0
2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீத எதிர்வுகூறலை 3.5 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாகக் குறைத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் தொடரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தக் குறைப்பானது இலங்கை தளர்வான நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கவில்லை எனவும், மாறாக ஒரு அசாத்தியமான மீட்சியைத் தொடர்ந்து பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பதையே பிரதிபலிக்கின்றது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிளிங் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று 2022 – 2023 வரையான காலப்பகுதியில் கடன்களை மீளச்செலுத்துவதில் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக இலங்கை பொருளாதார மந்தநிலைக்கு முகங்கொடுத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களின் மூலம் மீண்டும் மீட்சியடைந்த பொருளாதாரம் கடந்த ஆண்டு 5 சதவீத வளர்ச்சியையும், இவ்வருடத்தில் முதல் அரையாண்டில் 4.8 சதவீத வளர்ச்சியையும் பதிவுசெய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘அம்மீட்சியின் கூறுகளில் சில தற்காலிகமானவை என்பதுடன் அவை நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதையே பிரதிபலிக்கின்றன. அதன்படி இப்போது இலங்கையின் பொருளாதாரம் அதன் வழமையான 3.1 சதவீத வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதை காணமுடிகின்றது. அதுமாத்திரமன்றி எதிர்பார்க்கப்பட்டதை விடவும் சற்று விரைவாக இந்த மாற்றம் நிகழ்கின்றது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமையை நினைவுகூர்ந்துள்ள அவர், இது சர்வதேச நாணய நிதியம் திருப்தியடைந்துள்ளமையையே காண்பிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் மின்கட்டண மறுசீரமைப்பைப் பாராட்டியுள்ள தோமஸ் ஹெல்பிளிங், இவ்விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் அரசாங்கத்தினால் தொடர்ந்து எட்டப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
