பட மூலாதாரம், Getty Images
அனைவருக்குமே விரைவாகத் தூங்க வேண்டுமென்ற விருப்பம் உண்டு. ஆனால், உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர் அல்லது தூங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மதிப்பீடுகள் பரவலாக வேறுபடுகின்றன, ஆனால், ஐந்து முதல் 50% வரையிலான மக்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பலரும் தூக்கத்திற்கான வழிமுறைகளைத் தேடி இரவு முழுவதும் படுக்கையில் புரண்டுகொண்டிருக்கின்றனர். அதற்கான முயற்சிகளில், இரண்டு நிமிடங்களில் தூக்கத்தை வரவழைப்பதாகக் கூறப்படும் வைரலான ‘ராணுவ தூக்க முறையும்’ அடங்கும்.
இந்த முறை டிக்டாக்கில் பிரபலமாகியுள்ளது. கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்ற காணொளிகள், கிட்டத்தட்ட உடனடியாக உங்களைத் தூங்க வைக்கும் என்று வீடியோ தயாரிப்பாளர்கள் விளக்கும் எளிய வழிமுறைகளைக் கொண்டுள்ளன.
ஆனால், இந்த வைரல் தூக்க முறை, “ஆபத்தான” எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம், உங்கள் தூங்கும் திறனை உண்மையில் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் பிபிசி உலக சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.
அதோடு, தூக்கமின்றி தவிக்கும் மக்களும் முயன்று பார்க்கக்கூடிய, ராணுவ வீரர்கள் தங்கள் தூக்கத்தை மேம்படுத்த உண்மையில் பயன்படுத்தும் சில குறிப்புகளையும் நிபுணர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ராணுவ தூக்க முறை என்றால் என்ன?
இந்தக் கருத்தாக்கம் அமெரிக்க தடகளப் பயிற்சியாளர் லாய்ட் “பட்” வின்டர் என்பவரால், “ரிலாக்ஸ் அண்ட் வின்” என்ற அவரது 1981ஆம் ஆண்டு புத்தகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது, வின்டர் இந்த நுட்பத்தை அமெரிக்க கடற்படையின் விமானப் பள்ளியில் பயிற்சி பெறும் விமானிகளுக்காக உருவாக்கினார். இதன் மூலம் அவர்கள் அதிக மன அழுத்த சூழ்நிலைகளிலும்கூட நன்றாகத் தூங்கி, தங்களது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த முடியும். அந்தப் புத்தகம் பின்வருமாறு அறிவுறுத்துகிறது:
- மெதுவாக, ஆழமாக சுவாசித்தபடியே, நெற்றி, உச்சந்தலை, தாடை மற்றும் முகத்தைத் தளர்வடையச் செய்யவும்.
- தோள்களைத் தளர்த்தி, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும். உங்கள் மார்புத் தசைகளைத் தளர்த்தவும்.
- முழு கையையும் நாற்காலி அல்லது படுக்கையில் தளர்த்தவும். புயத் தசையில் (biceps) தொடங்கி, முன்கை வழியாகக் கைகளை முழுமையாகத் தளர்த்தவும். இரு கைகளிலும் இதைச் செய்யவும்.
- தொடையில் தொடங்கி, பின்னர் கெண்டைக்கால், கணுக்கால், பாதம் வரை என உங்கள் கால்களைத் தளர்த்தவும்.
- இப்போது உங்கள் மனதைத் தெளிவுபடுத்தி, ஒரு நிம்மதியான காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஓர் இதமான வசந்த கால நாள் அல்லது ஓர் அமைதியான ஏரியை அவர் பரிந்துரைக்கிறார்.
- தேவைப்படும் பட்சத்தில், “யோசிக்காதே” என்ற சொற்றொடரை மீண்டும் மீண்டும் கூறி, குறைந்தது பத்து விநாடிகளுக்குப் பிற எண்ணங்களைத் தவிர்த்து, மனதை வெறுமையாக்குங்கள்.
இந்த வழிமுறைகளை ஆறு வாரங்களுக்குப் பயிற்சி செய்தால், விமானிகள் “பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும்” இரண்டு நிமிடங்களில் தூங்கிவிடும் கலையைக் கற்றுக்கொள்வார்கள் என்று வின்டர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
‘இது உங்களை விரக்தியடையச் செய்யும்’
ஆனால், இத்தகைய விரைவான முடிவுகளை எதிர்பார்ப்பது தூங்குவதற்கான முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“இந்த முறையைப் பின்பற்றி உங்களால் தூங்க முடியும் என்றும், அதுவும் இரண்டு நிமிடங்களுக்குள் தூங்கிவிட வேண்டும் என்றும் சொல்வது ஆபத்தான கருத்து” என்கிறார் ராணுவ நரம்பியல் விஞ்ஞானியும் தூக்க நிபுணருமான மருத்துவர் ஆலிசன் பிரேகர்.
