0
சீனா, சொங்குவிங் யொங்சுவான் ஸ்போர்ட்ஸ் சென்டர் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 17 வயதுக்குட்ட ஆசிய கிண்ண ஏ குழு தகுகாண் கால்பந்தாட்டப் போட்டியில் புருணை தாருஸ்ஸலாம் இளையோர் அணியை 4 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை இளையோர் அணி இலகுவாக வெற்றிகொண்டது.
17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிச் சுற்றுக்கு இதற்கு முன்னர் ஒருபோதும் தகுதி பெறாத இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை இலங்கை இளைய வீரர்கள் திறமையாக விளையாடி வெற்றி பெற்றனர்.
போட்டியின் 14ஆவது நிமிடத்தில் சஜீ குமார கவினாஷ் முதலாவது கோலைப் போட்டு இலங்கை இளையோர் அணியை முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து புருணை தாருஸ்ஸலாம் இளையோர் அணி தடுத்தாடும் உத்தியுடன் விளையாடியது.
இதன் காரணமாக இடைவேளைவரை இலங்கை இளையோர் அணியினால் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமல் போனது.
இடைவேளைக்குப் பின்னரும் புருணை தாருஸ்ஸலாம் இளையோர் அணி தொடர்ந்து தடுத்தாடும் உத்தியைக் கையாண்டது.
எவ்வாறாயினும், இலங்கை இளையோர் அணி சார்பாக போட்டியின் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் மொஹமத் இர்ஷாத் இரண்டாவது கோலைப் போட்டார்.
மேலும் 11 நிமிடங்கள் கழித்து இலங்கை இளையோர் அணியின் மூன்றாவது கோலை இருஷ மார்க்கோ புகுத்தினார்.
போட்டி முடிவடைய சொற்ப நேரம் இருந்தபோது மொஹமத் இர்ஷாத் தனது இரண்டாவது கோலைப் போட இலங்கை இளையோர் அணியை 4 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இக் குழுவில் பங்களாதேஷ், சீனா, பாஹ்ரெய்ன், திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளின் இளையோர் அணிகளும் இடம்பெறுகின்றன.
இலங்கை இளையோர் அணி தனது இரண்டாவது போட்டியில் பாஹ்ரெய்ன் இளையோர் அணியை திங்கட்கிழமை (24) எதிர்த்தாடவுள்ளது.
இலங்கை இளையோர் கால்பந்தாட்ட அணியில் ஷாதின் ஷஹீத், ஹாலிக் அஹமத், தினுஷ பெரேரா, ஹிருக்க சந்தேவ், அஹமத் ஆமிஷ், சஜீவ்குமார் கவினாஷ், இருஷ மார்க்கோ, மொஹமத் ஸெய்த், ஹறூன் ஹுமைத், மொஹமத் யாக்கூப், ஆதித்த மெனுஹாஸ், தெய்வேந்திரன் தனுசியன், அப்துல் மாலிக், இசுறு சேனுக்க, பவன் பெர்னாண்டோ, மொஹமத் நுஸ்ரான், ரிஸ்வான் ஹமூத், மொஹமத் யெஹியா, ஸபருல்லா ஸக்கரியா, மொஹமத் அம்னாஸ், மொஹமத் ரக்கான்,மொஹமத் ரிஷாத்.
பயிற்றுநர்: மொஹைதீன் மொஹமத் பஸூல் ரஹுமான்



