• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

“2026 தேர்தலில் திமுக அரசு ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ சென்றுவிடும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு | DMK govt will go ‘out of control’ in 2026 elections – Nainar Nagendran

Byadmin

Apr 19, 2025


கோவை: “வரும் 2026 தேர்தலில் திமுக அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு சென்று விடும்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ கோவையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பேசினார்.

பாஜக கோவை பெருங்கோட்டம் சார்பில், நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் இன்று (ஏப்.19) மாலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பேசியது: “வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியை விட்டு இறைவன் வீட்டுக்கு அனுப்பப் போகிறான். கூட்டணியைப் பற்றியும், எத்தனை சீட் என்பதை பற்றியும் நமது தோழர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அது குறித்து ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட வேண்டாம். அதைப் பற்றி அகில இந்திய தலைமை முடிவு செய்து கொள்ளும்.

தமிழகத்தில் திமுகவிடம் இருந்து பாஜக தொண்டர்களை பாதுகாப்பது என் வேலை. சீட் எவ்வளவு, தொகுதி உள்ளிட்டவை குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷா முடிவு செய்து கொள்வார். நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது போனை திமுக அரசு ஒட்டுக் கேட்டு கண்காணிக்கிறது. நமது ஆட்கள் செல்போனை எச்சரிக்கையாக பேச வேண்டும்.

மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்து ஒரே நாளில் கட்சி தேர்தலை நடத்தி, கூட்டணியை பேசி முடித்துச் செல்கிறார் என்றால், அது சாதாரண விஷயமா? மாதம் இருமுறை வருகிறேன் என கூறியுள்ளார். அனைத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார். நமக்கு உள்ள வேலை என்னவென்றால், பூத் கமிட்டி பட்டியல் முன்னரே கொடுத்துவிட்டோம். அதில் எத்தனை பேர் சரியாக உள்ளனர், அதில் வராதவர்களுக்கு யாரைப் போடலாம் என பார்க்க வேண்டும்.

மண்டல தலைவர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி அமைப்பாளர்கள் ஆகியோர் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், பூத் கமிட்டியை சரி செய்ய வேண்டும். பூத் கமிட்டியை சரி செய்தாலே, நம்மை வெல்வதற்கு யாராலும் முடியாது. இரட்டை இலையோடு, அதிகப்படியான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் செல்ல வேண்டும்.

இன்று மக்கள் விரோத ஆட்சி, மக்களுக்கு எதிரான ஆட்சி, ஆட்சிக்கு எதிரான போக்கு இன்று வந்து விட்டது. அதனால் தான் முதல்வர் அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு சென்று விட்டார். தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோலில் உள்ளது எனக் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை, 2026 தேர்தலில் திமுக அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு சென்றுவிடும்.

முன்னாள் மாநில தலைவர்கள் கட்சியை வலுப்படுத்தினர். சிபிஆர் ரத யாத்திரை நடத்தினார். பொன்.ராதாகிருஷ்ணன் தாமரை சங்கமம் மாநாட்டை நடத்தினார். எல்.முருகன் வேல் யாத்திரை நடத்தினார். அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடத்தி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இவ்வளவு கட்டமைப்பை உருவாக்கி கொடுத்த தலைவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது, இரட்டை இலையோடு அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்களை நாம் உருவாக்குவதற்கு அதிமுக தொண்டர்கள், தலைவர்களோடு ஒன்றாக பயணிக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும்கட்சியாக வர வேண்டும். நம் சனாதன தர்மத்தையும், வேத மந்திரங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். இனி ஒருமுறை திமுக ஆட்சிக்கு வந்தால் நம்மை நாமே பாதுகாக்க முடியாத சூழல் உருவாகிவிடும். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இன்று முதல் சபதம் எடுத்து நமது பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும்,” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணை தலைவர் கனகசபாபதி, மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் மற்றும் கோவை பெருங்கோட்டத்துக்குட்பட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



By admin