சராசரியாக ஒரு நபர் தூங்குவதற்கு ஐந்து முதல் 20 நிமிடங்கள் ஆகும். எனவே, இரண்டு நிமிடங்களில் தூங்க முயல்வது உங்களை விரக்தியடையச் செய்து, தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கக்கூடும்.
அவரது கூற்றுப்படி, “உண்மையில் சாத்தியமற்ற ஒன்றை அடைய முயல்வதன் மூலம் நீங்கள் விரக்தியைத்தான் எதிர்கொள்வீர்கள்.”
மேலும், இரண்டு நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவது, நாள்பட்ட தூக்கமின்மை அல்லது கண்டறியப்படாத தூக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிற பிரச்னைகளின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
தூங்குவதற்கு இந்த முறையைப் பயன்படுத்தக்கூடிய வீரர்களைத் தனக்குத் தெரியும் என்று கூறும் பிரேகர், ஆனால் ராணுவப் பணியின் சோர்வூட்டும் தன்மையைக் கருத்தில் கொண்டால், சில வீரர்களால் நிமிடங்களில் தூங்க முடிவதில் ஆச்சரியமில்லை எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
விரைவாகத் தூங்குவது எப்படி?
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ தூக்க முறை மூலம் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு இன்னும் குறைவாகவே இருப்பதாகக் கூறுகிறார், மனநல மருத்துவம் மற்றும் தூக்க மருத்துவ ஆலோசகரான மருத்துவர் ஹ்யூக் செல்சிக்.
“பொதுவாகக் கூறுவதெனில், என்னிடம் வந்து இதைப் பற்றிக் கூறிய நோயாளிகளுக்கு இது பலனளிக்கவில்லை. அப்படிப் பலன் அளித்திருந்தால் அவர்கள் என்னிடம் வந்திருக்க மாட்டார்கள்,” என்று அவர் பிபிசி உலக சேவைக்கு தெரிவித்தார்.
முக்கியமாக, நோயாளிகள் விரைவாகத் தூங்க விரும்பலாம். ஆனால், அதுவே எப்போதும் நல்ல உறக்கத்தின் முக்கிய குறியீடாக இருக்க வேண்டியதில்லை.
“பெரும்பாலான நாட்களில், நாளின் பெரும்பாலான நேரத்திற்கு நீங்கள் விழிப்புடனும் புத்துணர்ச்சியுடனும் உணர்ந்தால், தூக்கம் அதன் வேலையைச் சரியாகச் செய்வதாகப் பொருள்,” என்று லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி மருத்துவமனையின் தூக்க மருத்துவ மையத்தின் முன்னணி மருத்துவரான செல்சிக் விவரிக்கிறார்.
நீண்ட காலமாக, 8 மணிநேரத் தூக்கமே சிறந்த இலக்கு எனக் கருதப்பட்டது. ஆனால், அது தேவையற்ற அழுத்தத்தைச் சேர்க்கும்.
“எட்டு மணிநேரத் தூக்கம் என்ற யோசனை ஒரு கட்டுக்கதை, அது மிகவும் அழிவுகரமான கட்டுக்கதை” என்கிறார் செல்சிக்.
பட மூலாதாரம், Getty Images
உண்மையில், ஒவ்வொரு நபருக்கும் தேவையான தூக்கத்தின் அளவு வேறுபடுவதாகவும், இதற்கு மரபணுக்களும் ஒரு காரணமாக இருப்பதாகவும், இதற்கென ஒரு குறிப்பிட்ட சரியான அளவு இல்லை எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
செல்சிக் இதை காலணிகளின் அளவுகளுடன் ஒப்பிடுகிறார். “சராசரி அளவு ஆறாக இருந்தாலும், எட்டு அல்லது நான்கு என்ற அளவிலான காலணிகளை அணிவோரும் இருக்கிறார்கள். அதேபோல, சிலருக்கு ஏழு முதல் எட்டு மணிநேரத்திற்கும் மேலான தூக்கம் தேவைப்படலாம், மற்றவர்களுக்கு அதைவிடக் குறைவான தூக்கம் தேவைப்படலாம்.”
“ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் தனக்குத் தேவையான சரியான அளவு தூக்கத்தைப் பெறுவதுதான்,” என்கிறார் அவர்.
இதற்குப் பிறகும் ஒருவர் விரைவாகத் தூங்க விரும்பினால், அதற்கு மூன்று குறிப்புகளை வழங்குகிறார் செல்சிக்.
தினசரி ஒரே நேரத்தில் எழுந்திருப்பது, ஒரே புள்ளியில் இருந்து தூக்க உணர்வை உருவாக்க உதவும். அதாவது ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் நீங்கள் சோர்வாக உணர்ந்து, தூங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று விளக்கினார்.
அதோடு, பகலில் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்துகிறார். இது உங்கள் தூக்க உணர்வின் இருப்பைக் குறைத்து, இரவில் தூங்குவதைக் கடினமாக்கும்.
மூன்றாவதாக, நீங்கள் சோர்வாக இருக்கும்போது மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்கிறார் செல்சிக். ஏனெனில், உங்கள் உடல் தூங்கத் தயாராக இல்லாதபோது நீங்கள் உறங்கச் சென்றால், “நீண்ட நேரம் உறக்கம் வராமல் படுத்தபடியே இருப்பீர்கள்.”
“எனவே, உங்கள் மாலை வேளையை நன்கு அனுபவியுங்கள், உங்களுக்காகச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் தலை முன்னோக்கிச் சாய்வது, கண்கள் மூடுவது, வாசிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்றவற்றை எப்போது உணர்கிறீர்களோ அதுவே உறங்கச் செல்லச் சரியான நேரம்” என்று விளக்கினார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
ராணுவ வீரர்களின் தூக்க முறையில் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
பிரிட்டிஷ் ராணுவத்தில் தூக்க அறிவியல் மற்றும் மருத்துவ நிபுணராக இருக்கும் மருத்துவர் அலெக்ஸ் ராக்ளிஃப், “ராணுவ தூக்க முறை” என்பது தவறான பெயர் என்று வாதிடுகிறார்.
“இந்த நுட்பங்களுக்கு அடிப்படையாக உள்ள உடலியல் அல்லது உளவியல் வழிமுறைகளில் உள்ளார்ந்த ராணுவ தன்மை ஏதுமில்லை” என்கிறார் அலெக்ஸ் ராக்ளிஃப்.
உண்மையில், அந்த முறை முற்றிலும் தவறானதல்ல என்றும், படிப்படியான தசைத் தளர்வு மற்றும் சுவாச நுட்பங்கள் இன்றும் வீரர்களுக்குக் கற்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராணுவப் பயிற்சியாளர்களுக்கும் வீரர்களுக்கும், 12 பேர் கொண்ட பொதுவான அறைகளில் தூங்குவது, தடையில்லாத தூக்கத்தைப் பெறுவதைக் கடினமாக்கும். கண்கள், காதுகளுக்கு உறைகளைப் பயன்படுத்துவது போன்ற எளிய மாற்றங்கள் அத்தகைய சூழலில் உதவக்கூடும்.
மேலும், தீவிரமான சூழ்நிலைகளில் வீரர்கள் பயன்படுத்தும் தூக்க நுட்பங்கள்கூட சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
நல்ல இரவுத் தூக்கம் கிடைக்காது என்ற நிலையில், மன அழுத்தம் நிறைந்த பணிகளில் இருப்போர், தங்களால் இயன்ற நேரத்தில், ஒரு குட்டித் தூக்கத்தைப் போடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இரவில் விரைவாகத் தூங்க விரும்புவோருக்கு குட்டித் தூக்கம் பரிந்துரை செய்யப்படாவிட்டாலும், இரவு தூக்கம் பெருமளவில் பாதிக்கப்படும் சூழலில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு திட்டமிடப்பட்ட குட்டித் தூக்கம் பயன் தரலாம்.
மக்கள் ராணுவத்திடம் இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய மற்றொரு முக்கியமான திறன் உள்ளதாகக் கூறுகிறார் நரம்பியல் விஞ்ஞானியான பிரேகர்.
ஒரு தூக்க வழக்கத்தை உருவாக்குவது, ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மூளைக்கு சமிக்ஞை செய்து, தூக்கநிலையை விரைவுபடுத்தும்.
“இது ஒழுக்கத்தைப் பொறுத்தது. ஒரு வழக்கமான ஒழுக்கத்தை ஏற்படுத்துவதிலும், கவனச் சிதறல்களைக் குறைப்பதிலும் ராணுவம் மிகவும் சிறந்தது,” என்கிறார் அவர்.
ஒவ்வோர் இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது, உங்கள் கைபேசியை அணைத்து வைப்பது, ஒரு புத்தகத்தைப் படிப்பது, விளக்கை அணைப்பது ஆகியவை நல்ல வழிகள்.
“உடல் இவற்றை விரைவாகப் புரிந்துகொள்ளும். நீங்கள் இவற்றை தினசரி செய்தால், தூங்குவதில் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது” என்கிறார் பிரேகர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு