பட மூலாதாரம், Getty Images
அன்றைய தினம் இரவு, ஹாட்ஸ்டாரில் ஒரு வெப்சீரீஸை தேர்வு செய்து, முதல் எபிசோடை பார்க்கத் தொடங்கினேன்.
இதை நான் பார்க்கத் தொடங்கியது இரவாக இருந்தாலும், அதற்கான விதை அன்றைய தினம் மதிய வேளையிலேயே போடப்பட்டுவிட்டது.
அன்று மதியம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த போது, பேய் போல வேடமிட்டு நடித்த ஒருவரது பிராங்க் வீடியோவை கண்டு சிரித்து, லைக் செய்தேன்.
பின்னர், ஒன்றிரண்டு ரீல்ஸ்களுக்கு ஒருமுறை இதேபோன்ற வீடியோக்கள் எனக்குக் காட்டப்பட்டன. அந்த வீடியோக்களில் ஒன்றாக, அந்த வெப்சீரிஸின் சில காட்சிகளுடைய தொகுப்பும் வந்தது. அதில் ஈர்க்கப்பட்டு, கூகுளில் சென்று தேடி அந்த வெப்சீரிஸை ஹாட்ஸ்டாரில் பார்க்கத் தொடங்கினேன்.
“நீங்கள் எதை விரும்புகிறீர்கள், உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பனவற்றை ஆராய்ந்து, இன்ஸ்டாகிராமின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உங்களுக்குப் பரிந்துரைத்த உள்ளடக்கங்களே, அந்த வெப்சீரிஸை நீங்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்வுக்கு உங்களை இட்டுச்செல்லக் காரணமாக இருந்த தொடக்கப்புள்ளி,” என்கிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரான ஹரிஹரசுதன்.
பட மூலாதாரம், Getty Images
எளியவர்களின் கைக்கு வந்த ஏஐ
ஹரிஹரசுதன் கூற்றுப்படி, 2024ஆம் ஆண்டில் மேலான தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட செயற்கை நுண்ணறிவு, 2025ஆம் ஆண்டில் எளிய மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக, அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாகிவிட்டது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஏஐ என்பது 2024இல் தொழில்நுட்பத்தின் உச்சமாகவும், வணிகம் சார்ந்தே பெரியளவில் சாத்தியமானது போலவும் இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் அந்த நிலை முற்றிலுமாக மாறி, சராசரி மக்கள் எளிதில் அணுகும் வடிவங்களை அடைந்துள்ளது.
இன்று சாட்ஜிபிடி, க்ரோக், ஜெமினி ஆகியவை சாமானியர்களையும் எட்டிவிட்டன. இந்த ஆண்டில்தான் ஏஐ நிறுவனங்கள், சராசரி மக்களுக்கு ஏற்ற வகையில் ஏஐ பயன்பாட்டைக் கொண்டு வர முன்வந்தன. அது பெரிய மாற்றத்தையும் கொடுத்தது” என்றார் அவர்.
ஸ்மார்ட்ஃபோன், சமூக ஊடகங்கள், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் இணையதளங்கள் மற்றும் கார்களில், வீடுகளில், நீங்கள் வழிகளைக் கண்டறிய பயன்படுத்தும் கூகுள் மேப்ஸ் என நாம் பயன்படுத்தும் பலவற்றிலும் இப்போது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வந்துவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கில்லாத தொழில்நுட்ப நடவடிக்கைகளைக் காண்பது அரிது என்னும் அளவுக்கு 2025இல் அதன் பயன்பாடு வளர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சியை ஒரு தரப்பினர் அச்சம் கலந்த சந்தேகக் கண்ணோட்டத்துடன் கவனித்து வருகின்றனர். அதேவேளையில், தினசரி வாழ்வில் ஏஐ பயன்பாடு அதிகரித்துவிட்டது, அது தொழில்நுட்ப வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சராசரியாக காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்வது வரை ஒருவரது அன்றாடச் செயல்பாடுகளில் ஏஐ அதிகளவில் தாக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார் ஹரிஹரசுதன்.
நாம் எதை வாங்க வேண்டும் எனத் தீர்மானிப்பதே ஏஐ தானா?
“உங்களது விருப்பங்கள் அனைத்தும் டிஜிட்டல் உலகில் உங்களுக்குக் காட்டப்படும் விஷயங்களை பொறுத்து அமைகின்றன” என்கிறார் ஹரிஹரசுதன்.
“டிஜிட்டல் உலகில் அடிப்படையில் இன்று நீங்கள் தேர்வு செய்யக்கூடிய எதுவுமே உங்களுடைய விருப்பம் கிடையாது. நீங்கள் காலையில் பார்த்த ஒரு சமூக ஊடக பதிவு அல்லது ஒரு ரீல்தான் குறிப்பிட்ட படத்தை அல்லது சீரிஸை பற்றிய சிந்தனைகளை உங்கள் உள்ளத்தில் எழ வைக்கிறது. அதன் விளைவாக அதைப் பார்க்கத் தோன்றி, பார்க்கவும் செய்கிறீர்கள்.” என்று அவர் கூறினார்.

