பட மூலாதாரம், Getty Images
இந்த வாரம், 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கவலைப்பட்டனர், ஆனால் பின்னர் அது பாதுகாப்பானது என்று அறிவித்தனர்.
இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் மதிப்பிட்டனர். ஆனால், இந்த விண்கல் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே என்று சமீபத்தில் தெரிய வந்தது.
அதே விண்கல் நிலவைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா இப்போது மதிப்பிட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2024 YR4 என்ற விண்கல் சிலியில் உள்ள ஒரு பாலைவனத்தில் தொலைநோக்கி மூலம் விண்வெளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் பத்து வான் பொருட்கள் பூமியை நெருங்கி வருவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வானியல் ரீதியாகப் பார்த்தால், இவை மிகச் சிறிய விண்கற்கள். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்கு அருகில் வந்திருக்கலாம் அல்லது பூமியுடன் மோதியிருக்கலாம். சில விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு எரிந்திருக்கலாம். அவை அனைத்தும் மனிதர்களின் கண்ணில் தென்படாமலேயே நடந்திருக்கும்.
பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்கள்
பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் விண்வெளியில் பயணிக்கும் விண்கற்கள் ஃப்ளை-பைஸ் (fly-bys) என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பாலான விண்கற்களால் ஆபத்து இல்லை. இருப்பினும், பிரபஞ்சத்தில் மனிதனால் தீர்க்கப்படாத பல மர்மங்களை அவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அவை விண்வெளி குறித்த நிறைய அறிவையும் தகவல்களையும் வழங்குகின்றன.
இந்தக் கற்கள் சில நேரங்களில் சிறிய கோள்களாகவும் அடையாளம் காணப்படுகின்றன. மேலும், அவை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய மண்டலம் உருவாக்கப்பட்டபோது உருவான எச்சங்கள் எனவும் கூறப்படுகின்றன.
இந்த விண்கல் துண்டுகள் கோள்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவை மற்றும் பூமிக்கு நெருக்கமாகச் சுற்றி வரக்கூடியவை. இப்போது வரை, ஒரு பெரிய விண்கல் பூமிக்கு எவ்வளவு அருகில் வரும், அது எவ்வளவு கடினமாகத் தாக்கும் என்பதை மனிதர்களால் சரியாக அறிய முடியவில்லை.
நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் போஸ்லாஃப் கூறுகையில், பூமிக்கு அருகிலுள்ள பொருட்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியதாகவும் அதற்கு முன்பு யாரும் அவற்றை அதிகம் கவனிக்கவில்லை என்றும் கூறினார்.
நாற்பது மீட்டர் அகலம் அல்லது அதைவிடப் பெரிய வான் பொருட்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் பலமுறை கடந்து செல்வதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வருகின்றனர்.
கடந்த 1908ஆம் ஆண்டில் சைபீரியா மீது அத்தகைய பெரிய விண்கல் ஒன்று வெடித்தது. இது 500 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள கட்டடங்களைச் சேதப்படுத்தியது, மக்கள் பலர் காயமடைந்தனர்.
விண்கல் நகரத்தைத் தாக்கினால் என்ன ஆகும்?
பட மூலாதாரம், Drs. Bill and Eileen Ryan, Magdalena Ridge Observatory 2.4m Telescope, New Mexico Tech
முன்னதாக, 2004ஆம் ஆண்டில் அபோபிஸ் என்ற விண்கல்லும் YR4-ஐ போலவே பூமிக்கு அருகில் வருவதாக அடையாளம் காணப்பட்டது. இது 375 மீட்டர் அகலம் மற்றும் ஒரு பயணக் கப்பல் போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கருதப்பட்டது.
பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (சி.என்.ஆர்.எஸ்) பேராசிரியர் பேட்ரிக் மைக்கேல், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களில் இது மிகவும் ஆபத்தான விண்கல் என்று கூறினார்.
அதை அவதானித்த பிறகு, கடந்த 2013ஆம் ஆண்டு வரை அது பூமியைத் தாக்காது என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடிந்தது. இவ்வளவு பெரிய விண்கல் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கியிருந்தால், அது பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்.
YR4 விண்கல் எவ்வளவு பெரியது என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் சில மதிப்பீடுகள் அதன் மேல்முனை 90 மீட்டர் அகலமாக இருந்தால், அது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சேதமடையால் வரக்கூடும் என்று கூறுகின்றன.
“இத்தகைய விண்கற்களால் பூமியில் ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்க முடியும். அவை பூமியில் மோதக்கூடிய பகுதிக்கு அருகிலுள்ள கட்டமைப்புகள் சேதமடையும். ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் உள்ளது,” என்று லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் பேராசிரியர் கேத்தரின் குனமோட்டோ கூறினார். இது நடந்தால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாகக் கூறினார் அவர்.
