பட மூலாதாரம், Getty Images
‘இந்தியாவில் ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்’ எனக் கடந்த செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் நவம்பர் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெட் தேர்வை எதிர்கொள்வதில் என்ன சிக்கல்? ஆசிரியர்கள் அச்சப்படுவது ஏன்?
இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணங்களை 2011 ஆம் ஆண்டில் தேசிய ஆசிரியர் கவுன்சில் வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று இதனை தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபான்கர் தத்தா, மன்மோகன் அமர்வு, ‘டெட் தேர்வு என்பது ஆசிரியர் தரத்துக்கான அளவுகோலாக பார்க்கப்படுகிறது’ எனத் தெரிவித்தனர்.
‘தேர்ச்சி அல்லது கட்டாய ஓய்வு’
‘தகுதித் தேர்வு என்பது கட்டாய கல்வித் தகுதி மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையும் ஆகும்’ எனவும் அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
அதேநேரம், ‘ஐந்தாண்டுகளுக்குக் குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஓய்வு பெறும் வயது வரை பணியில் தொடரலாம்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘ஆனால், பதவி உயர்வுக்கு வர விரும்பினால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பரிசீலிக்கப்பட மாட்டார்’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், ‘ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
‘அவ்வாறு தேர்வு எழுதுவதற்கு விருப்பம் இல்லாவிட்டால் ஓய்வுகால சலுகைகளைப் பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வை அவர்களுக்கு வழங்கலாம்’ என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
விவரங்களை சேகரிக்கும் அதிகாரிகள்
இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரம் மற்றும் தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்கள் குறித்த விவரங்களைத் தொகுக்கும் பணியில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்கள் மூலமாக, இதுதொடர்பான பட்டியலை தொகுத்து அனுப்புமாறு சுற்றறிக்கை மூலம் பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டதால், ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக தேர்வு வாரிய இணையதளம் முடங்கியதாக, தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒதுக்கியது.
‘2 மாத அவகாசம்… கூடுதல் மன உளைச்சல்’
“ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளன. அதற்குள் பாடங்களைப் படித்து தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு கூடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில்.
” சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வை எதிர்கொள்ள உள்ளனர். மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், கற்பித்தல் பணியில் ஈடுபாடு காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
டெட் எனப்படும் தகுதித் தேர்வை பொறுத்தவரை தாள் 1, தாள் 2 என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள், தாள் 1 தேர்வை எழுத வேண்டும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தாள் 2 தேர்வை எழுத வேண்டும். ” தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதாவது 60 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பார்கள்” எனக் கூறுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில்.
எப்படி நடக்கிறது டெட் தேர்வு?
கலை மற்றும் அறிவியல் பிரிவு தேர்வர்களுக்கு தனித்தனியாக கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. அறிவியல் பிரிவு ஆசிரியராக இருந்தால் தமிழ், உளவியல், ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்குத் தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கலைப் பிரிவு ஆசிரியர்களாக இருந்தால் தமிழ், ஆங்கிலம், உளவியல் ஆகிய பாடங்களுக்கு தலா 30 மதிப்பெண்ணும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து மட்டும் 60 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன.
“தேர்வில் ஆறு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. வகுப்பில் காலம்காலமாக ஒரு பாடம் மட்டுமே எடுக்கும் ஆசிரியர்கள், தேர்வுக்காக அனைத்து பாடங்களையும் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” எனக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் முருகன்.
வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை இவர் எதிர்கொள்ள இருக்கிறார். “தினமும் மாலை ஐந்தரை மணியளவில் பணி முடிந்து வீட்டுக்குச் செல்கிறோம். மறுநாள் எடுக்கப்பட உள்ள பாடம் தொடர்பான திட்டத்தை எழுத வேண்டும். இதனை எழுதுவதா.. தேர்வுக்குத் தயாராவதா என்பதில் மனஉளைச்சல் ஏற்படுகிறது” என்கிறார், முருகன்.
‘அச்சத்தில் ஆசிரியர்கள்’
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” ஆசிரியர் பணியில் சேர்ந்து நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் ஆங்கில இலக்கணம் படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக கொண்டவர்கள், ஐந்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் பலரும் கடும் மனஉளைச்சலில் உள்ளதாகக் கூறும் முருகன், ” சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 50 வயதைக் கடந்தவர்கள், வீட்டுக்கடனுக்கான லோன் கட்டி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோய்விடும் என்பதால் அச்சத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, தமிழ்நாட்டில் 2012 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் கூறுகிறது.
அதிர்ச்சியூட்டும் டெட் தேர்வு முடிவுகள்
“இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச தேர்ச்சி என்பது சொற்பமாகவே உள்ளது. தற்போது வரை சுமார் 90 சதவீதம் பேர் வரை தோல்வியடைந்துள்ளனர். அந்தளவுக்கு கேள்விகள், கடுமையாக உள்ளன” என்கிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குறித்த தரவுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி,
- 2012 ஆம் ஆண்டில் தாள் 1 தேர்வை 3,05,405 பேர் எழுதியுள்ளனர். இதில் 1,735 பேர் மட்டுமே தேர்ச்சி (0.56 சதவீதம்)
- இதே காலகட்டத்தில் நடைபெற்ற தாள் 2 தேர்வை 4,09,121 பேர் எழுதியதில் 713 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் (0.17 சதவீதம்)
- அதே ஆண்டு அக்டோபர் 14 அன்று நடந்த தாள் 1 தேர்வை 2,78,725 பேர் எழுதியதில் 10,397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். (3.73 சதவீதம்)
- 2013 ஆம் ஆண்டில் தாள் 1 தேர்வில் 11.67 சதவீதம் பேரும் 10.52 சதவீதம் பேர் தாள் 2 தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- 2014 ஆம் ஆண்டு சிறப்பு டெட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 4,693 பேர் எழுதியுள்ளனர். இவர்களில் 945 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (20.14 சதவீதம்).
- 2017 ஆம் ஆண்டு தாள் 1 தேர்வை 2,41,555 பேர் எழுதியதில் 16,197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில் நடந்த தாள் 2 தேர்வை 5,12,260 பேர் எழுதியதில் 18,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- அதுவே 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் வெகுவாக சரிந்தது. தாள் 1 தேர்வை 1,62,316 பேர் எழுதியதில் 551 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இது 0.33 சதவீதம். தாள் 2 தேர்வை 3,79,735 பேர் எழுதியதில் 316 பேர் மட்டுமே (0.08 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.
- 2022 ஆம் ஆண்டில் 1,53,533 பேர் எழுதியதில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். தாள் 2 தேர்வை 2,54,224 பேர் எழுதியதில் 15,430 பேர் வெற்றி பெற்றனர். அந்தவகையில், தற்போது வரை 37,28,435 பேர் தேர்வு எழுதியதில் 1,67,985 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
“லட்சக்கணக்கானோர் எழுதும் தேர்வில் சொற்பமான அளவிலேயே வெற்றி பெறுவதால், நவம்பர் மாதம் நடக்கவுள்ள தேர்வு என்பது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சவாலானதாக மாறியுள்ளது. அதற்குள் சட்டரீதியான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறுகிறார், ச.மயில்.
“ஆசிரியர்கள் திறமையானவர்கள் தான். ஆனால், அரசுப் பணிக்கு வந்து முப்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தேர்வு எழுதுமாறு கூறுவது சரியானதாக இல்லை. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் கூறியது என்ன?
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சட்டரீதியாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 4 அன்று ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வை நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்” எனக் கூறினார்.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் ஆசிரியர்களைப் பாதுகாக்க விரும்புவதாகக் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாமா அல்லது சிறப்பு தகுதித் தேர்வு நடத்தலாமா என்பது ஆலோசித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதாவது பிரச்னை என்றால் அமைதியாக இருக்க மாட்டோம். அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து ஆசிரியர்களைப் பாதுகாப்போம்” எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு