தங்கம், வெள்ளி ஆகியவை 2025 இறுதியில் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அவற்றின் விலைகள் 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வருடாந்திர ஆதாயங்களைப் பதிவு செய்தன.
தங்கத்தின் விலை 2025ஆம் ஆண்டில் மிக வேகமாக உயர்ந்து 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது. ஒரு அவுன்ஸ், அதாவது 28.35 கிராம் தங்கம், 4,549 டாலருக்கும் மேல் உயர்ந்து சாதனை உச்சத்தை எட்டியது. கிறிஸ்துமஸுக்கு பிறகு, விலை சற்றே குறைந்தது, புத்தாண்டு தினத்தன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,330 டாலராக இருந்தது.
அதே நேரத்தில், வெள்ளி கடந்த திங்கள் கிழமையன்று 83.62 டாலராக, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை மீண்டும் குறைந்து, சுமார் 71 டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
தங்கம், வெள்ளியின் விலை 2025இல் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தது உள்படப் பல காரணங்களால் உயர்ந்தன. இருப்பினும், விலைகள் மிக வேகமாக உயர்ந்திருப்பதால், அவை இந்த ஆண்டில் சரியக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“பல பொருளாதார, முதலீட்டு, புவிசார் அரசியல் காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறிப்பிடத்தக்க உயர்வைச் சந்தித்து வருகின்றன” என்று எக்ஸ்எஸ்.காம் வர்த்தக தளத்தைச் சேர்ந்த ரானியா குலே கூறினார்.
விலை உயர்வுகளுக்கு முக்கியக் காரணம், 2026ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளே என்று அவர் மேலும் கூறினார்.
உலகளாவிய பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை குறித்த கவலைகள் காரணமாக, மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது மற்றும் முதலீட்டாளர்கள் “பாதுகாப்பான” சொத்துகளை வாங்குவது போன்றவையும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை உயர்த்தின.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
ஏஜே பெல் முதலீட்டுத் தளத்தின் சந்தைப் பிரிவுத் தலைவர் டான் கோட்ஸ்வொர்த், பணவீக்கம் குறித்த கவலைகள் மற்றும் நிலையற்ற பங்குச் சந்தைகள் காரணமாக முதலீட்டாளர்கள் “விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்வதே” தங்கம், வெள்ளியின் விலை உயர்வுக்குக் காரணம் என்று தெரிவித்தார்.
“நாம் 2026ஆம் ஆண்டுக்குள் நுழையும்போது சந்தைச் சூழல் மாறாமல் இருப்பதாகத் தெரிகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பல கவலைகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியைத் தொடர்ந்து வாங்குவார்கள் என்று கோட்ஸ்வொர்த் கூறினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள அதிக அரசாங்கக் கடன், டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி ஒரு நிதிக்குமிழாக வெடிக்கக்கூடும் என்பன போன்ற அச்சங்கள் இந்தக் கவலைகளில் அடங்கும். இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியைப் பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வுகளாகக் கருதுகின்றனர்.
ஆனால், 2025இல் இவற்றில் ஏற்பட்ட திடீர் விலை உயர்வுகள், 2026இல் ஒரு கூர்மையான விலை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதுகுறித்துப் பேசிய அவர், “நிதி சந்தைகள் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டால், தங்கள் முதலீடுகளைப் பணமாக மாற்ற விரும்பும் முதலீட்டாளர்கள், கடந்த ஓர் ஆண்டில் வலுவான லாபத்தை ஈட்டிய சொத்துகள் அல்லது எளிதில் விற்கக்கூடிய சொத்துகளை முதலில் நாடக்கூடும். தங்கம் இந்த இரண்டு அம்சங்களுக்கும் பொருந்துகிறது,” என்று தெரிவித்தார்.
தங்கத்தின் விலை 2026இல் தொடர்ந்து உயரும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் குலே. ஆனால், “2025இல் காணப்பட்ட சாதனை உச்சங்களுடன் ஒப்பிடும்போது இந்த விலை உயர்வு நிலையான வேகத்தில் சீராக இருக்கும்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
மேலும், 2025ஆம் ஆண்டு, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் நூற்றுக்கணக்கான டன் தங்கத்தைச் சேர்த்துள்ளதாக உலக தங்க கவுன்சில் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்கை லிங்க்ஸ் கேபிடல் குரூப் என்ற முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் டேனியல் தக்கியெடின், வெள்ளியின் விலை உயர்வுக்கு “விநியோக பற்றாக்குறை, தொழில்துறை தேவை” ஆகியவை காரணமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
உலகின் இரண்டாவது பெரிய வெள்ளி உற்பத்தியாளரான சீனா, அந்த உலோகத்தின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது.
அக்டோபர் மாதம், சீனாவின் வர்த்தக அமைச்சகம், “வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை வலுப்படுத்தும்” நோக்கில், வெள்ளி, டங்ஸ்டன், ஆண்டிமனி ஆகிய உலோகங்களின் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
வெள்ளி ஏற்றுமதி மீதான சீன அரசின் கட்டுப்பாடுகள் குறித்த சமூக ஊடக பதிவு ஒன்றுக்கு பதிலளித்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க், “இது நல்லதல்ல. பல தொழில்துறை செயல்முறைகளுக்கு வெள்ளி தேவைப்படுகிறது” என்று கூறினார்.
பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் போன்ற முதலீடுகள் மூலமாக விலைமதிப்பு மிக்க உலோகங்கள் சந்தையில் பெருமளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் டேனியல் தக்கியெடின் சுட்டிக்காட்டினார்.
பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) என்பவை ஒரு பங்குச் சந்தையில் ஒற்றைப் பங்கைப் போல வர்த்தகம் செய்யப்படும் முதலீடுகளின் தொகுப்புகளாகும். முதலீட்டாளர்கள் உண்மையான உலோகக் கட்டிகளைத் தங்கள் வசம் வைத்திருக்கத் தேவையில்லை என்பதால், விலைமதிப்பு மிக்க உலோகங்களை வர்த்தகம் செய்வதற்கு இதுவொரு வசதியான வழியாகக் கருதப்படுகிறது.
வெள்ளியின் விலை 2026இல் மீண்டும் உயரவும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் தக்கியெடின். ஆனால், “விலை உயர்வுகளுக்குப் பிறகு கடுமையான சரிவுகளும் ஏற்படக்கூடும்” என்றும் அவர் எச்சரித்தார்.