டின் அடையாளமாகவும், அரசியல் மற்றும் சமூக மாற்றங்களின் சாட்சி நிலையமாகவும் இருக்கிறது. முதலில் “Clock Tower” என அழைக்கப்பட்ட கோபுரம், 2012ல் ராணி எலிசபெத் II வைர விழாவை முன்னிட்டு “Elizabeth Tower” என மறுபெயரிடப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது லண்டன் மீது குண்டுவீச்சுகள் இருந்தாலும், பிக் பென் தனது ஒலியை நிறுத்தவில்லை.