0
இந்தியாவின் பிஹாரில் வார இறுதியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆடவர் அணிக்கு எழுவர் ஆசிய கிண்ண றக்பி போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹொங் கொங் சைனாவை எதிர்கொண்ட இலங்கை, 0 – 33 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து சம்பியன் படத்தைத் தவறவிட்டது.
எட்டு நாடுகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெற்ற இலங்கை, முதல் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
தனது ஆரம்பப் போட்டியில் ஹொங் கொங் சைனாவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை 24 – 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் இந்தியாவை 24 – 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை, கடைசிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 26 – 24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு கிண்ணப் பிரிவுக்கான அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
சீனாவுடனான அரை இறுதியில் 26 -17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற இலங்கை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
மற்றைய அரை இறுதியில் மலேசியாவை 33 – 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்ட ஹொங்கொங் சைனாவை இறுதிப் போட்டியில் இலங்கை எதிர்கொண்டது.
முதல் சுற்றில் ஹொங் கொங் சைனாவை 24 – 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிகொண்டிருந்ததால் இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற்று சம்பியனாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய ஹொங் கொங் சைனா 33 – 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.