புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று (ஜன.4) ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஒவ்வொரு அண்டும் ஜனவரியில் தொடங்கி மே மாதம் வரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கான அனுமதி, அதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவுகள் அனைத்தும் இணையதளம் வழியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டாக கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் தொடங்கியது. ஆட்சியர் எம்.அருணா தலைமையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் காலை 8 மணியளவில் எடுத்துக் கொண்டனர்.பின்னர், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. சுமார் 600 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோல, சீறிப்பாயும் காளைகளை அடக்குவதற்காக சுழற்சி முறையில் 300 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை காண்பதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் திரண்டுள்ளனர். பாதுகாப்பு பணிகளை கந்தர்வக்கோட்டை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். காயம் அடையும் வீரர்கள் உள்ளிட்டோர் மற்றும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் மற்றும் கால்நடைமருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.