• Thu. Nov 27th, 2025

24×7 Live News

Apdin News

2026ல் 31,000 புதிய பட்டதாரி நியமனங்கள் | பிரதமர் ஹரிணி அமரசூரிய

Byadmin

Nov 27, 2025


நாட்டின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டு 3.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவையின்  3 (1), (அ) ஆம்  தரத்துக்கு 25000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு  கிடைத்தவுடன், விரைவாக நியமனங்கள் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டு 31 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளையின் 27/2 இன் கீழ் நாட்டின் வேலையின்மை பிரச்சினை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் மொத்த சனத்தொகையில் 3,65,951 பேர் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு 4.4 சதவீதமாக காணப்பட்ட  வேலையின்மை வீதம் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 3.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதியின் அடிப்படையில் எடுத்துக் கொண்டால் சாதாரண தர பரீட்சைக்கு  கீழான கல்வி  அறிவுடைய 303038  பேர்,சாதாரண தரம் சித்தியடைந்த 91,405 பேர், உயர்தர பரீட்சை சித்தியடைந்த 128,989 பேர், பட்டதாரிகள் மற்றும் அதற்கு மேலான கல்வி தகைமையை கொண்ட 42254 பேரும் வேலையில்லாமல் உள்ளார்கள்.

35000-45000 பட்டதாரிகளை தகுதிகளின் அடிப்படையில் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 12,300 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவையின்  3 ,(1) (.அ)  ஆம் தரத்துக்கு 25000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு  கிடைத்தவுடன், விரைவாக நியமனங்கள் வழங்கப்படும்.2026 ஆம் ஆண்டு 31 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

By admin