1
கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான ‘ட்ரையோண்டா’ (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள்
அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
1. பெயரின் பின்னணி:
‘ட்ரையோண்டா’ என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் “மூன்று அலைகள்”(Three Waves) என்று பொருள்படும்.’ட்ரை’ (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், ‘ஓண்டா’ (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது.
2. வடிவமைப்பு மற்றும் நிறங்கள்:
பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்கள் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் வர்ண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன.
மேலும், கனடாவின் மேப்பிள் இலை, மெக்சிகோவின் கழுகு, அமெரிக்காவின் நட்சத்திரம் போன்ற ஒவ்வொரு நாட்டின் சின்னங்களும் வடிவமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத்தின் வெற்றிக் கிண்ணத்தைக் குறிக்கும் வகையில் தங்க நிற அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன.
3. முன்னோடித் தொழில்நுட்பம் (Connected Ball Technology):
ட்ரையோண்டா பந்தின் உள்ளே அதிநவீன 500Hz மோஷன் சென்சார் சிப் (Motion Sensor Chip) பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சிப் பந்தின் அசைவுகள் குறித்த துல்லியமான தகவல்களை வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு நிகழ்நேரத்தில் அனுப்பும். இதன் மூலம் ஓப்சைட் மற்றும் பந்து கையால் அடிக்கப்பட்டதா போன்ற முடிவுகளை நடுவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க முடியும்.
4. மேம்படுத்தப்பட்ட செயல்பாடு:
இந்தப் பந்து நான்கு பேனல் (Four-panel) வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பந்து காற்றில் செல்லும்போது நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆழமான தையல் கோடுகளைக் (deep seams) கொண்டுள்ளது.ஈரமான அல்லது பனிமூட்டம் நிறைந்த சூழலில் பந்தை உதைக்கும்போது பிடியை (Grip) அதிகரிக்க, அதன் மேற்பரப்பில் நுண்ணிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த வெளியீட்டின் போது, “2026 உலகக்கிண்ணத்தின் அதிகாரப்பூர்வ பந்து இங்கே உள்ளது, அது ஒரு அழகு! இந்தப் பந்தின் வடிவமைப்பு போட்டியை நடத்தும் நாடுகளின் ஒற்றுமையையும் ஆர்வத்தையும் உள்ளடக்கியது” என்று பெருமிதமாக தெரிவித்தார்.
48 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது