சென்னை: 2025-26-ம் நிதி ஆண்டு தமிழக பட்ஜெட்டுக்கு இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.வி.கார்த்திக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பம்பு மோட்டார் தொழில் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்திக்கான ” உயர்திறன் மையம்” அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
பம்பு உற்பத்தியில் கோவை தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முதல் பம்பு 1926-ம் ஆண்டு கோவையில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில், பம்பு உற்பத்தியின் நூற்றாண்டைப் போற்றும் விதமாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்தொழில் பயணிப்பதற்கான பாதையை பட்ஜெட்டின் இந்த அறிவிப்பு உருவாக்கும். எண்ணெய், சுரங்கம், எரிசக்தி துறைகளில் பயன்படும் பம்புகளை வடிவமைக்க இந்த உயர்திறன் மையம் உதவி செய்யும். இவ்வாறு கார்த்திக் தெரிவித்துள்ளார்.