2
நமீபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இலங்கையை எதிர்த்தாடவுள்ளனர்.
சிட்னி பெரும்பாகத்தில் அமைந்துள்ள பராமட்டா மாவட்ட கிரிக்கெட் கழகத்திற்காகவும் நியூ சௌத் வேல்ஸ் மாநில அணிக்காகவும் விளையாடிவரும் நிட்டேஷ் சமுவேல், நேடென் குறே ஆகிய இரண்டு வீரர்களே அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்களாவர்.
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒரே குழுவில் இடம்பெறுவதால் இந்த இரண்டு இலங்கை வம்சாவளி வீரர்களும் இலங்கையை எதிர்த்தாடுவார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது.
பேர்த்தில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சம்பின்ஷிப் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற நியூ சௌத் வேல்ஸ் மெட்ரே அணிக்காக விளையாடிய இவர்கள் இருவரும் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் பலனாக அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சுற்றுப் போட்டியில் நிட்டேஷ் சமுவேல் 129 ஓட்டங்கள் என்ற அதிகூடிய எண்ணிக்கையுடன் 91.00 என்ற அதிசயிக்கத்தக்க சராசரியைப் பதிவுசெய்து மொத்தமாக 364 ஓட்டங்களைப் பெற்று சுற்றுப் போட்டியின் நாயகன் விருதை வென்றெடுத்தார். இவரை விட வேறு எவரும் இந்த சுற்றுப் போட்டியில் 200 ஓட்டங்களை எட்டவில்லை.




இதேவேளை பந்துவீச்சில் நிட்டேஷ் சமுவேலின் சக அணி வீரர் நேடென் குறே 17.82 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சுற்றுப் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் 5ஆவது இடத்தைப் பெற்றார். அவரது அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களாகும்.
அவர்கள் இருவரும் சுற்றுப் போட்டியின் சிறப்பு அணியிலும் பெயரிடப்பட்டமை விசேட அம்சமாகும்.
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் ஏ குழுவில் இடம்பெறுகின்றன.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கில் அமைந்துள்ள விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி மாநகரை அண்மித்த பராமட்டா மாவட்டத்தில் தமிழ், சிங்களம் பேசக்கூடிய இலங்கையர்கள் வாழ்ந்துவருகின்றனர்.