இதே போலத்தான், சமூக ஊடகங்களில் அல்லது ஏதேனும் ஒரு இணையதளத்தில் நீங்கள் பார்க்கும் ஒரு பொருளின் விளம்பரமோ, விமர்சனமோ அதுகுறித்து சிந்திக்க வைத்து, பொருளை வாங்கத் தூண்டுகிறது.
“தனக்குக் கொடுக்கப்படும் தரவுகள் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு முடிவுகளை அதிவிரைவாக எடுக்கிறது. அதன் மூலம் யார், யாரிடம் எதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும், யாரிடம் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அது தீர்மானிக்கிறது.
இன்று ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பார்க்கும் ரீல்ஸ்கள், படங்கள், போகக்கூடிய இடங்கள், வாங்கக்கூடிய பொருட்கள் என்று அனைத்திலுமே ஏஐ செல்வாக்கு செலுத்துகிறது என்றால் மிகையல்ல,” என்று விளக்கினார் ஹரிஹரசுதன்.
பட மூலாதாரம், Getty Images
அன்றாட வாழ்வில் அதிகரித்துள்ள ஏஐ பயன்பாடு
செயற்கை நுண்ணறிவு இனியும் எதிர்கால தொழில்நுட்பம் இல்லை. அது நம் வாழ்வில் ஒரு பகுதியாகிவிட்டதை தொழில்நுட்ப வல்லுநர் ஹரிஹரசுதனின் விளக்கத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
இன்றைய உலகில் கிட்டத்தட்ட அனைவருமே காலையில் எழுந்தவுடன் முதலில் ஸ்மார்ட்ஃபோனை தேடுவோராகவே இருக்கிறோம். அப்படி எடுக்கப்படும் ஸ்மார்ட்ஃபோன் இரவு கண்களை மூடும் வரை நம்மைவிட்டு அகலுவதே இல்லை.
நம் வாழ்வை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்துள்ள இந்தக் கையடக்க கருவி இயங்குவதே ஏஐ உதவியுடன்தான் என்கிறார் ஹரிஹரசுதன்.
“ஸ்மார்ட்ஃபோன்களில் முகம் அல்லது கைரேகை மூலம் போனை ஆன் செய்வதற்கு, கேமரா புகைப்படங்களை மேம்படுத்த, பேட்டரியை மிச்சப்படுத்த, குரல்வழி உதவிகள் ஆகியவற்றைச் செய்ய செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.”
இது மட்டுமின்றி, காலண்டர் என்ற செயலி தானாகவே, முன்பதிவு செய்து வைத்த டிக்கெட் குறித்த அறிவிப்புகளைக் கொடுப்பது ஏஐ உதவியின் மூலமாகத்தான் என்கிறார் அவர்.
இவைபோக, எழுந்தவுடன் தன்னைச் சுற்றி நடப்பனவற்றை, செய்திகளைத் தெரிந்துகொள்வதில் முதல் 15 நிமிடங்கள் முதல் அரை மணிநேரம் வரை மொபைலில் செலவிடுவது பெரும்பாலானோரின் வழக்கம்.
அத்தகைய நேரத்தில், சமூக ஊடகங்களில் ஒருவர் விரும்பக்கூடிய, தேடக்கூடிய செய்திகளே, உள்ளடக்கங்களே பெரும்பாலும் காட்டப்படும். அதற்குக் காரணமும் ஏஐதான் என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் நாம் ஸ்க்ரோல் செய்யும் ஒவ்வொரு முறையும், என்ன பார்க்கிறோம் என்பதைக் கவனித்து, நமது நடத்தைகளைப் பகுப்பாய்ந்து, விளம்பரங்கள், வைரல் உள்ளடக்கங்களை வழங்குகிறது.
“உங்களுக்கு எந்தப் பதிவுகளை காட்ட வேண்டும், எதையெல்லாம் காட்டக்கூடாது என்பதைத் தீர்மானிப்பது ஏஐ தொழில்நுட்பம்தான். அன்றைய நாளில் என்ன செய்வது என்பதையே ஒருவர் இப்படியாகப் பார்க்கும் விஷயங்களில் இருந்து முடிவு எடுக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.”
“அன்றைய தினம் நல்ல வானிலையுடன் காணப்படுகிறது அல்லது அருமையான ஒரு பிரதேசத்தை பார்க்கிறீர்கள், அங்கு செல்ல விரும்புகிறீர்கள். உடனே டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிக்கு செல்கிறீர்கள், உங்களுக்கு வசதியான தேதிகளைப் பார்த்து, சுற்றுலா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள்.”
