2026 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
2011-ல் காங்கிரஸில் இருந்து விலகிய ரங்கசாமி, என்ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். தற்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியின் தலைமையாக உள்ள இக்கட்சியின் 15-வது ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய என்.ரங்கசாமி, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமி படத்துக்கு மலர்கள் தூவி பூஜை செய்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: கடந்த ஆட்சியாளர்கள் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து, புதுச்சேரியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்றி வருகிறோம். உட்கட்டமைப்பில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 11 தொகுதிகளில் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் தேர்வு செய்யப்படுவர். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.
தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கால்பதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. காமராஜரின் கொள்கையைக் கொண்ட ஆட்சியை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனற். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும். காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.