அபோபிஸ் விண்கல் பற்றி அறிந்ததில் இருந்து விஞ்ஞானிகள் பூமியை விண்கற்களில் இருந்து பாதுகாப்பதுல் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பேராசிரியர் மைக்கேல் சர்வதேச விண்வெளி மிஷன் திட்டமிடல் ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாகவும் உள்ளார்.
விண்கல் தாக்கங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து அவர்கள் அரசுகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். அது நேரடியாகத் தாக்கும்போது என்ன தாக்கம் இருக்கும் என்பதை அறிய அவர்கள் ஒத்திகை பார்க்கிறார்கள்.
பட மூலாதாரம், NASA
ஒரு விண்கல் ஒரு நகரத்தைத் தாக்கினால், அதன் தாக்கம் ஒரு பெரிய சூறாவளியைப் போலவே இருக்கும் என்று மார்க் போஸ்லாஃப் கூறுகிறார். உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.
YR4 பற்றி என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க விண்வெளிப் பணி திட்டமிடல் ஆலோசனைக் குழு ஏப்ரல் மாதம் மீண்டும் கூடும். நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை ஆபத்தான விண்கற்களைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
டிமோர்போஸ் என்ற விண்கல்லின் பாதையை திசை திருப்ப இரட்டை விண்கல் திசை திருப்பல் சோதனையில் (Double Asteroid Redirection Test) ஒரு விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இருப்பினும், YR4 விஷயத்தில் இது செயல்படுமா என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அதை வெற்றிகரமாகத் திசை திருப்பிவிட மிகக் குறைந்த நேரமே உள்ளது.
அன்டார்டிகாவில் சுமார் 50,000 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது ALH84001. இது செவ்வாய் கோளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதில், கோள்களின் வரலாற்றுக்கான முக்கியத் தடயங்களும் கனிமங்களும் உள்ளன. இது மிகவும் சூடாக இருந்ததாகவும், அதன் மேற்பரப்பில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விஞ்ஞானிகள் 2023இல், விண்வெளியில் 33 பாலிஹிம்னியா என்ற விண்கல்லைக் கண்டுபிடித்தனர். பூமியில் காணப்படும் அனைத்துக் கனிமங்களையும்விட கனமான கனிமங்கள் அதில் நிரம்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பூமிக்கு முற்றிலும் புதியது. 33 பாலிஹிம்னியா, குறைந்தது 170 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. இந்த விண்கற்கள் அறிவியலை மேலும் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளன.
விண்வெளியை அவதானிக்க பெரிய டிஜிட்டல் கேமரா
பட மூலாதாரம், Getty Images
சில விஞ்ஞானிகள் YR4இன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் அது சந்திரனைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் கரேத் காலின்ஸ் கூறுகையில், “நிஜ வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளுக்கு அதிக பயன்பாடு உள்ளது” என்கிறார்.
விண்கல் மோதலுக்குப் பிறகு எவ்வளவு பொருள் வெளியேற்றப்படும்? அது எவ்வளவு வேகமாகப் பயணிக்கும்? அது எவ்வளவு தூரம் பயணிக்கும்?
பூமியில் விண்கற்களின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இதுவரை உருவாக்கிய கருவிகளைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். சிறந்த கணிப்புகளைச் செய்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
சூரிய குடும்பம் முழுவதும் சிதறிக் கிடக்கும் பாறைச் சிதைவுகள் ஒரு கட்டத்தில் பூமியைத் தாக்கும் என்பதை YR4 மீண்டும் நினைவூட்டுகிறது.
ஒரு பெரிய விண்கல் எப்போது மனித உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அறிவது முக்கியம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது வரவிருக்கும் ஆண்டுகளில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் வரவிருக்கும் நூற்றாண்டுகளில் அபாயங்களைக் கணிக்க உதவும்.
மேலும், மனிதர்கள் விண்வெளியைக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த ஆண்டின் பிற்பகுதியில், மிகப் பெரிய அளவிலான டிஜிட்டல் கேமரா கிடைக்கும். அது சிலியில் உள்ள வேரா ராபின் ஆய்வகத்தில் இருந்து செயல்படும். இரவு வானத்தின் பல அதிசயங்களை அந்த டிஜிட்டல் கேமரா படம்பிடிக்கும். நாம் எவ்வளவு அதிகமாக விண்வெளியைக் கவனிக்கிறோமோ, அவ்வளவு அதிகமான விண்கற்களை பூமிக்கு அருகில் கண்டறிய முடியும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு