0
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி பொங்கல் திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘பராசக்தி’ எனும் திரைப்படம் – 1960களில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்வியலையும், அவர்களின் உரிமைக்கான போராட்டங்களையும் உரத்து பேசும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள’ பராசக்தி’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 1960களில் தமிழக மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்திற்கான பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி வரும் தருணத்தில். ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ எனும் பெயரில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 1960களில் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்தம் கடந்த நிலையில் மக்கள் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.
பணம் -காசு -ஆசை -ஆகியவற்றை விட ஒவ்வொரு மக்களும் தங்களுக்கான உரிமையை – உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். அது எம்மை மிகவும் கவர்ந்தது. அதைப் பற்றி விவரிக்க வேண்டும் என திட்டமிட்டேன். அதை சொல்லி இருக்கிறோம் என நம்புகிறேன்.
எமக்கு குடும்ப அமைப்பில் உள்ள உறவுகள் மீது எப்போதும் பெரு விருப்பம் உண்டு. 1960களில் தமிழ் குடும்பத்தில் அண்ணன்- தம்பி- தங்கை- என ஏராளமான உறவுகள் இருந்தன. இதுவும் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது.
அந்த காலகட்டத்திய வீடுகள்- வீதிகள் – மக்கள் பாவித்த பொருட்கள்- மக்களின் பேச்சு வழக்கு – முகங்கள் – அணிகலன்கள்- என பல்வேறு விடயங்களில் நுட்பமான கவனத்தை செலுத்தி நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம்.
ரசிகர்களையும் , பார்வையாளர்களையும் 1960 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நேர்மையாக செய்திருக்கிறோம். இது இன்றைய காலகட்ட ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம் ” என்றார்.