தமிழக சட்டப்பேரவை 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இன்றுமுதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர்.
அதையடுத்து சனி, ஞாயிறு பொது விடுமுறை என்பதால் சட்டப்பேரவை கூடவில்லை. இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. அப்போது கேள்வி – நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகள், துணைக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதையடுத்து துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். இன்று நீர் வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுகின்றனர். அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளிப்பார். அத்துடன் இத்துறையின் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார். அதையடுத்து இதர துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். அதற்கு அந்தந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்.30-ம் தேதி வரைநடைபெறுகிறது. ரம்ஜான் விடுமுறை, தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை, சனி, ஞாயிறு பொதுவிடுமுறை ஆகியவற்றைக் கழித்தால் மொத்தம் 24 நாட்கள் துறைகள் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ளன என சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.