“இப்போது, அந்த முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டின் தகவல்களைக் குறித்துக்கொள்ளும் காலண்டர் செயலி, அந்த நாள் நெருங்கும்போது அதை உங்களுக்கு நினைவூட்டுகிறது. சுற்றுலா சென்ற இடத்தில் வழிகளைக் கண்டறிய கூகுள் மேப் செயலியைப் பயன்படுத்துகிறீர்கள். அது நிகழ்நேர தகவல்களை ஆராய்வதன் மூலம் மறிக்கப்பட்ட பாதைகள், போக்குவரத்து நெரிசல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு வசதியான பாதையைக் காட்டுகிறது.”
இப்படியாக, மக்களின் அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கு மிதமிஞ்சிக் காணப்படுவதைத் தவிர்க்கவே இயலாது என்கிறார் ஹரிஹரசுதன்.
அவரது கூற்றுப்படி, இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம், சந்தையில் நம்மை ஒரு நுகர்வோராகத் தொடர்ந்து ஈடுபட வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், நமது சுய மேம்பாட்டிற்கும் உதவுகிறது.
பட மூலாதாரம், Getty Images
வாழ்வை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது எப்படி?
நிபுணர்களின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு உதவியாளரைப் போன்றது. அதை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்தே அதன் செயல்பாடும் இருக்கும்.
“நாம் அதை வெறும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அதற்கேற்றவாறான பரிந்துரைகளை மட்டுமே அது வழங்கிக் கொண்டிருக்கும். கல்வி, தொழில் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தினால், அதற்கேற்ற வகையில் ஏஐ உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்” என்கிறார் ஹரிஹரசுதன்.
சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற ஏஐ சாட்போட்களிடம் ஒருவர் தான் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான தினசரி அட்டவணையை வடிவமைத்துக் கொடுக்குமாறு கேட்கலாம், கல்வி சார்ந்த சந்தேகங்களைக் கேட்டு எளிய முறையில் விளக்குமாறு கூறி தெளிவு பெறலாம், தொழில் முன்னேற்றத்திற்குத் தேவையான வழிமுறைகளை கலந்தாலோசிக்கலாம்.
“இவற்றைச் செய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவை நாம் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பயன்படுத்துகிறோம். அதேபோல, கூகுள் மேப்ஸ் நம்முடைய நேரத்தைக் குறைக்க உதவும் வகையில் சாலைகளைப் பகுப்பாய்ந்து வசதியான பாதையை வகுத்துக் காட்டுகிறது.
காலண்டர் செயலி நமது திட்டங்களைக் குறித்து வைத்து, நினைவுபடுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு இப்படியாகப் பல வழிகளில் மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்கு உதவுகிறது.” என்கிறார் ஹரிஹரசுதன்.
பட மூலாதாரம், Getty Images
நாம் கேட்கும் பாடல்களைத் தேர்வு செய்வதில்கூட இன்று ஏஐ பெரும் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அவர்.
“நான் காலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறேன். அந்தச் சூழலுக்கு எனக்குத் தேவையான பாடல்களை ஏஐ தேடித் தருகிறது. எனக்குப் பிடித்த, ஆனால் நானே மறந்துபோன பாடல்கள்கூட அந்தப் பட்டியலில் இருக்கக்கூடும். அது எனக்குப் பெருமகிழ்வைக் கொடுத்து, நாளை நேர்மறையாகத் தொடங்க வித்திடும்” என்று நம் தினசரி வாழ்வில் செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கும் செல்வாக்கை விவரித்தார் ஹரிஹரசுதன்.
அதேபோல, மின்னஞ்சல்கள், செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றில் ஸ்பாம்களை, மோசடி அபாயங்களைக் கண்டறிவதில் ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெருமளவில் பயனளிப்பதாகத் தெரிவித்தார் அவர்.

ஆனால் அதேவேளையில், “ஒருவர் தேவையற்ற உரையாடல்களை ஏஐ சாட்போட்களுடன் மேற்கொள்வது, பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற தேவையற்ற தனிப்பட்ட தரவுகளைப் பகிர்வது ஆகிய செயல்பாடுகள் டிஜிட்டல் உலகில் சிக்கல்களையும் கொண்டு வரக்கூடும்,” என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும் பணியை சிறப்பாகச் செய்வதாகக் குறிப்பிட்ட ஹரிஹரசுதன், “அந்த நேரத்தை நமக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு, ஆரோக்கியமான வழிகளில் மகிழ்வைத் தேடிக்கொள்ள செலவழிக்க வேண்டியதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு என்பது ஏதோ பிரமாண்டமான தொழில்நுட்பம் போல பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போது 2025 இறுதியில், நாம் அறியாமலே அனுதினமும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு